×

அணைகளை தூர்வாராததால் 16 டிஎம்சி தண்ணீர் வீண் : அரசு மீது விவசாயிகள் குற்றச்சாட்டு

ஈரோடு: நீர்மின் அணைகள், பவானிசாகர் அணை தூர்வாரப்படாததால் 16 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலந்துள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.இது குறித்து கீழ்பவானி விவசாயிகள் நலச்சங்க செயலாளர் நல்லசாமி கூறியிருப்பதாவது: பவானிசாகர் அணை கடந்த 1955ல் கட்டப்பட்டது. இதன் கொள்ளளவு 32.8 டிஎம்சி. நீலகிரி மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள மொத்த நீர் மின் அணைகளின் கொள்ளளவு 18.3 டிஎம்சி. நீர்மின் அணைகள் கட்டப்பட்ட நாளில் இருந்து இதுவரை தூர்வாரப்படவில்லை. நீர்மின் அணைகளில் பாதி அளவு சேறும், சகதியும் உள்ளது. இந்நிலையில், கடந்தாண்டு நீலகிரி மாவட்டத்தில் பெய்த பருவமழையால் நீர்மின் அணைகள் மற்றும் பவானிசாகர் அணை ஆகியவை நிரம்பி உபரி நீர் கடலுக்கு திறந்துவிடப்பட்டது. மொத்தம் 16 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலுக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம், அணைகள் தூர்வாரப்படாததே.

அணைகள் முறையாக தூர்வாரப்பட்டிருந்தால் தண்ணீரை இன்னும் கூடுதலாக அணைகளில் தேக்கி வைத்திருக்க முடியும். தமிழக அரசு சரியான திட்டமிடலும், செயலாக்கமும் இல்லாமல் இருப்பதே இந்த அவலநிலைக்கு காரணம். வடகிழக்கு பருவமழையானது வழக்கத்தை விட சராசரியாக 24 சதவீதம் குறைவாக பெய்துள்ளது. அணைகளை தூர்வாரி பருவமழை காலத்தில் தண்ணீரை சேமித்து வைத்திருந்தால் வரும் கோடையை எளிமையாக எதிர்கொண்டிருக்கலாம். எனவே, இனிவரும் காலத்திலாவது அணைகளை தூர்வார அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : DmC ,government , Bhavani Sagar Dam, 16 tmc water, vain
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...