×

லோக்பால் தேடல் குழுவுக்கு பிப்ரவரி இறுதி வரை கெடு: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: லோக்பால் அமைப்புக்கான பெயர்களை தேடல் குழு பரிந்துரை செய்வதற்கு பிப்ரவரி இறுதி வரை அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரதமர், மத்திய அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிப்பதற்கு வகை செய்யும் லோக்பால் சட்டத்தை கடந்த 2013ம் ஆண்டு மத்திய அரசு நிறைவேற்றியது. ஆனால், இந்த அமைப்பு இன்னும் ஏற்படுத்தப்படவில்லை. இந்த அமைப்புக்கு தலைவர், உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பாக, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய்  தலைமையில்  8 பேர் கொண்ட தேடல் குழு கடந்தாண்டு அமைக்கப்பட்டது. லோக்பால் அமைப்புக்கான தலைவர், உறுப்பினர்களாக யாரை நியமிக்கலாம் என அரசுக்கு இக்குழு பரிந்துரை செய்ய வேண்டும்.குழுவின் பரிந்துரையை தொடர்ந்து, பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, மக்களவை சபாநாயகர் ஆகியோர் அடங்கிய தேர்வுக்குழு இந்த பரிந்துரைகளை இறுதி செய்து, அவர்களை நியமிக்கும்.

இந்நிலையில், லோக்பால் அமைக்கப்படாததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.  மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ெஜனரல் வேணுகோபால், “உள்கட்டமைப்பு மற்றும் மனிதவள சக்தி பற்றாக்குறை உள்ளிட்ட சில காரணங்களால், தேடல் குழுவால் தனது பரிந்துரை பட்டியலை வழங்க முடியவில்லை” என்றார். இதை கேட்ட நீதிபதிகள், “ தேடல் குழுவுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை மத்திய அரசு ஏற்படுத்தி தர வேண்டும். இக்குழு தனது பரிந்துரையை பிப்ரவரி மாதம் இறுதிக்குள் வழங்க வேண்டும். இந்த வழக்கு மீண்டும் மார்ச் 7ம் தேதி விசாரிக்கப்படும்” என்று உத்தரவிட்டனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : search committee ,Supreme Court , Lokpal search panel,late till February,Supreme Court orders
× RELATED கபில் சிபலுக்கு காங்கிரஸ் வாழ்த்து