×

மெட்ரோ ரயில் முதல் வழித்தட திட்டத்தின் இறுதி கட்டம்: டிஎம்எஸ் - வண்ணாரப்பேட்டை இடையே ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு

* 2020ல் திருவொற்றியூருக்கு சேவை
* கட்டணம் குறைய வாய்ப்பு இல்லை

சென்னை: சென்னையில் 45 கி.மீ தூரத்திற்கான முதல் வழித்தட திட்டத்தின் இறுதி கட்டமான டி.எம்.எஸ் முதல் வண்ணாரப்பேட்டை இடையிலான வழித்தடத்தில் மெட்ரோ ரயில்வே முதன்மை பாதுகாப்பு ஆணையர் மனோகரன் நேற்று  ஆய்வு செய்தார். சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 45 கி.மீட்டர் தூரத்திற்கு முதல் வழித்தட மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவரப்பட்டது. கோயம்பேடு முதல் ஆலந்தூர் இடையே முதலில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. பின்னர், சென்ட்ரல் முதல் விமானநிலையம், பரங்கிமலை முதல் விமானநிலையம், விமானநிலையம் முதல் டி.எம்எஸ் இடையே தற்போது மெட்ரோ ரயில் சேவை பயன்பாட்டில் உள்ளது.

இந்த நிலையில், முதல் வழித்தட திட்டத்தின் இறுதி பணிகள் டி.எம்.எஸ் - வண்ணாரப்பேட்டை இடையிலான 10 கி.மீட்டர் தூரத்திற்கு சுரங்க வழித்தடத்தில் நடைபெற்று வந்தது. இந்த பணிகள் அனைத்தும் சமீபத்தில் முடிவடைந்தது. பணிகள் முழுமையாக முடிந்ததையடுத்து ரயில் இஞ்ஜின் சோதனை ஓட்டங்கள் மட்டுமே நடைபெற்று வந்தது. சோதனை ஓட்டங்களும் முழுமையாக முடிந்ததால் இந்த வழித்தடத்தை ஆய்வு செய்யக்கோரி மெட்ரோ ரயில்வே பாதுகாப்பு ஆணையரை சென்னை மெட்ரோ ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டது.

இதை ஏற்று சென்னைக்கு வந்த மெட்ரோ ரயில் முதன்மை பாதுகாப்பு ஆணையர் மனோகரன் தலைமையிலான குழு நேற்று மதியம் 12 மணியளவில் வண்ணாரப்பேட்டை முதல் சென்ட்ரல் வரையிலான வழித்தடத்தில் தன்னுடைய முதல் ஆய்வை தொடங்கியது. அப்போது, மெட்ரோ ரயில் நிலையத்தின் உட்புற தோற்றம், வெளிப்புற பாதுகாப்பு அம்சங்கள்,  தீ தடுப்பு உபகரணங்கள், காற்றோட்ட வசதி, பயணிகளின் பாதுகாப்பு அம்சங்கள், மின் தூக்கி மற்றும் நகரும் படிக்கட்டுகள், ரயில் தண்டவாளத்தின் அமைப்பு, சிக்னல் அமைப்பு உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு நடத்தியது.

அப்போது, மெட்ரோ ரயில்வே முதன்மை பாதுகாப்பு ஆணையர் கே.ஏ.மனோகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: வண்ணாரப்பேட்டை முதல் டி.எம்.எஸ் இடையிலான வழித்தடத்தில் இந்த ஆய்வை செய்கிறோம். இந்த ஆய்வில் தண்டவாள பணிகள், ரயில் சிக்னல் ஒருங்கிணைப்பு, பாதுகாப்பு வசதிகள், ரயில் நிலையங்களில் செய்யப்பட்டுள்ள வசதிகள் ஆகியவற்றை ஆய்வு செய்ய உள்ளோம். இதேபோல், சீரான வேகத்தில் ரயிலை இயக்கி பார்த்து சோதனை செய்ய உள்ளோம். அப்போது, பணிகளில் எதாவது திருத்தம் செய்ய வேண்டும் என்றால் அதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் தெரிவிப்போம். அதன்பிறகு ஒப்புதல் கொடுக்கப்படும்.  

