×

குடிநீருக்காக ஆற்றில் ஊற்று நீரை சேகரிக்கும் பெண்கள் : 2 குடத்திற்காக நாள் முழுவதும் காத்திருப்பு

திருச்சுழி: திருச்சுழி அருகே, தண்ணீர் தட்டுப்பாட்டால் கிராம மக்கள் குண்டாற்றுப் படுகையில், 10 அடி ஆழத்துக்கு ஊற்று தோண்டி குடிநீர் சேகரிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. 2 குடம் குடிநீருக்காக நாள் முழுவதும் காத்திருக்கின்றனர். விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே, நரிக்குடி ஒன்றியம், குண்டாற்றுப் படுகையில் முத்துராமலிங்கபுரம் புதூர் கிராமம் உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். 15 ஆண்டுகளுக்கு முன்பு, குண்டாற்றில் தண்ணீர் வற்றாமல் ஓடிய காலங்களில், அந்த தண்ணீரை கிராம மக்கள் குடிநீராக பயன்படுத்தி வந்தனர்.

பின்னர் போதிய மழையில்லாமல், குண்டாறு வறண்டு போகத் தொடங்கியது. 10 ஆண்டுக்கு முன்புவரை ஆற்றில் இரண்டு அடுக்கு குழி தோண்டி குடிநீர் சேகரித்து வந்தனர். ஆனால், தற்போது பத்து அடிக்கு மேல் ஊற்று தோண்டினால்தான் சிறிதளவு தண்ணீர் கிடைக்கிறது. இந்த நீரை ஊறவிட்டு, அதனை அகப்பை மூலம், குடங்களில் சேகரிக்கின்றனர். குடிநீர் பற்றாக்குறையால் பலர் ஊரைவிட்டு காலி செய்து, வேறு ஊருக்கு சென்றுவிட்டனர். கிராமத்தில் குடிநீர் பிரச்னை பெரும் பிரச்னையாக உள்ளது. நீர்தேக்க தொட்டியில் இருந்து வரும் தண்ணீர், உப்பாக இருப்பதால் குளிக்கவோ, குடிக்கவோ முடியவில்லை.

கிராமத்தில் இருந்து அரை கி.மீ. தூரமுள்ள ஆற்றுக்கு சென்று, அங்கு 10 அடி ஆழத்துக்கு குழி தோண்டி குடிநீர் சேகரிக்கிறோம். குடங்களை வரிசையில் வைத்து 3 நாட்களுக்கு ஒருமுறை, சுழற்சி முறையில் ஒரு குடும்பத்திற்கு 2 குடம் குடிநீர் சேகரிக்கிறோம். ஒரு குடம் நிரம்ப அரை மணி நேரம் ஆகிறது. பள்ளிக்கு சென்று வந்தவுடன், குடிநீர் சேகரிக்க அனுப்புகின்றனர். இதனால், விளையாடுவது அரிதாகி விட்டது. காரியாபட்டி  திருச்சுழி பகுதிகளில் மழை பெய்தால் குண்டாற்றில் மழை நீர் வரும். ஆற்றில் மணலை அள்ளுவதால், ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், மழை பெய்தாலும் ஆற்றில் தண்ணீர் வருவதில்லை. எங்கள் கிராமத்தின் குடிநீர் பிரச்னையை தீர்க்க மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Women ,springs ,river , Tiruchuzhi, water, women
× RELATED பெண் கைதிகள் சென்ற வேனில் தீ