×

அமைச்சர் சட்டசபையில் அறிவித்து 6 மாதமாகிறது அமலுக்கு வராத தனியார் காடுகள் பாதுகாப்பு சட்டத்திருத்தம்

நாகர்கோவில்: தனியார் காடுகள் பாதுகாப்பு சட்ட திருத்தம் தொடர்பாக தமிழக சட்டசபையில் அறிவிப்பு வெளியிடப்பட்டு ஆறு மாதமாகியும் அது செயல்பாட்டிற்கு வராததால் ஆயிரக்கணக்கான மக்கள் கவலையடைந்துள்ளனர். தமிழகத்தில் ‘தனியார் காடுகள் பாதுகாப்புச் சட்டம்-1949’ கடந்த  1979ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. 2011ம் ஆண்டு வரை 30 ஆண்டுகளாக தனியார் காடுகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்ட நிலங்களிலும் பத்திரப்பதிவுகள்  ஆயிரக்கணக்கில் நடத்தப்பட்டன. 2011ல் குமரி மாவட்ட நிர்வாகம் திடீரென்று, தனியார் காடுகளாக வகைப்படுத்தப்பட்ட நிலங்களில் செய்யப்பட்ட  உரிமை மாற்றங்கள் அச்சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளின் அடிப்படையில் செய்யப்படாததால் அத்தகைய உரிமை மாற்றங்கள்  செல்லாது என்று அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.

பிரச்னை மீண்டும் விஸ்வரூபம் எடுத்த நிலையில் தனியார் காடுகள் பாதுகாப்பு சட்டம் தொடர்பாக சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று குமரி மாவட்ட எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், தனியார் காடுகள் பாதுகாப்புச் சட்டத்தில் சட்டத் திருத்தம் ‘4 ஏ’ கொண்டுவருவது தொடர்பாக அரசு ஆலோசித்து வருகிறது என்று கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் அறிவித்தார். பின்னர் சட்ட திருத்தம் நடைமுறைக்கு வந்துள்ளதாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் 9ம் தேதி சட்டமன்றத்தில் அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு 6 மாதங்களாகியும் சட்டத்திருத்தத்தை நடைமுறைப்படுத்த எந்த நடவடிக்கையும் தமிழக அரசால் எடுக்கப்பட வில்லை. இதனால் தற்போதும் 2011ம் ஆண்டு நிலையே தொடர்கிறது.

 இது தொடர்பாக ஐஎன்டியுசி குமரி மாவட்ட தலைவர் அனந்தகிருஷ்ணன் கூறுகையில், தனியார் காடுகள் பாதுகாப்பு சட்டம் 1979ல் கொண்டுவரப்பட்ட போதே இதனை முறையாக மக்களிடம் அறிவித்து இருந்தால் இப்போது இந்த பிரச்னை ஏற்பட்டு இருக்காது. ஆனால் குமரி மாவட்ட மலையோர பகுதி சார்ந்த வேளிமலை, சுருளோடு, பொன்மனை வருவாய் கிராம பகுதிக்கு உட்பட்ட பல பகுதிகள் இந்த சட்ட வரம்புக்குள் வராமல் உள்ளது. மேலும் குலசேகரம் டவுன் பகுதிகள் சட்டத்திற்கு வருகிறது. இவ்வாறு வரன்முறைப்படுத்தியதில் பல்வேறு குளறுபடிகள் ஒருபுறம் இருந்து வர அமைச்சர் சட்டமன்றத்தில் அறிவித்ததை அரசாணையாக பிறப்பித்து பதிவுத்துறை, வருவாய்துறை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி உடனே அதனை நடைமுறைப்படுத்தவில்லை. இதனால் மக்கள் மீண்டும் போராட வேண்டிய நிலைதான் ஏற்பட்டுள்ளது’ என்றார்.

பிரிவு ‘4ஏ’ன் பயன் என்ன?
தனியார் காடுகளை வரைமுறைப்படுத்துவதற்கு, தனியார் காடுகள் பாதுகாப்புச் சட்டம்- 1949  நடைமுறையில் உள்ளது. வனப்பகுதியையொட்டிய மக்கள் வசிக்கின்ற இடங்களில் பெருமளவில் முறையின்றி மரங்கள் வெட்டப்படுவதை தடுக்கவும், வனப்பரப்பை அதிகரித்து அதனை  பாதுகாத்திடவும், சூழலியல் சமன்பாட்டை ஏற்படுத்திடவும் இந்தச் சட்டம் வழிவகை செய்கிறது. இந்தச் சட்டத்தில் தனியாரால் வளர்க்கப்பட்ட மரங்களை வெட்ட தடை விதிக்கப்படவில்லை. ஆனால், கட்டுப்பாடின்றி மரங்கள் வெட்டுவதைத் இந்த சட்டம் தடை செய்கிறது. மேலும் பிரிவு ‘4 ஏ’ என்பது மாவட்ட வனக்குழுவின் முன் அனுமதி பெறாமல், தனியார் காடுகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், தனியார் காடுகள் என வரையறை செய்யப்பட்ட நிலங்களை வாங்கியவர், அதற்கான உரிமையைப் பெற வழிவகை செய்வது ஆகும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Minister ,jungle ,Legislative Assembly , Minister's Assembly, Private Forests, Security Framework
× RELATED புலிவெந்துலா சட்டப்பேரவை தொகுதியில்...