×

கிழக்கு கடற்கரை சாலையில் மக்கள் வெள்ளம்: கேளிக்கை விடுதிகள், ரிசார்ட்கள் நிரம்பின

சென்னை:  பொங்கல் திருவிழாவின் நான்காம் நாளான காணும்பொங்கலை முன்னிட்டு, பொதுமக்கள் சுற்றுலாத்தலங்கள், கோயில்களுக்கு செல்வது வழக்கம். இந்த ஆண்டும் வழக்கம்போல் அதிகாலை முதலே சென்னையை ஒட்டிய கிழக்கு கடற்கரை சாலையில் மக்கள் குவியத்தொடங்கினர். காணும்பொங்கலையொட்டி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தாம்பரம், கோயம்பேடு, உயர் நீதிமன்றம் உள்ளிட்ட இடங்களில் இருந்து மாமல்லபுரம், கோவளம், திருப்போரூர், வண்டலூர் ஆகிய இடங்களுக்கு சிறப்பு மாநகரப் பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான மோட்டார் சைக்கிள்கள், கார், வேன் என வாகனங்கள் குவிந்ததால் கிழக்கு கடற்கரை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் மாமல்லபுரத்திற்கு வெளியே பைபாஸ் சாலையிலேயே திருப்பி விடப்பட்டன. இருப்பினும் பொதுமக்களின் வசதிக்காக பைபாஸ் சாலையில் இருந்து பேருந்து நிலையம் வரை அனுமதி பாஸ் வழங்கப்பட்ட ஆட்டோக்கள் மட்டும் நகரப் பகுதிக்குள் அனுமதிக்கப்பட்டது. மாட்டு வண்டி, லோடு ஆட்டோ, மினி வேன் போன்ற வாகனங்களில் குடும்பமாக வந்தவர்கள் கடற்கரை கோயில், கலங்கரை விளக்கம், அர்ச்சுனன் தபசு, ஐந்து ரதம் என பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்து கையோடு எடுத்து வந்திருந்த சாப்பாட்டை ஆங்காங்கே கும்பலாக அமர்ந்து ருசித்தனர். சாப்பாடு எடுத்து வராதவர்கள் ஓட்டல்களை முற்றுகையிட்டனர். இதனால் ஓட்டல் மற்றும் சிற்றுண்டி கடைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

 காணும் பொங்கலான நேற்று சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காடு படகுத்துறை, கோவளம் மற்றும் மாமல்லபுரத்தை சுற்றிப் பார்த்ததாக சுற்றுலா வழிகாட்டிகள் தெரிவித்தனர். மேலும் கடலில் யாரும் குளிக்காமல் இருக்கும் வகையில் மாமல்லபுரம் கடற்கரையில் சவுக்கு கட்டைகளால் தடுப்பு அமைக்கப்பட்டிருந்தது. இருப்பினும் சவுக்கு கட்டை தடுப்புகளை தாண்டி பொதுமக்கள் கடற்கரையில் நின்று கால் நனைத்தனர். ஆனால் குளிக்கவும், கடலுக்குள் நீந்தி செல்லவும் தனியார் படகுகளில் செல்லவும் போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இருப்பினும் யாரேனும் அலையில் சிக்கினால் காப்பாற்றும் வகையில் பாதுகாப்பு கருதி தீயணைப்பு வீரர்களும், மீனவர்களும் கடலோரப் பாதுகாப்புப் படை போலீசாருடன் கண்காணிப்பில் ஈடுபட்டனர். மேலும் நீரிலும், கடற்கரை மணலிலும் செல்லும் நவீன வாகனமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டது. போலீஸ் கட்டுப்பாடுகளை மீறுபவர்களை மைக் மூலம் போலீசார் எச்சரித்தபடி இருந்தனர். மாமல்லபுரம் போலீஸ் டி.எஸ்.பி. சுப்பாராஜி, இன்ஸ்பெக்டர்கள் மாமல்லபுரம் ரவிக்குமார், சிரஞ்சீவி, கேளம்பாக்கம் பாண்டி, திருப்போரூர் கண்ணன், திருக்கழுக்குன்றம் அய்யனாரப்பன் ஆகியோர் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் கோவளம் சந்திப்பு, வண்டலூர் - கேளம்பாக்கம் சந்திப்பு, பூஞ்சேரி சந்திப்பு, மாமல்லபுரம் புறவழிச்சாலை உள்ளிட்ட இடங்களில் தடுப்பு வேலி அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் ஓட்டல்கள், கடற்கரை ரிசார்ட்களிலும், வி.ஜி.பி, எம்.ஜி.எம்., முதலைப்பண்ணை உள்ளிட்ட தனியார் கேளிக்கை மையங்களிலும், முட்டுக்காடு படகுத்துறை, முதலியார் குப்பம் படகுத்துறை, கோவளம் கடற்கரை, தர்கா, புனித மாதா கோயில், திருவிடந்தை நித்திய கல்யாண பெருமாள் கோயில், மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயில், திருப்போரூர் கந்தசுவாமி கோயில், கிருஷ்ணன்காரணை சாய்பாபா கோயில், புதுப்பாக்கம் ஆஞ்சநேயர் கோயில் ஆகிய இடங்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. அனைத்து கோயில்களிலும் ஏராளமானோர் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : East Coast Road ,resorts ,entertainment hotels , People, East Coast Road flooded,entertainment hotels ,resorts filled
× RELATED சென்னையில் மிதவை உணவக கப்பல் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளது!!