×

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றம்சாட்டிய சயான், மனோஜ் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

சென்னை: கொடநாடு கொலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புப்படுத்தி குற்றம் சாட்டிய கூலிப்படை தலைவன் சயான், மனோஜ் ஆகியோர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகின்றனர். அதேநேரம் பழைய வழக்குகளில் இருவரையும் கைது ெசய்ய போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, கடந்த 2017 ஏப்ரல் 24ம் தேதி கொடநாடு எஸ்டேட்டிற்குள் சென்ற ஒரு கும்பல், செக்யூரிட்டியை கொலை செய்து விட்டு, அங்கிருந்த ஆவணங்கள், பணத்தை கொள்ளையடித்துச் சென்றது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான கொடநாடு பங்களாவில் ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ், கேரளாவை சேர்ந்த கூலிப்படை தலைவன் சயானின் மனைவி, மகள் ஆகியோரும் சாலை விபத்தில் உயிரிழந்தனர். இந்த கொடநாடு விவகாரத்தில் அடுத்தடுத்தது 5 பேர் மர்மமான முறையில் உயிரிழந்தனர். இந்த வழக்கில் கூலிப்படை தலைவன் சயான் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே உள்ளனர்.

இந்நிலையில் டெல்லியில் கடந்த 11ம் தேதி தெகல்கா பத்திரிகை முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல், கூலிப்படை தலைவன் சயான், மனோஜ், வாளையார் ரவி உட்பட 6 பேர், கொடநாடு விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பு இருப்பதாக பரபரப்பு பேட்டியளித்தனர். வழக்கு தொடர்பாக 16 நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோ ஆவணங்களையும் வெயியிட்டனர்.

அதைதொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக பேட்டி அளித்த தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல், கூலிப்பட தலைவர் சயான் மற்றும் மனோஜ், வாளையார் ரவி உட்பட 6 பேர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஐபிசி 153(ஏ), 505(1)(ஏ)(பி), 505(2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.பின்னர் 6 பேரையும் கைது செய்ய போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவுப்படி, இணை கமிஷனர் அன்பு மேற்பார்வையில், மத்திய குற்றப்பிரிவின் துணை கமிஷனர் செந்தில்குமார், உதவி கமிஷனர் கனகராஜ் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. துணை கமிஷனர் செந்தில்குமார் தலைமையிலான தனிப்படை ேபாலீசார் டெல்லிக்கு சென்று கடந்த 13ம் தேதி அதிரடியாக கூலிப்படை தலைவர் சயான், மனோஜ் ஆகியோரை துவராகா பகுதியில்  உள்ள தனியார் தங்கும் விடுதியில் சுற்றி வளைத்து கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.கைது செய்யப்பட்ட சயான் மற்றும் மனோஜிடம் மத்திய குற்றப்பிரிவு இணை கமிஷனர் அன்பு மற்றும் துணை கமிஷனர் செந்தில் குமார் ஆகியோர் 10 மணி நேரம் தொடர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள் என்ன என்பது உள்ளிட்ட நூற்றுக்கும் ேமற்பட்ட கேள்விகள் கேட்டகப்பட்டது. பின்னர் எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் சரிதா முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அப்போது, மாஜிஸ்திரேட் சரிதா இருவர் மீதும் போடப்பட்ட சட்டப்பிரிவுக்கும் கைதுக்கும் எந்த தொடர்பு இல்லை என்று சிறையில் அடைத்த மறுப்பு தெரிவித்துவிட்டார்.

 பின்னர் வழக்கு பதிவில் திருத்தம் செய்து வர கோரி போலீசாருக்கு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இரவு 11.30 மணிக்கு மீண்டும் சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் சரிதா வீட்டில் 2 வரையும் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது தாக்கல் செய்த மனுவில் மாஜிஸ்திரேட் கூறியபடி போலீசார் வழக்கில் பதிவு செய்யப்பட்ட சட்ட பிரிவில் எந்த திருத்தமும் செய்யவில்லை என்று கூறப்படுகிறது.இதையடுத்து மாஜிஸ்திரேட் இருவரையும் சிறையில் அடைக்க முடியாது என்று கூறி வழக்கில் இருந்து விடுவித்தார்.இருவரையும் வரும் 18ம் தேதி காலை 10 மணிக்கு நீதிமன்றத்தில் வக்கீல்களுடன் ஆஜராக வேண்டும் என்றும் ரூ.10 ஆயிரம், 2 பேர் உங்களுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அதில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்றும் மாஜிஸ்திரேட் தெரிவித்திருந்தார். அதன்படி இன்று காலை 10 மணிக்கு கொடநாடு வழக்கில் தொடர்புடைய கூலிப்படை தலைவன் சயான் மற்றும் மனோஜ் ஆகியோர் எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் போலீசார் இருவரையும் தமிழகத்தில் உள்ள பழைய வழக்குகளில் ஏதேனும் ஒன்றில் தொடர்புபடுத்தி கைது செய்வதற்கான பணியில் ஈடுபட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chiranjeevi ,Manoj ,Edappadi Palanisamy , Kodanad murder, Chief Minister Edappadi Palaniasamy, Siyan, Manoj
× RELATED பிரதமர் மோடி வருகையை ஒட்டி பாதுகாப்பு...