×

பிரக்சிட் ஒப்பந்தம் தோற்கடிக்கப்பட்ட பிறகு நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் தெரசா மே வெற்றி: புதிய ஒப்பந்தம் தயாரிக்க முடிவு

லண்டன்: இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் தெரசா மே  வெற்றி பெற்றார்.ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேற கடந்த 2016ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. அதன்படி, வரும் மார்ச் 29ம் தேதிக்குள் இந்த கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேற வேண்டும். இது  தொடர்பாக, பல்வேறு தரப்பினருடன் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே பேச்சுவார்த்தை நடத்தி பிரக்சிட் ஒப்பந்தத்தை தயாரித்து வருகிறார். இந்த ஒப்பந்தத்தில் வடக்கு அயர்லாந்து மிகப்பெரிய தடைக்கல்லாக இருந்து வருகிறது.   வடக்கு ்அயர்லாந்து இங்கிலாந்தின் ஒரு பகுதி. இது, ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பில் உள்ளது. ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறினால், வடக்கு அயர்லாந்து, தெற்கு அயர்லாந்து இடையே  எல்லைல விசா நடைமுறை பிரச்னைகள் போன்றவை ஏற்படும் நிலைமை உள்ளது. இந்த விதமான ஒப்பந்தத்துக்கு ஆளும் கன்சர்வேடிவ் கட்சி எம்.பி.க்களே எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதனால், பிரக்சிட் ஒப்பந்தத்துக்கு  நாடாளுமன்றத்தில் ஒப்புதல் கிடைக்கவில்லை.

இதை இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவற்கான ஓட்டெடுப்பு கடந்த 15ம் தேதி நடந்தது. அதில், ஒப்பந்தத்துக்கு எதிராக 432 ஓட்டுக்களும், ஆதரவாக 202 ஓட்டுக்களும் கிடைத்ததால் பிரக்சிட் ஒப்பந்தம்  தோல்வியடைந்தது. இதையடுத்து, பிரதமர் தெரசா மே மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. கடந்த 26 ஆண்டுகளில் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு  வரப்பட்டது இதுவே முதல் முறை. இந்த தீர்மானத்தின் மீது நேற்று முன்தினம் விவாதம் நடந்தது. இதில் பேசிய தெரசா மே, ‘‘பிரக்சிட் ஒப்பந்தம் தொடர்பாக ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்தியுள்ளேன். இது தொடர்பாக  வரும் நாட்களில் அனைத்துக் கட்சி எம்பி.க்கள், அரசு உயரதிகாரிகளுடன் இணைந்து செயல்படதயாராக இருக்கிறேன். இங்கிலாந்து மக்களின் நம்பிக்கையை பெறுவதை இந்த நாடாளுமன்றம் உறுதி செய்ய வேண்டும். நான்  அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தி, மாற்றியமைக்கப்பட்ட பிரக்சிட்  ஒப்பந்தத்துடன் நாடாளுமன்றத்துக்கு திங்கட்கிழமை வருவேன்’’ என்றார்.

அதன்பின் நடந்த வாக்கெடுப்பில் தெரசா மே வெற்றி பெற்றார். அவருக்கு ஆதரவாக 325 ஓட்டுகளும், எதிராக 306 ஓட்டுகளும் கிடைத்தன. மிகவும் குறைவான ஓட்டு வித்தியாசத்தில் தெரசா மே அரசு தப்பித்தது. அதன் பிறகு  தெரசா மே அளித்த பேட்டியில், ‘‘நம்பிக்கை வாக்கெடுப்பில் எனது அரசு வென்றுள்ளது. இது பிரக்சிட் ஒப்பந்தத்துக்கு தீர்வு காண நாம் அனைவருக்கும் வாய்ப்பு அளித்துள்ளது. நாம் ஐரோப்பிய கூட்டமைப்பில் வெளியேற  வேண்டும் என இங்கிலாந்து மக்கள் விரும்புகின்றனர். இதில், மக்கள் கவலைப்படும் விஷயங்களுக்கு நாம் தீர்வு காண வேண்டும். சுயநலத்தை ஒதுக்கிவைத்து விட்டு நாம் ஒரு முடிவுக்கு வரவேண்டிய நேரம் இது. விருப்பம்  இல்லாத விஷயங்கள் எவை என்பதை  எம்பி.க்கள் தெளிவாக கூறி விட்டனர்.எனவே, நாம் அனைவரும் ஒன்றாக பணியாற்றி ஒப்பந்தத்தை தயாரிக்க வேண்டும். இதற்காகத்தான் நான் அனைத்து கட்சி எம்பி.க்களையும் வரவேற்கிறேன். அனைத்து கட்சி தலைவர்களும் ஆக்கப்பூர்வமான கருத்துகளுடன்  என்னை சந்தித்து தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தலாம்’’ என்றார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Theresa May ,defeat ,confidence vote , Praktiče ,Agreement, Prime Minister ,Theresa , Decision, deal
× RELATED அரசியலில் இருந்து தெரசா மே விலகல்