×

உலக பிரசித்திபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : சீறிப்பாய்ந்தன 729 காளைகள்

அலங்காநல்லூர்: உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நேற்று கோலாகலமாக நடந்தது. சீறிப்பாய்ந்தன 729 காளைகள்;  பாய்ந்து அடக்கிய 70 இளைஞர்களுக்கு கார் உட்பட பரிசுமழை குவிந்தது. வெளிமாநில மற்றும் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் கண்டுகளித்தனர். பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் முதல் ஜல்லிக்கட்டு ஜன. 15ல் அவனியாபுரம், தொடர்ந்து ஜன. 16ல் பாலமேட்டில் நடந்தது. உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கோட்டை முனியசாமி கோயில் திடலில் நேற்று காலை 8.15 மணியளவில் துவங்கியது. மதுரை கலெக்டர் நடராஜன் தலைமையில், அமைச்சர் உதயகுமார் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

முன்னதாக முனியாண்டி கோயில், காளியம்மன் கோயில், முத்தாலம்மன் கோயில்களில் பரிசு பொருட்களை வைத்து சிறப்பு வழிபாடு நடந்தது. பிறகு மேளதாளம் முழங்க கோயில் காளைகள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டன. வாடிவாசல் வழியாக முதலில் முனியாண்டி கோயில் காளை உள்ளிட்ட 5 கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

தொடர்ந்து வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளை, ‘காளையர்கள்’ அடக்கினர். நேற்றைய ஜல்லிக்கட்டில் மொத்தம் 729 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 691 வீரர்கள் களத்தில் இறங்கி காளைகளை பிடித்தனர். சில காளைகள் களத்தில் நின்று, வீரர்களுக்கு போக்கு காட்டி, பிடிக்க வந்த வீரர்களை பந்தாடி, தூக்கி வீசின. இது பார்வையாளர்களை பரவசப்படுத்தியது. ஜல்லிக்கட்டின்போது 30 வீரர்கள் காயமடைந்தனர். படுகாயமடைந்திருந்த 6 பேர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஜல்லிக்கட்டில் சிறந்த வீரர்களாக 3 பேர் தேர்வு செய்யப்பட்டனர். 15 காளைகளை பிடித்த மாடுபிடி வீரரான அலங்காநல்லூரை சேர்ந்த ரஞ்சித் முதல் பரிசை வென்றார். இவருக்கு கார் பரிசாக அறிவிக்கப்பட்டது. 10 காளைகளை பிடித்த மதுரை மேட்டுப்பட்டியை சேர்ந்த கார்த்திக் 2வது பரிசையும், 9 காளைகளை பிடித்த அலங்காநல்லூர் அஜய் மூன்றாம் பரிசையும் வென்றனர்.

இதுதவிர 3 காளைகள் சிறந்ததாக தேர்வு செய்யப்பட்டன. மதுரை அருகே பறம்புப்பட்டியை சேர்ந்த செல்லியம்மன் கோயில் காளை முதல் பரிசை வென்றது. இக்காளைக்கு கார் பரிசாக அறிவிக்கப்பட்டது. அவனியாபுரம் சிஆர் கார்த்திக் காளைக்கு 2வது பரிசு, குருவித்துறையை சேர்ந்த சந்தோஷ் காளைக்கு 3வது பரிசு கிடைத்தது. களத்தில் பிடிபடாத காளைகளுக்கும், சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

