×

கஜா புயல் பாதிப்பால் முட்டையிட வராத ஆலிவர் ரெட்லி ஆமைகள்: இயற்கை ஆர்வலர்கள் வேதனை

வேதாரண்யம்: நாகை மாவட்டம்  வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரை, மணியன்தீவு, புஷ்பவனம், ஆறுகாட்டுத்துறை ஆகிய  பகுதிகளுக்கு டிசம்பர் முதல் மார்ச் வரை பசிபிக் பெருங்கடலில் வசிக்கும்  ஆலிவர் ரெட்லி ஆமைகள் வந்து முட்டையிட்டு செல்வது வழக்கம். முட்டையை  வனத்துறையினர் எடுத்து பாதுகாத்து கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறையில் உள்ள ஆமை  குஞ்சு பொறிப்பகத்தில் வைத்து 50 நாட்களுக்கு பின் குஞ்சு வெளிவந்த பிறகு  அதனை கடலில் விடுகின்றனர். இந்த ஆண்டு இதுவரை முட்டையிடுவதற்கு ஆமைகள்  இன்னும் வரவில்லை. இதற்கு காரணம் கஜா புயலின் தாக்கம் என இயற்கை ஆர்வலர்கள்  கூறுகின்றனர். கோடியக்கரை கடற்பகுதியில் 1982ம் ஆண்டு முதல் சென்ற  ஆண்டு வரை சுமார் 2 லட்சம் ஆமை முட்டைகள்  சேகரிக்கப்பட்டு குஞ்சு  பொறித்த பின்பு கடலில்  விடப்பட்டுள்ளது.  தாய் ஆமை எந்த கடற்கரையில் வந்து  முட்டையிட்டு செல்கிறதோ அதே கடற்கரைக்கு 20 ஆண்டுகள் வளர்ச்சி அடைந்த பின்  இங்கு விடப்பட்ட ஆமைகள் மீண்டும் முட்டையிட வருகின்றன.  அவ்வாறு வரும்  ஆமைகள் கடலில் ஏற்படும் பல்வேறு இயற்கை மாற்றங்களாலும், பெரிய கப்பல், விசை  படகு ஆகியவற்றில் அடிபடுவதினாலும் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான ஆமைகள் இறந்து  கரை ஒதுங்குகின்றன.

 இந்த ஆண்டு கஜா புயலின் தாக்கத்தால் புஷ்பவனம்  கடற்கரை பகுதியில் கால்சியம் மிகுந்த சேறு கரை ஒதுங்கி உள்ளதால் ஆமைகள்  முட்டையிடுவதற்கு அப்பகுதிக்கு வரவில்லை. மேலும் கோடியக்கரை முதல் வெள்ளப்பள்ளம் வரை நாள்தோறும் ஆங்காங்கே முட்டையிட வரும் ஆமைகள் இறந்து கரை  ஒதுங்கிய நிலையிலேயே உள்ளன. வழக்கமாக அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி  மாதம் வரை இப்பகுதியில் சுமார் 3 ஆயிரம் ஆமை முட்டைகளை வனத்துறையினர்  சேகரித்து ஆமை குஞ்சு பொறிப்பகத்தில் வைப்பார்கள்.  ஆனால் இந்த ஆண்டு ஒரே  ஒரு முட்டை கூட வனத்துறையினர் சேகரிக்கவில்லை. இந்நிலை தொடர்ந்தால்  அழிந்து வரும்  இனமான ஆலிவர் ரெட்லி ஆமை இனத்தை பாதுகாப்பது கேள்விக்குறி ஆகிவிடும் என்று இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Oliver Redley Turtles: Natural Activists Torture , Gajah storm, turtles, natural activists, pain
× RELATED மக்களின் தாகம் தீர்க்கும் நீர், மோர்...