×

அணையில் 97 சதவீதம் நீர் இருப்பு மணிமுத்தாறு அணை நிரம்பி ததும்புகிறது-விவசாயிகள் மகிழ்ச்சி

நெல்லை : மணிமுத்தாறு அணை நிரம்பி ததும்புகிறது. அணையில் தற்போது 97 சதவீதம் நீர் நிரம்பியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை காலத்தில் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகமாக இருக்கும். பெரும்பாலும் டிசம்பர் முதல் வாரத்தில் இரு அணைகளும் நிரம்புவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு டிசம்பர் முதல் வாரத்தில் பாபநாசம் அணை நிரம்பிய போதிலும் மணிமுத்தாறு அணை நிரம்பவில்லை.இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தற்போது வரை தொடர்ந்து வருகிறது. இதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து பாபநாசம், மணிமுத்தாறு அணைகளுக்கு அதிக நீர்வரத்து உள்ளது. பாபநாசம் அணை நிரம்பி விட்ட நிலையில் நீர்வரத்து அதிகமாக உள்ளதால் உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது.118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் ேநற்று காலை நிலவரப்படி 116.35 அடியாக உயர்ந்தது. அணையில் தற்போது 97.03 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. அணைக்கு விநாடிக்கு 1107 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 10 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. மணிமுத்தாறு அணையை பொறுத்தவரை அணையின் பாதுகாப்பு கருதி 117 அடிக்கு தண்ணீர் தேக்கப்படும். அதற்கு மேல் வரும் தண்ணீர் அப்படியே தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்படும். மணிமுத்தாறு அணை நிரம்பி வருவதால் அணையில் இருந்து உபரிநீர் இன்று திறக்கப்படும் என தெரிகிறது. அணை நிரம்பியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.மணிமுத்தாறு அணை நிரம்பி விட்டதால், அணை கண் கொள்ளா காட்சியளிக்கிறது. மணிமுத்தாறு அருவியிலும் தண்ணீர் கொட்டி வருகிறது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் 142.10 அடியாக உள்ளது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 145.37 அடியாக உள்ளது. அணைகளுக்கு விநாடிக்கு 1,584 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 1,421 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. வடக்கு பச்சையாறு அணையின் நீர்மட்டம் 30.50 அடியாகவும், நம்பியாறு அணையின் நீர்மட்டம் 10.62 அடியாகவும், கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 26.50 அடியாகவும் உள்ளது. கொடுமுடியாறு அணைப்பகுதியில் மட்டும் 25 மிமீ மழை பெய்துள்ளது. நெல்லையில் நேற்று பிற்பகலில் சுமார் ஒரு மணி நேரம் மிதமான மழை பெய்தது. நெல்லை சந்திப்பு, பாளையங்கோட்டை, வண்ணார்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மிதமாக மழை இருந்தது.நிலச்சரிவால் அணை மூடல்மணிமுத்தாறு பிரதான கால்வாயில் 1, 2, 3, 4 என நான்கு ரீச்கள் உள்ளன. இந்த ரீச்களில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பிரதான கால்வாய் பகுதியில் நிலச்சரிவு காரணமாக பாறை சரிந்தது. இதனால் அங்கு சீரமைப்பு பணிகள் ராட்சத இயந்திரங்கள், கிரேன்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகள் இன்று முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று முடியும் பட்சத்தில் நாளை (9ம் தேதி) பிரதான கால்வாய் பாசனத்திற்கு மீண்டும் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்….

The post அணையில் 97 சதவீதம் நீர் இருப்பு மணிமுத்தாறு அணை நிரம்பி ததும்புகிறது-விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Manimuthar ,Nellai ,Manimutthar Dam ,Manimuthar dam ,Dinakaran ,
× RELATED நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம்...