×

ஆட்டோமொபைல்: புதிய ஹோண்டா சிபி300ஆர் பைக்

கடந்த 2017ம் ஆண்டு டோக்கியோ ஆட்டோ எக்ஸ்போவில் நியோ ஸ்போர்ட்ஸ் கபே என்ற பைக் கான்செப்ட் மாடலை ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனம் அறிமுகம் செய்தது. பழமையான டிசைன் தாத்பரியங்களுடன் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த அந்த பைக், பலரது கவனத்தையும் ஈர்த்தது. இந்த பைக்கில் 998சிசி 4 சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டு இருந்தது.  இந்நிலையில், ஹோண்டா நியூ ஸ்போர்ட்ஸ் கபே கான்செப்ட்டின் டிசைன் தாத்பரியங்களுடன் உருவாக்கப்பட்ட சிபி300ஆர் என்ற புத்தம் புதிய பைக் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது ஹோண்டா நிறுவனம். மேலும், இப்புதிய பைக் மாடலுக்கு நாடு முழுவதும் உள்ள குறிப்பிட்ட ஹோண்டா மோட்டார்சைக்கிள் டீலர்களிடம் முன்பதிவு துவக்கப்பட்டுள்ளது.

5,000 முன்பணத்துடன் இந்த பைக்கிற்கு முன்பதிவு ஏற்கப்படுகிறது. இந்த பைக்கில் எல்இடி விளக்குகள் கொண்ட வட்ட வடிவிலான ஹெட்லைட் பொருத்தப்பட்டு இருக்கிறது. எல்இடி இன்டிகேட்டர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. குதிரை குளம்பு வடிவிலான கெய்டு லைட்டுகளும் ஹெட்லைட்டில் கொடுக்கப்பட்டுள்ளன.  இந்த பைக்கில், சிங்கிள் சிலிண்டர் கொண்ட 286சிசி லிக்யூடு கூல்டு இன்ஜின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த இன்ஜின் 31 பிஎஸ் பவரையும், 27.5 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பைக், டியூபியூலர் மற்றும் அழுத்தப்பட்ட ஸ்டீல் பிரேமில் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கில் 41 மிமீ இன்வர்டெட் போர்க்குகள் கொண்ட முன்புற சஸ்பென்ஷனும், பின்புறத்தில் 7 ஸ்டெப் அட்ஜெஸ்ட் வசதியுடன்கூடிய மோனோ ஷாக் அப்சார்பர் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த பைக்கின் இரண்டு சக்கரங்களிலும் ஒற்றை டிஸ்க் பிரேக்கும், டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டமும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும், பைக்கின் நிலைத்தன்மை குறித்து அளவிட்டு கூறும் ஐஎம்யூ சாதனம் மற்றும் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. இந்த பைக்கின், முக்கிய உதிரிபாகங்கள் தருவிக்கப்பட்டு, இந்தியாவில் அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்பட இருக்கிறது. கேடிஎம் 390 டியூக், பஜாஜ் டோமினார் 400 உள்ளிட்ட மாடல்களுடன் போட்டி போடும். இந்த பைக், மேட் ஆக்சிஸ் கிரே  மெட்டாலிக் மற்றும் கேண்டி க்ரோமோஸ்பியர் ரெட் என்ற இரண்டு வண்ணங்களில்  கிடைக்கிறது. 2.50 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு  எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி சியாஸ் காரில் புதிய இன்ஜின்
மாருதி கார்களில் தற்போது 1.3 லிட்டர் டீசல் இன்ஜின்தான் மிக நீண்டகாலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த டீசல் இன்ஜின் பியட் நிறுவனத்திடமிருந்து சப்ளை பெறப்படுகிறது. இந்திய வாடிக்கையாளர் மத்தியில் இந்த 1.3 லிட்டர் டீசல் இன்ஜின் மிகவும் நம்பகமானதாக கருதப்படுகிறது. மாருதி எர்டிகா, சியாஸ், விட்டாரா பிரெஸ்ஸா உள்ளிட்ட கார்களிலும் இந்த இன்ஜின் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வகை கார்களுக்கு, இந்த இன்ஜின் போதிய திறன் கொண்டதாக இல்லை என்ற கருத்து நிலவி வருகிறது. மேலும், பிஎஸ்-6 மாசு உமிழ்வு திறனுக்கு ஏற்றதாக மேம்படுத்தப்பட வேண்டி இருக்கிறது.

