×

ஏஞ்சல் வரி விலக்கு பெறுவதற்கான விதிகளை எளிமையாக்கியது மத்திய அரசு

* வங்கி மதிப்பீடு சமர்ப்பிக்க தேவையில்லை
* 45 நாட்களுக்குள் விண்ணப்பம் பரிசீலனை
புதுடெல்லி: ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்வோர் ஏஞ்சல் வரியில் இருந்து விலக்கு பெறுவதற்கான விதிகளை மத்திய அரசு எளிமையாக்கியுள்ளது.  ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஐடியாவை முதன்மையாக வைத்துதான் தொடங்கப்படுகின்றன. பல ஆன்லைன் நிறுவனங்கள் ஸ்டார்ட் அப் நிறுவனமாக துவக்கப்பட்டவைதான். இவை வெளிநாடுகளில் இருந்து முதலீடு  பெறுகின்றன.  பெரிய முதலீட்டாளர்கள் பலர் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை போலியாக உருவாக்கி அதில் முதலீடு செய்வதாக புகார்கள் வந்ததை தொடர்ந்து, இந்த வரி ஏய்ப்பை தடுக்க  ஏஞ்சல் வரி 2012ம் ஆண்டு மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டது.  ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் ஐடியாவை பொறுத்து  வளர்ச்சி வேகம் சாத்தியமாகும். இதை மனதில் வைத்துதான் முதலீட்டாளர்கள் முதலீடு செய்கின்றனர். நல்ல ஐடியாவுடன் துவக்கப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனம் விரைவாக வளர்ச்சி பெறும் என்றால், அதை மனதில் வைத்து சந்தை மதிப்புக்குமேல் முதலீடு செய்யப்படுகிறது. இங்கேதான் சிக்கல் ஆரம்பிக்கிறது. இவ்வாறு சந்தை மதிப்புக்கு மேல் செய்யப்படும் முதலீடுகளை வருமான வரித்துறை இதர வருவாயாக கருதி கூடுதல் முதலீட்டுக்கு வருமான வரி சட்டப்பிரிவு 59 பிரிவு 2ன் படி 30.9 சதவீதம் வரி வசூலிக்கிறது. இப்படி நிறைய ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு சுமார் 40 லட்சம் வரை வரி செலுத்தக்கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

 இதனால் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் கலக்கம் அடைந்தன. ஸ்டார்ட் அப் திட்டத்தை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இதற்கு நேர் மாறாக வரி கெடுபிடிகள் அமைவது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் இந்த நிறுவனங்கள் இந்தியாவில் இருந்து இடம்பெயரும் நிலை உருவானது. இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதற்கு மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு ஒப்புதல் அளித்துள்ளார் என தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டு துறை தெரிவித்துள்ளது.  இதன்படி வரி விலக்கு கோரும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டு துறையிடம் விண்ணப்பிக்க வேண்டும். இந்த துறையின் பரிசீலனைக்குபிறகு மத்திய நேரடி வரிகள் ஆணையத்திடம் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். முன்பு வரி விலக்கு பெற அமைச்சர்கள் குழுவிடம் விண்ணப்பிக்க வேண்டியிருந்தது. இது இனி தேவையில்லை. இதுபோல், வங்கியிடம் இருந்து நிறுவன மதிப்பீடு சான்று பெறவும் இனி தேவையில்லை.  ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் முந்தைய மூன்று நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கு விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். இதுபோல் முதலீட்டாளர்களும் தங்களது நிகர சொத்து மதிப்பு மற்றும் வருமான வரி கணக்கு விவரங்களை தர வேண்டும். மேற்கண்ட விண்ணப்பத்தை பரிசீலனை செய்து 45 நாட்களுக்குள் முடிவு அறிவிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இரண்டு நிறுவனங்கள் மட்டுமே தொழில் கொள்கை மேம்பாட்டு துறையிடம் அனுமதி பெற்று வரி விலக்கு பெற்றுள்ளன. புதிய நடைமுறையால் அதிக ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பலனடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : government , central government,simplified,rules, obtaining the tax deductions
× RELATED ஒன்றிய அரசு குறித்து அமெரிக்கா மீண்டும் விமர்சனம்