×

நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி? அதிமுகவில் உச்சக்கட்ட குழப்பம்: ஜெயலலிதா பாணியை பின்பற்ற தலைவர்கள் வலியுறுத்தல்

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து அதிமுகவில் உச்சக்கட்ட குழப்பம் ஏற்பட்டுள்ளது. பாஜவுடன் கூட்டணி வேண்டாம் என்றும், ஜெயலலிதா பாணியில் தனித்து போட்டியிட்டு தேர்தலுக்கு பிறகு மத்தியில் பாஜவுடன் கூட்டணி வைக்கலாம் என்றும் தலைவர்கள் வலியுறுத்தி வருவதால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முடிவு எடுக்க முடியாமல் திணறி வருகிறார். நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதியை வருகிற மார்ச் மாதம் முதல் வாரத்தில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்று செய்தி வெளியாகி உள்ளது. இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் கட்சிகள் கூட்டணி அமைத்து வெற்றிபெறுவதை உறுதி செய்யும் வகையில், ஒவ்வொரு மாநிலத்திலும் கூட்டணி பேச்சுவார்த்தை விறுவிறுப்படைந்துள்ளது.

தமிழகத்தில், திமுக - காங்கிரஸ் இடையே கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டணியில் மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் இணைந்து போட்டியிடும் சூழல் உருவாகியுள்ளது. மற்றொரு பெரிய கட்சியான அதிமுக கூட்டணியில் பாஜ சேரும் என்று பரவலாக பேச்சு அடிபட்டது. ஆனால், இதில் தொடர்ந்து ஈழுபறி நிலையே நீடிக்கிறது. கடந்த வாரம் பிரதமர் மோடி தமிழக பாஜ கட்சி நிர்வாகிகளிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசும்போது, பழைய நண்பர்கள் பாஜ கூட்டணியில் சேர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக மக்களுக்கு துரோகம் செய்யும் கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என்றார். பிரதமர் மற்றும் முதல்வர் பேசியதை வைத்து பார்க்கும்போது, இன்னும் அதிமுக - பாஜ இடையே கூட்டணி ஏற்படவில்லை என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. மேலும், வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாஜவுடன் அதிமுக கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டும் என்று மத்திய ஆட்சியாளர்கள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருவதாகவே கூறப்படுகிறது. இதனால்தான், தமிழக அமைச்சர்களுக்கும், ஆட்சிக்கும் நெருக்கடி கொடுக்கும் வகையில் மத்திய அரசு வருமான வரி சோதனை, சிபிஐ விசாரணை, தமிழக திட்டங்களுக்கு அனுமதி கொடுக்காமல் இழுத்தடிப்பது போன்ற காரியங்களில் ஈடுபட்டு வருகிறார்கள் என்றும் தமிழக ஆளுங்கட்சி தலைவர்கள் கூறி வருகிறார்கள்.

இதனால் பாஜவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மூத்த அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ராஜேந்திரபாலாஜி உள்ளிட்ட சில மூத்த அமைச்சர்கள் அதிமுக கட்சி தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார்கள். ஆனால், அதிமுக எம்பியும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை பகிரங்கமாகவே பாஜவை எதிர்த்து வருகிறார். அதிமுக முதுகில் சவாரி செய்து தமிழகத்தில் பாஜ காலூன்ற பார்க்கிறது என்று பேசி வருகிறார். இதே கருத்தைத்தான், அதிமுகவில் பெரும்பாலான அமைச்சர்கள் மற்றும் கட்சியின் முன்னணி தலைவர்களும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் வலியுறுத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து அதிமுக கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில் பாஜவுக்கு வாக்கு வங்கியே இல்லை. அப்படி இருக்கும்போது அதிமுக - பாஜ கூட்டணி அமைந்தால் பாஜவுக்குத்தான் அதிக லாபம். மேலும், தற்போது பிரதமர் மோடிக்கு எதிரான அலை வீசுகிறது. இந்த நேரத்தில் பாஜவுடன் அதிமுக கூட்டணி வைத்தால், வழக்கமாக அதிமுகவுக்கு கிடைக்கும் வாக்குகூட எங்களுக்கு கிடைக்காமல் போகும். மோடி மீதுள்ள எதிர்ப்பை காட்டுவதற்காக அதிமுக வாக்காளர்களே மாற்று அணிக்கு வாக்களித்து விடுவார்கள்.  அதனால், ஜெயலலிதா வகுத்து தந்த பாதையையே வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தற்போதைய அதிமுக தலைமை எடுக்க வேண்டும். அதன்படி, தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலை தனித்தே அதிமுக சந்திக்க வேண்டும். சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைக்கலாம்.

அவர்களையும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வைக்க வேண்டும். தேர்தலுக்கு பிறகு வேண்டுமானால் பாஜவுக்கு அதிமுக ஆதரவு அளிக்கலாம். இதுவே 80 சதவீதத்துக்கும் மேல் அதிமுக தொண்டர்களின் விருப்பம் என்றார். அதேபோன்று அதிமுக கூட்டணியில் சேரலாம் என்று முதலில் ஆலோசனை நடத்திய பாமகவும் தற்போது அந்த கூட்டணியில் சேர தயக்கம் காட்டுவதாகவே கூறப்படுகிறது. மத்தியில் இனி காங்கிரஸ் தலைமையிலான ஆட்சிதான் வர வாய்ப்புள்ளது என்று கருத்து கணிப்புகள் கூறுகிறது. இந்த நேரத்தில் பாஜவுக்கு ஆதரவாக பாமக செயல்பட்டால் தமிழகத்தில் வெற்றி பெற முடியாது.

ஏற்கனவே காங்கிரஸ் அமைச்சரவையில் அன்புமணி ராமதாஸ் மத்திய அமைச்சராக இருந்துள்ளார். அதனால், காங்கிரஸ் கூட்டணியிலேயே மீண்டும் இணைந்தால் வெற்றிபெற்று அமைச்சர் பதவி கூட கிடைக்க வாய்ப்புள்ளது. அடுத்து, ஏற்கனவே உள்ள வழக்குகளில் இருந்தும் தப்பிக்க முடியும் என்று பாமக கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர். இதனால், தமிழகத்தில் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாஜவை கூட்டணியில் சேர்க்க அதிமுக, பாமக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தொடர்ந்து தயக்கம் காட்டியே வருகின்றனர். இதனால் பாஜ தனித்து விடும் சூழ்நிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில், பெரிய கட்சிகள் எதையும் தங்கள் கூட்டணியில் சேர்க்க முடியாதது, அதிமுகவின் உச்சக்கட்ட குழப்பத்தை வெளிக்காட்டுகிறது. இதனால் அதிமுக தொண்டர்களும் சோர்வடைந்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : election ,Leaders ,Jayalalithaa , Parliamentary elections, coalition, AIADMK
× RELATED ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க...