பெங்களூருவில் கடும் பனி மூட்டத்தால் சென்னையில் 6 விமானங்கள் தரை இறங்கியது: இடநெரிசலால் சென்னை விமானம் ஐதராபாத் சென்றது

சென்னை : பெங்களூருவில் நேற்று அதிகாலை முதல் மதியம் வரை கடும் பனிமூட்டம் நிலவியது. இதனால் அங்கு பெரும்பாலான விமானங்கள் தரை இறங்க முடியாமல் சென்னை, கோவை, ஐதராபாத் ஆகிய விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டன. சென்னையில் இடநெரிசல் ஏற்பட்டதால் , குவைத்தில் இருந்து வந்த விமானம், ஐதராபாத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டது. கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் நேற்று அதிகாலை முதல் மதியம் வரை கடும் பனிமூட்டம் நிலவியது. இதனால், ஜெய்ப்பூரில் இருந்து காலை 6.30 மணிக்கு பெங்களூர் சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் சென்னைக்கு திருப்பிவிடப்பட்டது. அதை தொடர்ந்து, காலை 7 மணிக்கு கொச்சியில் இருந்து பெங்களூரு சென்ற விமானமும் திருப்பி விடப்பட்டது.

இதேபோல், காலை 7.30 மணிக்கு ஐதராபாத்தில் இருந்தும், காலை 8 மற்றும் 8.30 மணிக்கு மும்பையில் இருந்து புறப்பட்ட 2 விமானங்களும், மதியம் 11.05 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து புறப்பட்ட விமானம் உள்பட 6 விமானங்கள் பெங்களூருவில் தரையிறங்க முடியாமல், சென்னைக்கு திருப்பி விடப்பட்டன. இந்நிலையில், குவைத்தில் இருந்து கோவா வழியாக 157 பயணிகளுடன் நேற்று காலை 9.30 மணிக்கு ஏர் இந்தியா விமானம் சென்னைக்கு வந்தது. ஆனால், சென்னை விமான நிலையத்தில் பெங்களூருவில் இருந்து அனுப்பப்பட்ட 6 விமானங்கள் தரை இறங்கியதால், நடைமேடைகள் ஆக்கிரமிக்கப்பட்டன.

இதையொட்டி இடநெரிசல் காரணமாக, குவைத்தில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானம் ஐதராபாத் விமான நிலையம் திருப்பி அனுப்பப்பட்டது. இதனால், அதில் பயணம் செய்த 157 பேர் ஐதராபாத்தில் தவித்தனர். இதேபோல் 6 விமானங்களில் வந்த பெங்களூரு பயணிகள், சென்னை விமான நிலையத்தில் தவித்தனர். இதைதொடர்ந்து பெங்களூரில் பனிமூட்டம் விலகியபின், நேற்று மதியம் 12.30 மணி முதல் ஒன்றன் பின் ஒன்றாக விமானங்கள் பெங்களூரு புறப்பட்டு சென்றன. தொடர்ந்து ஐதராபாத் சென்ற ஏர் இந்தியா விமானமும், மதியம் 1.30 மணிக்கு சென்னையில் தரை இறங்கியது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chennai ,snowfall ,Bangalore ,Hyderabad ,flight , airplanes,landed,Chennai,heavy snowfall,Bangalore,flight,Hyderabad,
× RELATED சூலூர் விமானப்படை தளத்தில்...