×

கடும் பனிப்பொழிவால் 34 விமானங்கள் தாமதம் சென்னை விமான நிலையத்தில் மத்தியஅமைச்சர் தவிப்பு

* நூற்றுக்கணக்கான பயணிகள் அவதி
* முன்னறிவிப்பு செய்வதில் குளறுபடி

சென்னை: கடும் பனிப்பொழிவு காரணமாக, சென்னை விமான நிலையத்தில் 34 விமானங்கள் தாமதமானது. டெல்லி செல்ல வந்த மத்திய அமைச்சர் 2 மணிநேரம் முக்கிய பிரமுகர் ஓய்வறையில் காத்திருந்தார். மேலும், நூற்றுக்கணக்கான பயணிகள் கடும் அவதிப்பட்டனர். டெல்லி, பெங்களூரு மற்றும் வட மாநிலங்களில் நேற்று காலை நிலவிய கடுமையான பனிமூட்டம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. குறிப்பாக, காலை 6 மணியிலிருந்து பகல் 12 மணி வரை இந்த பாதிப்புகள் அதிகளவில் இருந்தன. பெங்களூரு, டெல்லி, திருவனந்தபுரம், கோலாலம்பூர், கொல்கத்தா ஆகிய இடங்களிலிருந்து சென்னைக்கு வரவேண்டிய 14 விமானங்கள், சுமார் 3 மணி நேரம் வரை தாமதமாகவே வந்தன. அதேபோல், சென்னையில் இருந்து டெல்லி, பெங்களூரு, கோழிக்கோடு, கொல்கத்தா, மும்பை, ஐதராபாத், சேலம், தூத்துக்குடி உட்பட பல இடங்களுக்கு செல்ல வேண்டிய 20 விமானங்கள் சுமார் 2 மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டுச்சென்றன. மேலும், சென்ன்னையில் இருந்து பெங்களூரு, ஐதராபாத் ஆகிய இடங்களுக்கு செல்ல வேண்டிய 2 விமானங்கள் ரத்து செயப்பட்டன. மும்பையிலிருந்து பெங்களூருக்கு காலை 6.45க்கு சென்ற தனியார் சரக்கு விமானம் பெங்களூருவில் தரையிறங்க முடியாமல் சென்னைக்கு திருப்பி அனுப்பப்பட்டது. நேற்று காலை 6 மணியிலிருந்து 12 மணிவரை சுமார் 6 மணி நேரத்தில் 34 விமானங்கள் தாமதமாகின. 2 விமானங்கள் ரத்து செயப்பட்டதால் நூற்றுக்கணக்கான பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

இதுதவிர, விமானம் எவ்வளவு நேரம் தாமதம், எப்போது வரும், எப்போது புறப்பட்டுச் செல்லும் என்பது பற்றிய எந்த விவரங்களையும் விமான பயணிகளுக்கும், அவர்களை வரவேற்க, வழியனுப்ப வந்த பார்வையாளர்களுக்கும் அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. மேலும்  விமானம் புறப்பாடு, வருகை குறித்து மின்னணு அறிவிப்பு பலகையிலும் எந்தவிதமான முன்அறிவிப்பும் செய்யப்படவில்லை.விரைவில் புறப்படுவதாகவும் விரைவில் விமானம் வந்து சேரும் என்றும் பொதுப்படையாகவே அறிவிக்கப்பட்டது. இதனால் பயணிகளிடையே பெரும் குழப்பம் ஏற்பட்டது. இதற்கிடையே, மத்திய அமைச்சர் மேனகா காந்தி நேற்று காலை 9.55 மணிக்கு ஏர் இந்தியா விமானத்தில் சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டுச்செல்ல இருந்தார். அதற்காக, அவர் காலை 9.20 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்துக்கு வந்து முக்கிய பிரமுகர்கள் ஓய்வு அறையில் தங்கினார்.

டெல்லியில் இருந்து காலை 8.55 மணிக்கு சென்னை வந்துவிட்டு அதே விமானம் மீண்டும் 9.55 மணிக்கு புறப்பட்டு  செல்ல வேண்டிய விமானம் டெல்லியில் ஏற்பட்டிருக்கும் பனி மூட்டம் காரணமாக, பகல் 12 மணிக்கு வந்துவிட்டு மீண்டும் பகல் 1 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டுச் செல்லும் என அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக, சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக மேனகாகாந்தி முக்கிய பிரமுகர் அறையில் காத்திருந்தார். பின்னர், அதிகாரிகள் காலை 11.30 மணிக்கு சென்னையிலிருந்து டெல்லி செல்லும் ஜெட்ஏர்வேஸ் விமானத்துக்கு மேனகா காந்தியின் விமான டிக்கெட்டை மாற்றி, அந்த விமானத்தில் அனுப்பி வைத்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : flights ,snowfall ,airport ,Chennai , 34 flights delayed, heavy snowfall , Chennai airport
× RELATED ஆஸ்திரேலியாவில் கனமழை எச்சரிக்கை காரணமாக 100 விமானங்கள் ரத்து