×

பருவமழை பொய்த்தது: நெல் வரத்து குறைந்தது அரிசி விலை அதிகரிக்கும் அபாயம்

சென்னை: பருவமழை பொய்த்ததால் நெல்வரத்து குறைந்துள்ள நிலையில், அதன் விலை மட்டும் அதிகரித்து உள்ளது. அரிசி விலையும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது.  சென்னைக்கான ஆந்திர நெல் வரத்து, கடந்த செப்டம்பர் மாத இறுதியில் இருந்து, மெல்ல குறைந்தது. இதனால் செங்குன்றம் போன்ற பகுதிகளில் இயங்கி வந்த பல நூறு அரிசி ஆலைகள் நின்றுபோய் பல மாதங்களாகின்றன. இதன் விளைவு, அரிசி விலை தாறுமாறாக உயர ஆரம்பித்துள்ளது.  இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘இந்த ஆண்டு குறுவை நெல் சாகுபடியும் தள்ளிப் போய்விட்டது. பல ஆயிரம் ஏக்கர் விளைச்சல் நிலங்கள் வேறு பயன்பாட்டுக்குப் போய்விட்டன. தண்ணீர்ப் பிரச்னையில் சிக்கிக் கொண்ட காவிரி பகுதி விவசாயிகள் வேறு பயிர்களுக்கு மாறிவிட்டனர். அடுத்த மூன்று மாதங்களில் குறுவை நெல் வந்தால்கூட விலை குறையுமா என்று தெரியவில்லை’’ என்றனர்.

75 கிலோ பொன்னி அரிசி மூட்டைக்கு 3,600 முதல் 3,800  உயர்ந்துள்ளது. ரகத்தைப் பொறுத்து. போன மாதத்தைவிட இந்த மாதம் மூட்டைக்கு 200 முதல் 300 வரை உயர்ந்துவிட்டது. 25 கிலோ கொண்ட சிப்பம் எனப்படும் சிறிய மூட்டையின் விலை, நுகர்வோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.  பாபட்லா பொன்னி (25 கிலோ மூட்டை) 1,200 முதல் 1,250 வரை உயர்ந்துள்ளது. இதுவும் கூட, சில்லரை விற்பனை கடைகளில், 50 முதல், 70 வரை விலை கூடிவிடும். இதனால், அந்த கடைகளில், ஒரு கிலோ அரிசி, 50 முதல் 55 வரை விற்பனையாகிறது என்றனர்..

சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘’கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் வரை, தமிழகத்தின் மாவட்ட பகுதி மக்கள் மட்டுமே வாழ்வாதாரத்தின் வேலை வாய்ப்பிற்காக ஆங்காங்கே இடம் பெயர்ந்தனர்.அனைத்து பகுதிகளிலும் வடமாநில தொழிலாளர்கள் நிறைந்து உள்ளனர். அவர்கள் அனைவருமே சப்பாத்தி போன்ற தங்கள் பகுதி உணவு பழக்கத்தில் இருந்து மாறி, அரிசி உணவை விரும்பி சாப்பிடுகின்றனர். இதனால் அரிசியின் தேவை வழக்கத்திற்கு மாறாக அதிகரித்துள்ளது.  பருவ மழை ஏமாற்றம், பல மணி நேர மின் தடை, விவசாய பாதிப்பு, வெளிநாடுகளுக்கான அரிசி ஏற்றுமதியால், நெல், அரிசி விலை ஏற்றம் என்பது கட்டுப்படுத்த முடியாத நிலையில் உயர்ந்துள்ளது’’ என்றனர்.

மாவு வகைகளின் விலையும் ‘’கிடு கிடு’’வறட்சி காரணமாக நெல்லுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இட்லி அரிசி, பச்சரிசி விலை, தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  பச்சரிசி தற்போது கிலோ, ₹35 முதல் 45 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல்,  தயார் செய்த இட்லி, தோசை மாவு தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் இட்லி அரிசி விலையிலும் கடும் உயர்வு ஏற்பட்டுள்ளது . தற்போதைய நிலவரப்படி, இட்லி கார் அரிசி கிலோ ₹32 முதல், 40 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால், தயார் செய்த  இட்லி மாவு, கிலோ ₹30 முதல் 40 வரை விற்பனை செய்யப்படுகிறது. இட்லி மாவு விலையை தொடர்ந்து புட்டு மாவு, இடியாப்ப மாவு ஆகியவற்றின் விலையிலும் உயர்வு ஏற்பட்டுள்ளது என்றனர்.

வீட்டுமனைகளாக மாறிய விளைநிலங்கள்
சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், பெரும்புதூர், சுங்குவார்சத்திரம், பாலுச்செட்டிசத்திரம், ஓச்சேரி வரை இப்போது சென்னை என்றாகிவிட்டது. இந்தப் பகுதிகளில் நெடுஞ்சாலைகளை ஒட்டியிருந்த வயல்கள், ஆழம்குறைந்த ஏரிகள் அனைத்தும் வீடுகள், தொழிற்சாலைகளாகிவிட்டன. 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை தாம்பரம், காஞ்சிபுரம் சாலையில் இரண்டு பக்கமும் நீர் நிலைகளும், நெல் வயல்களும் வாழைத் தோப்புகளுமாக இருந்தது. ஆனால் இன்று கல்லூரிகள், தொழிற்சாலைகள், அடுக்குமாடி வீடுகள், என எங்கும் கட்டடங்கள் உள்ளன. திருவள்ளூர் பக்கம் நிலைமை ரொம்ப மோசம். முன்பெல்லாம் அம்பத்தூர்தான் ரொம்ப நெரிசலான பகுதியாக இருந்தது.

இப்போதோ பட்டாபிராம், திருநின்றவூர், திருவள்ளூர், கடம்பத்தூர் என எல்லா பகுதிகளுமே நெரிசலாகிவிட்டது. இவ்வாறு, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலுமே வயல்கள் வேக வேகமாக வீட்டுமனைகளாக மாறிவருகின்றன. விவசாயம் லாபகரமான தொழிலாக இல்லாமல் போனதும், கஷ்டப்பட்டு பயிர் செய்யும் விவசாயி கண்ணீர் வடிக்க, இடைத்தரகர்களும் வியாபாரிகளும் பெரும் லாபம் அடைவதும் இன்னொரு கொடுமை. இனி இந்த நிலை மாறி, மீண்டும் பழையபடி விவசாயம் நடக்குமா என்பதெல்லாம் சந்தேகம்தான்.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Monsoon, rice, rice, risks of rising prices
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...