ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் 3வது சுற்றில் செரீனா: ஹாலேப் போராடி வெற்றி

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய  ஓபன் டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் விளையாட, அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், நம்பர்-1 வீராங்கனையான ரோமானியாவின் ஹாலேப்  தகுதி பெற்றுள்ளனர். மெல்போர்னில் நடக்கும் இத்தொடரில் நேற்று நடந்த 2ம் சுற்றில் ஹாலேப், அமெரிக்காவின் கெனினை எதிர்த்து விளையாடினார். முதல் செட்டை ஹாலேப் 6-4 என்ற கணக்கில் கைப்பற்ற, 2வது செட்டில் கெனின் கடுமையாக  போராடி 7-6 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். பரபரப்பான 3வது செட்டில் ஹாலேப் அதிரடியாக ஆட 6-4, 6-7, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 3வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த வெற்றிக்காக ஹாலே இரண்டரை  மணி நேரம் போராடினார்.

மற்றொரு போட்டியில் செரீனா வில்லியம்ஸ் (16வது ரேங்க்), கனடாவின் பவுச்சர்டை (79வது ரேங்க்) எதிர்த்து விளையாடினார். வெறும் 1 மணி 10 நிமிடங்களில் செரீனா 6-2, 6-2 என்ற நேர் செட்களில் அதிரடி வெற்றி பெற்றார்.  இவரது சகோதரியான வீனஸ் வில்லியம்ஸ் 6-3, 4-6, 6-0 என்ற செட்களில் பிரான்சின் கார்னட்டை வென்றார். 3வது சுற்றில் வீனஸ், ஹாலேப்பை சந்திக்கிறார். ஜப்பானின் ஒசாகா 6-2, 6-4 என்ற நேர் செட்களில் சுலோவேனியாவின் ஜிடான்செக்கையும், ஸ்பெயினின் முகுருசா 6-4, 6-7, 7-5 என்ற செட்களில் இங்கிலாந்தின் கோன்டாவையும் வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறினர்.ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர்-1 வீரரான செர்பியாவின் ஜோகோவிச் 6-3, 7-5, 6-4 என்ற செட்களில் வைல்ட்கார்டு வீரரான பிரான்சின் சோங்காவை வீழ்த்தி 3வது சுற்றுக்குள் நுழைந்தார். ஜப்பானின் நிஷிகோரி, ஜெர்மனியின் ஜிவெரவ் ஆகியோர் 3ம் சுற்றுக்குள் நுழைந்தனர். சுவிட்சர்லாந்தின் வாவ்ரின்காவை 6-7, 7-6, 7-6, 7-6 என்ற செட்களில் கனடாவின் ரயோனிக் போராடி வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

>