இதையடுத்து, சென்னை மெட்ரோ ரயில்வே நிறுவன மேலாண்மை இயக்குனர் பங்கஜ் குமார் பன்சல் கூறியதாவது: சென்னையில் பல்வேறு மெட்ரோ ரயில் வழித்தடத்தில் ஏற்பட்ட சிக்னல் கோளாறு உடனடியாக சரிசெய்யப்பட்டது. சிக்னல் கோளாறு காரணமாக நேர காலதாமதம் மட்டுமே ஏற்பட்டது. பயணிகளின் பாதுகாப்பில் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. 100 சதவீதம் பாதுகாப்பாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசிடம், தமிழக அரசு அதற்கான திட்ட அறிக்கையை தாக்கல் செய்த பிறகு மத்திய அரசின் மெட்ரோ ரயில் திட்ட கொள்கைகள் மாற்றப்பட்டன. தற்போது அதற்கேற்றார் போல தமிழக அரசு 2ம் கட்ட வழித்தட திட்ட அறிக்கையை மத்திய அரசின் ஒப்புதலுக்காக சமர்ப்பித்துள்ளது. உலக அளவில் சென்னை மெட்ரோவிற்கு ஒரு நல்ல பெயர் உள்ளது.

ஜப்பான் கூட்டு நிறுவனம், உலக வங்கி உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் 2ம் கட்டத்திற்கு நிதி வழங்க ஆர்வம் காட்டுகிறது. வண்ணாரப்பேட்டை முதல் விம்கோநகர் வரை விரிவாக்க பணி அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் முடிவடைந்து ரயில் சேவை தொடங்கப்படும். மெட்ரோ ரயில் திட்டத்திற்காக ஜப்பான் நாட்டு நிறுவனத்துடன் 2017ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் படி 5 ஆண்டுகளுக்குள் இந்த திட்டப்பணிகள் முடிக்கப்பட வேண்டும். ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக இந்த பணிகளை முடித்துவிடுவோம். இதேபோல், சென்னையில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட திட்டப்பணி முடிந்து பாதை இணைப்புக்கு பிறகு பயணிகள் எண்ணிக்கை உயரும். மேலும், மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைக்க வாய்ப்பு இல்லை.

மெட்ரோ ரயில் நிலையங்களில் வை-பை அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படும். மெட்ரோ ரயிலில் தொழில்நுட்ப பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும். இவ்வாறு அவர் கூறினார். இதேபோல், இந்த ஆய்வு இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இதையடுத்து, பாதுகாப்பு ஆணையரின் ஒப்புதல் கிடைத்த பிறகு இம்மாத இறுதிக்குள் இந்த வழித்தடத்தில் சேவை தொடங்க உள்ளதாக மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

6 ரயில் நிலையம்
இந்த வழித்தடத்தில் ஆயிரம் விளக்கு, எல்ஐசி, அரசினர் தோட்டம், சென்னை சென்ட்ரல், உயர் நீதிமன்றம், மண்ணடி ஆகிய 6 ரயில் நிலையங்கள் வர உள்ளது.

80 கி.மீ. வேகத்தில் சோதனை
மெட்ரோ ரயில் பாதையில் நேற்றைய ஆய்வை தொடர்ந்து இன்று காலை 10 மணி முதல் பாதுகாப்பு ஆணையர் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். இதேபோல், நாளை (21ம் ேததி) இரவு 12 மணி முதல் அதிகாலை 4.30 மணி வரை மெட்ரோ ரயில் 80 கி.மீட்டர் வேகத்தில் இயக்கி சோதனை செய்யப்பட உள்ளது. அப்போது பாதுகாப்பு ஆணையர் ரயிலில் பயணம் செய்து முழுமையான ஆய்வை மேற்கொள்ள உள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Railway Safety Commissioner , end,first phase,metro rail,project,DMS,Washermanpet,commissioner,railway safety inspection
× RELATED முதல்கட்ட விரிவாக்கத்தில் எஞ்சியுள்ள...