×

கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் முதல்வர் தானே முன்வந்து சிபிஐ விசாரணை கோரவேண்டும் முதல்வர் எடப்பாடி பதற்றமாக இருப்பதால் சந்தேகம்

மன்னார்குடி: கொடநாடு பிரச்னையில் தமிழக போலீசார் விசாரிப்பதைவிட சிபிஐ விசாரிப்பதே நியாயமாக இருக்கும். தன் மீதான களங்கத்தை போக்க, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தானே முன்வந்து சிபிஐ விசாரணை கோரவேண்டும் என திவாகரன் வலியுறுத்தியுள்ளார். அண்ணா திராவிடர் கழக பொதுச்செயலாளர் திவாகரன் நேற்று திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:  தெகல்கா முன்னாள் ஆசிரியர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரிடையாக குற்றம்சாட்டுகிறார். மேலும் இதில் துணை முதல்வர் ஓபிஎஸ்சுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

குற்றச்சாட்டிற்கு ஆளானவர்கள் தாங்கள் குற்றவாளிகள் இல்லை என்பதை மக்கள் மத்தியில் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அதுதான் நியாயமாக இருக்கும்.இப்பிரச்னையை முதல்வர் தலைமையில் உள்ள காவல்துறை விசாரிப்பதைவிட உண்மைகள் வெளிவர வேண்டுமானால் சிபிஐ விசாரிக்க வேண்டும். மடியில் கனமில்லை என்றால் வழியில் பயப்படத்தேவையில்லை. அதனால் கொடநாடு பிரச்னைக்கு சிபிஐ விசாரணை வேண்டும் என தமிழக முதல்வரே கோர வேண்டும். மேலும் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு நேர்மையான முறையில் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்.  இவ்வாறு திவாகரன் கூறினார்.


கும்பகோணம்: கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பதற்றமாக இருப்பதால் சந்தேகம் ஏற்படுகிறது என்று டிடிவி தினகரன் கூறினார்.தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த சுவாமிமலையில் அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் நேற்று அளித்த பேட்டி: முதல்வர் மீது கொலை, கொள்ளை புகார் சொன்னவர்களை டெல்லிக்கே சென்று அவசர அவசரமாக கைது செய்தது ஏன்?. இதுபற்றி அவர்களிடம் நீதிமன்றமே கேள்வி கேட்டுள்ளது. தன் மீது தவறு இல்லை என்றால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிரூபிக்கட்டும். ஆனால் தற்போது முதல்வர் பதற்றமாக காணப்படுகிறார், அவசரப்படுகிறார். இதை பார்த்தால் முதல்வர் மீது சந்தேகத்துக்கு இடமுண்டோ என நினைக்க தோன்றுகிறது. இதுகுறித்து காலம் வரும்போது உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி தொடர்பாக ஒரு சில மாநில கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. சீட் பிரச்னை வந்தால் தனித்து போட்டியிடுவோம். இவ்வாறு டிடிவி.தினகரன் கூறினார்.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chief Minister ,murders ,Kodanad ,CBI , Chief Minister, Kodanad murders, should seek CBI probe ,suspicion ,Chief Ministe,r Edappadi
× RELATED வறட்சி நிவாரணத்தை உடனடியாக விடுவிக்க...