×

இரட்டை பதிவுகள் நீக்கும் பணிகள் முடிவடையாததால் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு மீண்டும் தள்ளிவைப்பு

சென்னை: இரட்டை பதிவுகள் நீக்கும் பணிகள் இன்னும் முடிவடையாததால் இறுதி வாக்காளர்கள் பட்டியல் வெளியிடுவது மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 31ம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது.இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் மொத்தம் 5 கோடியே 86 லட்சத்து 84 ஆயிரத்து 541 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 2,90,48,400, பெண்கள் 2,96,30,944, இதர பிரிவினர் 5,197 என மொத்தம் 5,86,84,541 பேர்.

இதையடுத்து, தமிழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. 2019ம் ஆண்டு ஜனவரி 4ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அறிவித்தபடி 4ம் தேதி வெளியிடப்படவில்லை. பின்னர் 10ம் தேதி என்றும், அதைத்தொடர்ந்து 21ம் தேதி வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
ஆனால், தமிழகத்தில் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளதும், இறந்தவர்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படாமல் உள்ளதும் தெரிய வந்தது. நாடாளுமன்ற தேர்தல் வருவதையொட்டி, போலி வாக்காளர்கள் இல்லாமல் தெளிவான பட்டியலை வெளியிட தேர்தல் ஆணையம் திட்டமிட்டு அதற்கான பணிகளை செய்து வருகிறது.

அதன்படி, நாடு முழுவதும் வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கான வலைதளம் (ERO NET) உருவாக்கப்பட்டு, வாக்காளர்களின் தகவல்கள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் வாக்காளர் பட்டியலில் இரட்டை பதிவுகள் எளிதாக கண்டறிந்து நீக்க முடியும். அந்த பணிகள் தற்போது நடந்து வருகிறது.

இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு நேற்று கூறும்போது, “இரட்டை பதிவுகளை முழுமையாக நீக்கிய பிறகே இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அதன்படி வருகிற 21ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனாலும், இரட்டை பதிவுகளை நீக்கும் பணிகள் முடிவடையாததால் வருகிற 31ம் தேதிதான் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாக வாய்ப்பு இருக்கிறது. அன்றைய தினம் தமிழகத்தில் சென்னை மாநகராட்சி அலுவலகம் மற்றும் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மூலம் 2019ம் ஆண்டுக்கான இறுதி வாக்காளர் வெளியிடப்படும்” என்றார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Double posts, final voter list, postponing
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...