×

சமூக விரோதிகள் கூடாரமாக மாறிய அம்பத்தூர் பழைய நீதிமன்ற வளாகம் : பொதுமக்கள் வேதனை

அம்பத்தூர்: அம்பத்தூர் பழைய நீதிமன்ற வளாகம் சமூக விரோதிகள் கூடாரமாக மாறியுள்ளதால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அம்பத்தூர் சி.டி.எச் சாலை, மண்டல அலுவலகம் பின்புறம் அம்பத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம் செயல்பட்டு வந்தது. முறையான பராமரிப்பு இல்லாததால் இந்த கட்டிடத்தில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டும், ஜன்னல், சிலாப்புகள் உடைந்தும் காணப்பட்டன. இதனால், மழைக்காலங்களில் கட்டிடத்துக்கு உள்ளே நீர் ஒழுகி வந்தது. மேலும், அங்கு குடிநீர், இருக்கைகள், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி பொதுமக்கள் அவதிப்பட்டனர். எனவே, இந்த கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து நீதிமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்ட அரசு முடிவு செய்தது. இந்நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள சிட்கோவிற்கு சொந்தமான வாடகை கட்டிடத்திற்கு ஒருங்கிணைந்த நீதிமன்றம் மாற்றப்பட்டது.

தற்போது, பழைய நீதிமன்ற கட்டிடத்தின் கதவை  சமூகவிரோதிகள் உடைத்து உள்ளே சென்று மது அருந்துவது, பாலியல் செயல்களில் ஈடுபடுவது உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுப்படுகின்றனர். இதனால் அப்பகுதியை சுற்றி வசிக்கும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் பலமுறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருந்து வருகின்றனர். எனவே, அம்பத்தூர் பழைய நீதிமன்ற கட்டிட பகுதியில் போலீசார் அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணிக்கவும், பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு அனைத்து வசதிகளும் புதிய கட்டிடம் கட்டித்தர அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நிதி ஒதுக்கப்படுமா?

வழக்கறிஞர் ஒருவர் கூறுகையில், அம்பத்தூர் பழைய நீதிமன்ற கட்டிடம் மாநகராட்சி கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. இந்த கட்டிடம், சமீபத்தில் தான் நீதித்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. மேலும், புதிய கட்டிடம் கட்ட அரசிடம் நிதி ஒதுக்கீடு செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு செய்தவுடன் புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ambattur , Old court complex, Ambattur, turned into social enemies, Public pain
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்