×

தொட்டபெட்டா அருகே சீரமைக்கப்படாத சாலையால் பாதிப்பு

*சுற்றுலா பயணிகள், வாகன ஓட்டுநர்கள் அவதி

ஊட்டி : ஊட்டியை அடுத்த தொட்டபெட்டா சாலை மிகவும் பழுதடைந்துள்ள நிலையில், வாகன ஓட்டுநர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.  நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு நாள் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ரோஜா பூங்கா மற்றும் தொட்டபெட்டா போன்ற பகுதிகளுக்கு செல்கின்றனர். குறிப்பாக வெளிநாடு மற்றும் வெளிமாநில சுற்றுலா பயணிகள் தொட்டபெட்டா மலைக்கு சென்று அங்குள்ள இயற்கை அழகை கண்டு ரசித்து வருகின்றனர். தொட்டபெட்டா சுற்றுலா தலமாக இருந்தாலும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கோத்தகிரி சாலையில் இருந்து தொட்டபெட்டாவிற்கு செல்லும் 4 கி.மீ., தூரம் சாலை வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

நீலகிரி வனக்கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இச்சாலையை கடந்த பல ஆண்டுகளாக சீரமைக்காமல் விட்டுவிட்டனர். இதனால், இச்சாலை மிகவும் பழுதடைந்தது. பல இடங்களில் பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தி வந்தனர். இதனை தொடர்ந்து கடந்த ஓராண்டிற்கு முன் இச்சாலையில் மராமத்து பணிகளும், ஒரு சில இடங்களில் சீரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டது.

ஆனால், முழுமையாக ேமற்கொள்ளவில்லை. சில இடங்களில் மட்டும் இன்டர்லாக் கற்கள் பதித்துவிட்டு பணியை முடித்துக் கொண்டனர். இதனால், இச்சாலை பழுதடைந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, சிறிய வாகனங்கள் பள்ளங்களில் சிக்கி பழுதடைகின்றன.  இரு சக்கர வாகனங்களில் செரல்பவர்கள் பள்ளங்களில் விழுந்து விபத்து ஏற்படுகிறது. சுற்றுலா பயணிகள், வாகன ஓட்டுநர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

தொட்டபெட்டா சாலை பழுதடைந்துள்ள நிலையில், இங்கு வரும் சுற்றுலா பயணிகள் உள்ளூர் டாக்சிகளை அழைத்தால் தொட்டபெட்டா செல்வதை தவிர்க்கின்றனர். மேலும், சிலர் அனைத்து சுற்றுலா தலங்களுக்கு அழைத்து சென்றாலும், தொட்டபெட்டாவை காண்பிக்காமலேயே சுற்றுலா பயணிகளை ஓட்டல்களுக்கு அழைத்து வந்து விடுகின்றனர்.
 ஊட்டியில் உள்ள சிறந்த சுற்றுலா தலமாக உள்ள இச்சாலையை சீரமைக்க வனத்துறை முன் வராத நிலையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை இச்சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இச்சாலையை உடனடியாக சீரமைக்கவில்லையென்றால், ஓரிரு மாதங்களில் இச்சாலை மேலும் பழுதடைந்து கோடை சீசனின் போது தொட்டபெட்டாவிற்கு வாகனங்கள் செல்ல முடியாத நிலை உருவாகும்.  மேலும், கோடை சீசன் போது தொட்டபெட்டாவிற்கு சிறிய வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படும். அதுமட்டுமின்றி சுற்றுலா பயணிகள் வாகனங்கள் நாள் தோறும் பழுதடைந்து அங்காங்கே சாலைகளில் நின்று வாகன நெரிசலும் ஏற்பட வாய்ப்புள்ளது.

நுழைவு கட்டணம் வசூலித்தும் சாலை சீரமைக்கவில்லை

 தற்போது சூழல் சுற்றுலா மூலம் தொட்டபெட்டா செல்லும் வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.10ம், கார்களுக்கு ரூ.20ம், வேன்களுக்கு ரூ.40 வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம் ஆண்டிற்கு பல லட்சம் வருவாய் வனத்துறையினருக்கு கிடைக்கிறது. ஆனால், சாலை மட்டும் சீரமைக்கப்படாமல் அப்படியே விட்டுள்ளனர். இதனால், தொட்டபெட்டா செல்லும் சுற்றுலா பயணிகள் திரும்பி வரும் போது, சூழல் சுற்றுலா ஊழியர்களையும், வனத்துறையினரையும் வசைப்பாடிவிட்டே செல்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : road ,Dodabetta , Tourist ,Tottapetta , officials ,ooty
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...