×

சட்டப்பேரவைக்கு இடைத்தேர்தல் வரும் என்ற பாஜ ஆருடம் ஒரு நாளும் பலிக்காது: முன்னாள் முதல்வர் சித்தராமையா பதிலடி

பெங்களூரு : ‘‘மாநில சட்டப்பேரவைக்கு இடைத்தேர்தல் வரும் என்று பாஜ கூறி வரும்  ஆருடம் ஒரு நாளும் பலிக்காது’’ என்று முன்னாள் முதல்வர் சித்தராமையா பதிலடி  கொடுத்துள்ளார். ஈகிள்டன் ரிசார்ட்டில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மாநில  சட்டப்பேரவைக்கு கடந்த 2018ல் நடந்த தேர்தலில் மக்கள் எந்த கட்சிக்கும்  தனிபெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும் அதிகாரம் வழங்கவில்லை.  மக்களுக்கு நல்ல அரசு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் காங்கிரஸ் தேசிய  தலைவர் ராகுல்காந்தியின் தொலைநோக்கு பார்வை அடிப்படையில் மஜத-காங்கிரஸ்  கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறோம். இக்கூட்டணி அரசு 5 ஆண்டுகள் நீடிக்க  வேண்டும் என்பது ராகுல்காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் தேவகவுடா ஆகியோரின்  விருப்பமாக உள்ளது. அதை நிறைவேற்றுவது இரு கட்சி தலைவர்களின் கடமையாகவும்  உள்ளது.

எங்கள் கூட்டணி ஆட்சியை சகித்து கொள்ள முடியாத எடியூரப்பா,  ஆட்சியை கவிழ்த்துவிட்டு குறுக்கு வழியில் ஆட்சி அதிகாரத்தில் அமர  வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியுள்ளார். இதற்காக காங்கிரஸ் மற்றும்  மஜதவில் உள்ள சில எம்எல்ஏக்களுக்கு கோடிக்கணக்கில் பண ஆசை காட்டி விலைக்கு  வாங்கும் முயற்சியை மேற்கொண்டு வருகிறார். ஆனால் அவரின் முயற்சிக்கு  கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் விலைபோகவில்லை. எதிர்காலத்திலும் விலை  போகமாட்டார்கள். முதல்வர் எச்.டி.குமாரசாமி தலைமையிலான  மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு விரைவில் கவிழும் என்றும், தேர்தலை சந்திக்க  தயாராக வேண்டும் என்றும் பேரவை எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா, முன்னாள்  முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் ஆகியோர் மக்கள் மத்தியில் குழப்பத்தை  ஏற்படுத்தி வருகிறார்கள்.

பேரவையில் கூட்டணி அரசு தனி பெரும்பான்மை  பலத்துடன் உள்ளோம். இந்த நிலையில் பேரவைக்கு எப்படி இடைத்தேர்தல் நடக்கும்? எங்கள் ஆட்சியை கவிழ்த்துவிட்டு, அவர்கள் ஆட்சியில் அமரலாம் என்று பகல்  கனவு கண்டு வருகிறார்கள். மாநிலத்தில் இன்னும் 15 ஆண்டுகள் எடியூரப்பா  மற்றும் ஷெட்டர் ஆகியோர் எதிர்க்கட்சி வரிசையில் மட்டுமே இருப்பார்கள்.  ஆட்சி அதிகாரம் என்பது இனி அவர்களுக்கு எட்டாத கனியாகும். மாநிலத்தில்  எங்கள் கூட்டணி அரசுக்கு எதிர்க்கட்சியான பாஜ  எவ்வளவு நெருக்கடி  கொடுத்தாலும் கண்டுக்கொள்ளாமல் எங்கள் பணியை தொடர்ந்து மேற்கொள்ள முடிவு  செய்துள்ளோம்.

மாநில சட்டப்பேரவைக்கு இடைத்தேர்தல் வராது. எதிர்க்கட்சியின்  ஆருடம் பலிக்காது. இப்போதும் ரிசார்ட்டில் தங்கி காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன்  மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகிறோம். எங்கள் கட்சி  எம்எல்ஏக்களை பாஜவினர் விலை கொடுத்து வாங்கி விடுவார்கள் என்ற பயத்தில்  ரிசார்ட்டில் தங்க வைக்கவில்லை. மாநிலத்தில் நிலவும் வறட்சி, இன்னும் 3  மாதங்களில் நடக்கவுள்ள மக்களவை தேர்தல் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து  தெளிவாக ஆலோசிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தங்க வைத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : BJP ,Siddaramaiah , BJP,single ,bypolls,Former Chief Minister,Siddaramaiah
× RELATED பாஜவுக்கு எதிராக விளம்பரம் செய்த...