×

கொடநாடு விவகாரத்தில் சயன், மனோஜ் கைது சட்ட விதிகள் மீறப்பட்டுள்ளதா? : டெல்லி போலீசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

புதுடெல்லி: கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் நடந்த கைது நடவடிக்கையில் சட்ட விதிகள் மீறப்பட்டுள்ளதா என விளக்கமளிக்க வேண்டும் என டெல்லி போலீசாருக்கு நோட்டீஸ் அனுப்பி டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ல் முக்கிய ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, அவரது ஓட்டுனர் கனகராஜ் உட்பட 5 பேர் மர்மமான முறையில் இறந்தது ஆகியவற்றில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நேரடி தொடர்பு உள்ளது என சில தினங்களுக்கு முன்பு தெகல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் டெல்லியில் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டார். இதேபோல் வழக்கில் 2வது குற்றவாளியான சயன் மற்றும் மனோஜ் ஆகிய இருவரும் கொலை, கொள்ளை சம்பவங்கள் அனைத்தும் முதல்வர் உத்தரவின் பேரில் நடந்தது என தெரிவித்தனர். ஆனால், இந்த குற்றச்சாட்டுக்கு அவர் மறுப்பு தெரிவித்தார். இதையடுத்து தவறான தகவல்களை வெளியிட்டதாக கூறி பத்திரிகையாளர் மேத்யூஸ் மற்றும் சயன், மனோஜ் ஆகியோர் மீது சென்னை குற்றவியல் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து, டெல்லி விரைந்த தனிப்படை போலீசார் சயன் மற்றும் மனோஜை கடந்த வாரம் கைது செய்து சென்னை அழைத்து சென்றனர். ஆனால் இருவரையும் சிறையில் அடைக்க எந்தவித முகாந்திரமும் கிடையாது எனக்கூறி சென்னை எழும்பூர் நீதிமன்றம் சயன் மற்றும் மனோஜ் ஆகியோரை ஜாமீனில் விடுவித்தது.

இதில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக குற்றச்சாட்டை கூறியதால் சயன் மற்றும் மனோஜ் ஆகிய இருவரையும் டெல்லியில் வைத்து கைது செய்ததில் சட்ட விதிகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளதால் தமிழக போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேத்யூஸ் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு, டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி நஞ்மின் வசாரி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மேத்யூஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தீபக் பிரகாஷ் வாதத்தில், “மனோஜ் மற்றும் சயனை சட்டவிரோதமாக துவாரகா பகுதியில் வைத்து கடந்த 13ம் தேதி போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களை கைது செய்தது குறித்து எந்த விவரமும் தெரிவிக்கவில்லை. கைது சமயத்தில் உச்ச நீதிமன்ற வழிமுறைகள் எதுவும் கடைபிடிக்கவில்லை. எனவே, தமிழக காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என வாதிட்டார்.

டெல்லி போலீசார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சஞ்சய்ராவ் வாதத்தில், “சயன், மனோஜ் மீது துவாரகா பகுதி காவல்நிலையத்தில் எப்.ஐ.ஆர் எதுவும் இதுவரை பதிவு செய்யவில்லை. அதேபோல், பத்திரிகையாளர் மேத்யூஸ் மீதும் எந்த வழக்கும் இல்லை. மேற்கண்ட இருவரையும் தமிழக போலீசார் கைது செய்வதற்கு முன்பாக எங்களிடம் தகவல் தெரிவிக்கவில்லை’’ என வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “சம்பந்தப்பட்ட நபர்கள் டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்டனரா, அதில் சட்ட விதிகள் மீறப்பட்டுள்ளதா என்பது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என டெல்லி போலீசாருக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது’ என தெரிவித்து, வழக்கை வரும் 31ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Manoj ,Saayan ,Kodanad ,Delhi , violation , laws of SAan and Manoj arrested ,Kodanadu issue,HC notice to Delhi police
× RELATED ஆட்டோவில் இருந்து குதித்து கைதி தப்பி ஓட்டம்