திருச்செங்கோட்டில் பெண்கள் மட்டும் பங்கேற்ற சேவல் ஜல்லிக்கட்டு

திருச்செங்கோடு: திருச்செங்கோட்டில் பெண்கள் மட்டுமே பங்கேற்ற நூதன சேவல் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடந்தது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா அலுவலகத்தின் பின்புறம் உள்ள நந்தவன தெருவில், காணும் பொங்கலையொட்டி, நேற்று சேவல் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில், ஒரு பெரிய வட்டத்தை வரைந்து, அந்த வட்டத்திற்குள் போட்டியாளர் நிறுத்தப்படுவார். அவரது காலில் ஒரு கயிற்றை கட்டி, அதன் மறு முனை சேவலின் காலில் கட்டப்படும். இதையடுத்து, போட்டியாளரின் கண்கள் கட்டப்பட்டு, குறிப்பிட்ட நேரத்திற்குள் வட்டத்தை விட்டு வெளியேறாமல், அந்த சேவலை பிடிக்க வேண்டும். அதேசமயம், கயிற்றை கையாலோ அல்லது காலாலோ இழுத்து சேவலை பிடிக்க கூடாது என்பது விதி. முழுக்க, முழுக்க பெண்கள் மட்டுமே பங்கேற்ற இந்த போட்டியில், பெண்கள், கல்லூரி மாணவிகள் மற்றும் சிறுமிகள் என 30 பேர் கலந்து கொண்டனர். புதுமையான இந்த சேவல் ஜல்லிக்கட்டு போட்டியை, அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர். போட்டியில் வெற்றி  பெற்றவர்களுக்கு வீட்டு உபயோகப் பொருட்கள் பரிசாக  வழங்கப்பட்டது.

சிராவயல் மஞ்சுவிரட்டு - போலீஸ் உட்பட  72 பேர் காயம்:

சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே புகழ்பெற்ற சிராவயல் மஞ்சுவிரட்டு நேற்று நடந்தது. சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. சிராவயல் பொட்டல்கம்பனூர் பரணி கண்மாய், தென்கரை கண்மாய்களில் கட்டுமாடுகளாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. காளைகள் முட்டியதில் 70 பேர் காயமடைந்தனர்.பாதுகாப்பு பணியின்போது கூட்டத்தில் தடுமாறி விழுந்ததில் 2 போலீசாரும் காயமடைந்தனர். இவர்களுக்கு பொட்டல் மருத்துவ முகாமில் சிகிச்சையளிக்கப்பட்டது. பலத்த காயமடைந்த 21 பேர் மேல்சிகிச்சைக்காக திருப்புத்தூர் ஜிஹெச்சில் அனுமதிக்கப்பட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED செல்லுலாய்ட் பெண்கள்