×

பொங்கல் பண்டிகை முடிந்ததும் ரேஷன் கடைகளில் அரசு அறிவித்த 1000 ரூபாய் வழங்குவது நிறுத்தம்: அமைச்சர் உத்தரவு காற்றில் பறந்தது

சென்னை: பொங்கல் பண்டிகை முடிந்ததும் ரேஷன் கடைகளில் அரசு அறிவித்த 1000 ரூபாய் வழங்குவது நிறுத்தப்பட்டது. பணம் வாங்காதவர்கள் பொங்கல் பண்டிகை முடிந்த பிறகும் வாங்கலாம் என்று அமைச்சர் காமராஜ் கூறிய அறிவிப்பு காற்றில் பறந்தது.  தமிழக அரசு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்புடன் தலா 1000 வழங்கப்படும் என்று அறிவித்தது. அறிவித்தபடி, கடந்த 7ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் 1000 வழங்கப்பட்டது. அரசு அறிவித்தபடி, கடந்த 7ம் தேதி முதல் பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாளான 14ம் தேதி (திங்கள்) வரை அனைத்து ரேஷன் கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 1000 வழங்கப்பட்டது.

தமிழக அரசு அறிவித்த தலா 1000 பணத்தை ரேஷன் கடைகளில் இதுவரை 97 முதல் 98 சதவீதம் பேர் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது மொத்தமுள்ள 2 கோடியே 2 லட்சம் குடும்ப அட்டைதாரர்களில் 1 கோடியே 96 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் வாங்கியுள்ளனர். சுமார் 6 லட்சம் பேர் இன்னும் வாங்கவில்லை. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இவர்கள் வெளியூர்களுக்கு சென்றதால் வாங்க முடியவில்லை. இவர்களுக்கு பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு 1000 கிடைக்குமா என்ற கேள்வி எழுந்தது.  இதுகுறித்து உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பொங்கல் பண்டிகைக்கு முன் கூறும்போது, “வெளியூர்களுக்கு சென்றவர்கள் தமிழக அரசு அறிவித்த பொங்கல் சிறப்பு பணமான 1000 வாங்காதவர்கள் பொங்கல் பண்டிகை முடிந்த பிறகும் வாங்கிக் கொள்ளலாம்” என்று அறிவித்தார்.

பொங்கல் பண்டிகை முடிந்து கடந்த 17ம் தேதி முதல் ரேஷன் கடை திறக்கப்பட்டது. இதையடுத்து பொங்கல் பண்டிகைக்காக ஊருக்கு சென்றவர்கள் ரேஷன் கடைகளுக்கு சென்று அரசு அறிவித்த 1000 பணத்தை வழங்கும்படி கேட்டனர். ஆனால் ரேஷன் ஊழியர்கள் அவர்களுக்கு பணம் வழங்க மறுத்துவிட்டனர். இதுபற்றி ரேஷன் கடை ஊழியர்களிடம் கேட்டபோது, “ஒவ்வொரு ரேஷன் கடைகள் மூலம் 97 சதவீதம் முதல் 98 சதவீதம் கார்டு தாரர்களுக்கு 1000 பணம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 14ம் தேதி மாலை வரை பணம் வழங்கப்பட்டது. உணவு வழங்கல் உதவி ஆணையர்கள், எங்களிடம் இருந்து உத்தரவு வரும் வரை யாருக்கும் இனி 1000 பணம் வழங்க வேண்டாம் என்று கூறி விட்டனர்.

மேலும், குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்குவதற்காக கொடுத்த ரிஜிஸ்டரையும் வாங்கி சென்று விட்டனர். எங்களிடம் உள்ள மீதி பணத்தையும் இன்று (நேற்று) ஒப்படைக்க சொல்லி விட்டனர். உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வாய்மொழியாக பொங்கல் பண்டிகைக்கு பிறகும் பணம் வழங்கப்படும் என்று கூறி உள்ளார். ஆனால், அதை அரசு உத்தரவாக எடுத்துக்கொள்ள முடியாது. அமைச்சர் இப்படி கூறியுள்ளாரே என்று சிலர் 1000 பணம் கேட்டு கடந்த இரண்டு நாட்களாக வருகின்றனர். ஆனால் அவர்கள் யாருக்கும் நாங்கள் பணம் வழங்கவில்லை” என்றனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : festival ,Pongal ,ration shops ,government , Pongal festival, ration shop, minister orders
× RELATED அழகு நாச்சியம்மன் கோயில் பொங்கல் விழா