இந்த குறையை போக்கும் விதத்தில், புத்தம் புதிய 1.5 லிட்டர் டீசல் இன்ஜினை மாருதி நிறுவனம் உருவாக்கி இருக்கிறது. இந்த இன்ஜின் தற்போது உற்பத்திக்கு தகுதியான நிலையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இன்ஜின் முதலாவதாக சியாஸ் காரில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அடுத்த மாதம் இந்த மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து, மாருதி எர்டிகா காரிலும், விட்டாரா பிரெஸ்ஸா உள்ளிட்ட இதர கார் மாடல்களிலும் அறிமுகம் செய்யப்படும். இப்புதிய 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 94 பிஎச்பி பவரையும், 225 என்.எம் டார்க் திறனையும் வழங்கும் திறன் கொண்டது. இந்த இன்ஜின் லிட்டருக்கு 26.82 கி.மீ மைலேஜ் வழங்கும் என மாருதி அறிவித்துள்ளது. மேலும், இந்த இன்ஜின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாகவும் குறிப்பிடப்படுகிறது.

எனவே, அனைத்து விதத்திலும் இந்த இன்ஜின் வாடிக்கையாளர்களை வெகுவாக ஈர்க்கும் அம்சங்களை பெற்றிருக்கிறது. மாருதியின் புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் விரைவில் அறிமுகமாகிறது மேலும், புதிய எஞ்சினுடன் கார்களின் விலை 1.50 லட்சம் வரை கூடுதலாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தலாம்.  தற்போது விற்பனையில் உள்ள 1.3 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷனும் அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை மாருதி கார்களில் தொடர்ந்து வழங்கப்படும்.

இந்த இன்ஜின் 89 பிஎச் பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த இன்ஜின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மாருதி நிறுவனத்தின் புதிய சியாஸ் மற்றும் எர்டிகா கார்களில் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, தற்போது புதிய 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷனும் அறிமுகம் செய்யப்படுகிறது.

2019 மாருதி சுஸுகி பலேனோ காருக்கு முன்பதிவு துவக்கம்
கடந்த 2015ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட மாருதி பலேனோ கார் பிரிமீயம் ஹேட்ச்பேக் ரகத்தில் முதன்மையான தேர்வாக இருந்து வருகிறது. இந்நிலையில், வாடிக்கையாளர்களுக்கு சலிப்பு ஏற்படுவதை தவிர்க்கும் விதத்திலும், சந்தைப்போட்டியை சமாளிக்கும் விதத்திலும் இந்த காருக்கு புதுப்பொலிவு கொடுக்கப்பட்டுள்ளது. வெளிப்புறத்தில் சிறிய டிசைன் மாறுதல்கள் மற்றும் கூடுதல் அம்சங்களுடன் மாருதி பலேனோ கார் வர இருக்கிறது. புதுப்பொலிவு கொடுக்கப்பட்ட மாருதி பலேனோ காருக்கு டீலர்களிடம் முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. 11,000 முன்பணத்துடன் டீலர்களிடம் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது.  இப்புதிய காரின் முகப்பில் முக்கிய மாற்றங்களாக புதிய கிரில் அமைப்பும், பம்பரும் இடம்பெற்றுள்ளது. டெயில் லைட் கிளஸ்டரிலும் மாற்றங்கள் இருக்கும் என  உறுதியாக நம்பப்படுகிறது.

இந்த காரில் ஆட்டோமேட்டிக் ஹெட்லைட், வைப்பர், எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட், குரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், எல்இடி பனி விளக்கு உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றிருக்கும். உயர்தர பேப்ரிக் இருக்கை, புதிய இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், மர அலங்கார தகடுகளுடன்கூடிய பிரிமீயம் டேஷ்போர்டு அமைப்பு உள்ளிட்டவையும் இந்த காரின் மதிப்பை உயர்த்தும் விஷயங்களாக உள்ளது. இந்த காரின் இன்ஜின் ஆப்ஷன்களில் மாற்றம் இல்லை. தற்போது பயன்படுத்தப்படும் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் தக்கவைக்கப்படும். 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 83 பிஎச்சபி பவரையும், 115 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

டீசல் மாடலில் இருக்கும் 1.3 லிட்டர் இன்ஜின் அதிகபட்சமாக 74 பிஎச்பி பவரையும், 190 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். பெட்ரோல் மாடல் மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களிலும், டீசல் மாடல் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கும்.
மாருதி பலேனோ ஆர்எஸ் மாடலும் புதுப்பொலிவுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சக்திவாய்ந்த பெர்பார்மென்ஸ் மாடலில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினுடன் கிடைக்கும். ஹூண்டாய் எலைட் ஐ20, ஹோண்டா ஜாஸ் கார் மாடல்களுடன் போட்டி போடும். வரும் பிப்ரவரி மாதம் முதல் டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விலை விவரம் அறிவிக்கப்படவில்லை.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Honda , Automobile, the new Honda CB300R bike
× RELATED ராயபுரம் பகுதியில் உரிய ஆவணமில்லாத 60...