×

3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட பாலகிருஷ்ண ரெட்டியின் எம்எல்ஏ பதவியும் பறிபோனது

சென்னை: போலீஸ் வாகனத்துக்கு தீ வைத்த வழக்கில் 3 ஆண்டு சிறைத்தண்டனை பெற்ற பாலகிருஷ்ண ரெட்டி அமைச்சர் பதவியை தொடர்ந்து, எம்எல்ஏ பதவியும் பறிபோனது.1998ம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் பகுதியில் போலீசாருக்கு எதிராக நடந்த போராட்டத்தில் போலீஸ் வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. இந்த வழக்கில், தமிழக விளையாட்டு துறை அமைச்சராக இருந்த பாலகிருஷ்ண ரெட்டிக்கு கடந்த 7ம் தேதி 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட\து.இந்த தீர்ப்பையடுத்து, பாலகிருஷ்ண ரெட்டி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். உச்ச நீதிமன்றம் 2013ம் ஆண்டு விதித்த தீர்ப்பின்படி, ஒரு எம்எல்ஏ அல்லது எம்பிக்கு எந்த ஒரு வழக்கில் தண்டனை வழங்கப்பட்டாலும், அவரது எம்எல்ஏ அல்லது எம்பி பதவி தானாக பறிபோய் விடும் என்று கூறப்பட்டுள்ளது.

அதன்படி, எம்எல்ஏ பதவி பறிபோனதால் பாலகிருஷ்ண ரெட்டி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். நீதிமன்றத்தின் தீர்ப்பின் நகல் சட்டப்பேரவை செயலாளருக்கு கிடைத்ததும், பாலகிருஷ்ண ரெட்டி எம்எல்ஏ பதவி பறிபோய்விட்டதாகவும், அவர் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஓசூர் தொகுதி காலியாக உள்ளதாகவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் எழுத்துப்பூர்வமாக அளிக்கப்படும் என்று சட்டப்பேரவை உயர் அதிகாரி கடந்த வாரம் கூறி இருந்தார்.

அதன்படி, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தாலும், அரசு இணையதளத்தில் பாலகிருஷ்ண ரெட்டி போட்டியிட்டு வெற்றிபெற்ற ஓசூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்படாமல் இருந்தது.இந்நிலையில், பாலகிருஷ்ண ரெட்டி போட்டியிட்டு வெற்றி பெற்ற ஓசூர் தொகுதி காலியானதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவுக்கு தமிழக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் தற்போது கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதம், இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பாலகிருஷ்ண ரெட்டி போட்டியிட்டு வெற்றி பெற்ற ஓசூர் தொகுதி காலியாக உள்ளதாக, தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தற்போது செய்தி வெளியிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் திமுக தலைவர் கருணாநிதி போட்டியிட்டு வெற்றிபெற்ற திருவாரூர், அதிமுக எம்எல்ஏ மறைவால் திருப்பரங்குன்றம் தொகுதி மற்றும் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது என 20 தொகுதி காலியானதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஓசூர் தொகுதியும் காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதால், தமிழகத்தில் காலியான தொகுதிகளின் எண்ணிக்கை 21ஆக உயர்ந்துள்ளது. வருகிற ஏப்ரல் மாதம் நடைபெறும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலுடன் 21 தொகுதிக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என்று தலைமை தேர்தல் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

உச்சநீதிமன்றத்தில் அப்பீல்
முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணை ரெட்டி தனக்கு விதிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்தும் சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை ரத்து செய்யக்கோரியும் பாலகிருஷ்ணா ரெட்டி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.  இந்த வழக்கு எப்போது விசாரணைக்கு வரும் என்று தெரியாத நிலையில், பாலகிருஷ்ணா ரெட்டி சார்பில் அவரது வக்கீல்கள் இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் முன்னிலையில் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்குமாறு உத்தரவிடக்கோரி முறையிட உள்ளதாக அவரது தரப்பு வக்கீல்கள் தெரிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Balakrishna Reddy ,MLA , Balakrishna Reddy, MLA's post, ministerial post
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...