×

வரலாற்றில் முதன்முறையாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் புகுந்து விளையாடிய முறைகேடு

*651 காளைகள் ஏமாந்து கண்ணீர்
*லட்சக்கணக்கில் பணம் சுருட்டல்
*அதிர்ச்சியூட்டும் தகவல்கள் அம்பலம்

மதுரை : அலங்காநல்லூர் ஜல்லிகட்டில் முதன் முறையாக முறைகேடு புகுந்து விளையாடியதில் 651 காளைகள் காத்திருந்தும் ஏமாற்றம் அடைந்து கண்ணீர் வடித்து திரும்பிய அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளன.  ஜல்லிக்கட்டின் ஆணி வேர் அலங்காநல்லூர். இங்குள்ள முனியாண்டிசாமி கோயிலுக்கு வேண்டுதல் நிறைவேற்றுவதற்காக கிராம மக்கள் 500 ஆண்டுக்கு முன் முதன் முதலில் ஜல்லிக்கட்டு உருவாக்கினர். இது இன்றைக்கு உலகத்தையே ஈர்த்துள்ளது. ஆண்டாண்டு காலமாக முறையாக சீரும் சிறப்புடனும் நடைபெற்று வந்தது. வரலாற்றில் முதன்முறையாக கடந்த 17ம் தேதி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முறைகேடு புகுந்து விளையாடியது.

இது குறித்து ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கூறும் அதிர்ச்சி தகவல்கள் வருமாறு:-

 * ஜல்லிக்கட்டு காலை 8 மணிக்கு தொடங்கி, மாலை 4.45 வரை நடந்துள்ளது. இந்த 8 மணி நேரத்தில் அதிகபட்சம் 800 காளைகள் மட்டுமே வாடிவாசலில் இருந்து பாய்வதற்கும், வீரர்கள் அடங்குவதற்கும் முடியும். ஆனால் அதிகாரிகள் 1,380 காளைகள் முன்பதிவு செய்து டோக்கன் வழங்கினர். இதில் தான் முறைகேடு அரங்கேறியது. சுமார் 450 டோக்கன்  முறைடோக அதிகாரிகள் கையில் அபகரித்து கொண்டுள்ளனர்.

இந்த டோக்கன்கள் முதல்வரிசை பட்டியலில் இடம் பெற்றதாகும். இது விஐபி மற்றும் காளையே இல்லாதவர்கள் கையில் சிக்கியது. இந்த டோக்கன்கள் ரூ. 5 ஆயிரம் வரை முறைகேடாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் விளைவு ஆண்டாண்டு காலமாக முறையாக ஜல்லிக்கட்டுக்கு முன் பதிவு செய்தவர்கள் பின்னுக்கு தள்ளப்பட்டனர். 729 காளையுடன் ஜல்லிக்கட்டு முடிந்தது. மீதமுள்ள 651 காளைகள் முந்தின நாள் இரவு முதல் ஒரு நாள் முழுக்க காத்திருந்தும் வாடிவாசலை எட்ட முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளன. காளைகளுக்கும் மனித உணர்வு உண்டு. அப்படி உணர்ந்த காளைகள் கண்ணீர் வடித்த காட்சி அனைவரையும் மனமுருக வைத்தது.  

* கால்நடை துறையினரின் முறைகேட்டை மத்திய குழு தட்டிக்கேட்டதாலேயே இரு தரப்பினருக்கு மோதல் மூண்டுள்ளது. முறைகேட்டில் லட்சக்கணக்கில் பணம் சுருட்டப்பட்டுள்ளது.

* திருவிழா போல் 1,500 போலீசார் பாதுகாப்பு என்றார்கள். ஆனால் நெரிசலில் சிக்கி ஒருவர் உயிரிழக்கும் அளவுக்கு தான் பாதுகாப்பு இருந்துள்ளது.

* ஜல்லிக்கட்டில் காளைகள் பொங்கி எழுந்து சீறி பாய்ந்ததை மக்கள் கண்டு மகிழ்ந்தனர்.. ஆனால் ஜல்லிக்கட்டின் பின்னணியில் மறைந்திருந்த முறைகேடு கண்ணில் படாமல் புகுந்து விளையாடியது என்பது நிஜம்.

இதே நிலை நீடித்தால்...

மதுரை அவனியாபுரம், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடத்தும் குழு அமைப்பதில் முதன் முறையாக ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடரப்பட்டு, தீர்வு ஏற்பட்டது. அடுத்து காளைகள் முன்பதிவில் முறைகேடு முதன்முறையாக தலைதூக்கி உள்ளது. இதேநிலை நீடித்தால் பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுக்கும். மன்னர்கள் ஆட்சியில் அரண்மனை மணி அடித்து பசுங்கன்று நீதி கேட்டது போல், ஜல்லிக்கட்டு காளை முன்பதிவுக்கும் அதிகாரிகள் மீது நம்பிக்கை இழந்து நீதிமன்ற கதவை காளை தட்டும் நிலை ஏற்படும். எனவே அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் பின்னணியில் நடந்த முறைகேட்டினை விசாரணை குழு அமைத்து நடவடிக்கை எடுக்க தவறினால் மோசமான விளைவுகளை விஸ்வரூபம் எடுக்கும் என்பதே ஜல்லிக்கட்டு ஆர்வலர்களின் எச்சரிக்கையாகும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Alanganallur Jallikulam , alankanallur ,alankanallur jallikattu ,token ,bulls
× RELATED அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் கூட்ட...