 பத்துக்கும் மேற்பட்ட இடத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி போலீசார் கண்காணித்தனர். பார்வையாளர்கள் காண வசதியாக 5 இடங்களில் டிஜிட்டல் ஸ்கிரீன் அமைக்கப்பட்டிருந்தது. மதுரை எஸ்பி மணிவண்ணன் தலைமையில், 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஜல்லிக்கட்டையொட்டி அலங்காநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் விழாக்கோலம் பூண்டிருந்தன. ஆஸ்திரேலியா, இத்தாலி, ஸ்வீடன், ஹாங்காங், ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும், ஏராளமான சுற்றுலாப்பயணிகள் ஜல்லிக்கட்டை காண அலங்காநல்லூர் வந்திருந்தனர். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக தனி கேலரி ஒதுக்கப்பட்டிருந்தது. இவர்கள் சுற்றுலாத்துறை சிறப்பு ஏற்பாட்டில் அழைத்து வரப்பட்டிருந்தனர். ெவளிமாநிலங்களை சேர்ந்தவர்களும் அதிக அளவில் கலந்து கொண்டனர்.  மதுரை கலெக்டர் நடராஜன் நடராஜன் கூறும்போது, ‘‘உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி மதுரையில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் அமைதியாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதலிடம் பிடித்த வீரர், காளை உரிமையாளர் ஆகிய இருவரும் சென்னை அழைத்துச் செல்லப்பட்டு முதல்வர், துணை முதல்வரிடம் இருந்து, கார் பரிசுகளை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.

பார்வையாளர் உயிரிழப்பு உறவினர்கள் வாக்குவாதம்: அலங்காநல்லூரை சேர்ந்தவர் பெரியகாங்கேயன் (45). இவர் ஜல்லிக்கட்டை காண வந்தபோது, போட்டி நடக்கும் இடத்திற்கு வெளியே திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. அங்கிருந்தோர் சிகிச்சைக்காக இவரை இங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிரிழந்தார். ஆனால் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவக்குழுவினர் அனுப்பி வைக்க முயன்றனர். இதை கண்டித்து அவரது உறவினர்கள் மருத்துவக்குழுவினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் இங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார், உறவினர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
மத்தியக்குழு ‘வெளிநடப்பு’: போட்டியில் பங்கேற்கும் காளைகளை கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது, மிட்டல் தலைமையிலான மத்தியக்குழுவினர், கால்நடை மருத்துவர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்தனர். இதனால் தமிழ்நாடு கால்நடை மருத்துவர்களுக்கும், மத்தியக்குழுவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து மத்தியக்குழு கால்நடை மருத்துவர்கள், ஜல்லிக்கட்டு போட்டியிலிருந்து வெளியேறினர்.

காளைகள் டோக்கன் மோசடி காளைகள் தவிப்பு:

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு 1,400 காளைகள் பதிவு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், டோக்கன்கள் வழங்கப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. இது குறித்து காளை உரிமையாளர்கள் மதுரை பழங்காநத்தம் செல்வம், கிடாரிப்பட்டி முத்துகிருஷ்ணன் கூறும்போது, ‘‘அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அதிகபட்சமாக 600 காளைகளை களமிறக்கலாம். அதனால் 800 காளைகள் பதிந்து, 650 காளைகளை அவிழ்க்கலாம் என பலமுறை கலெக்டரும், எஸ்பியும் பேட்டி கொடுத்தனர். ஆனால் முதல் 450 டோக்கன்களை கணக்கில் கொண்டு வராமல், வேண்டியவர்களுக்கு கொடுத்து விட்டனர். ஜல்லிக்கட்டு காளைகளை பிடித்துக் கொண்டு கையில் டோக்கனுடன் வாடிவாசலில் விட முடியாமல் நடுரோட்டில் தவிக்கிறோம். ஜல்லிக்கட்டு நடத்த போராடினோம். தற்போது எங்களது காளைகளை பங்கு பெற வைக்கவும் போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த முறைகேட்டை தடுத்து நிறுத்த வேண்டும்’’ என்றனர்.

போலீஸ் மீது கல்வீச்சு:

அலங்காநல்லூரில் காளைகள் வெளியேறும் இடத்தில், உரிமையாளர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் போலீசாருக்கும், உரிமையாளர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது போலீசார் மீது சிலர் கற்களை வீசியதால், திடீர் பரபரப்பு ஏற்பட்டது.



‘காளை’களுக்கு ஜாக்பாட்
729 காளைகள், 691 வீரர்கள் பங்கேற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் பரிசு வென்ற வீரர், காளைக்கு கார் பரிசு அறிவிக்கப்பட்டது. இரண்டு, மூன்றாம் பரிசு பெற்ற வீரர், காளைக்கு பைக் பரிசு வழங்கப்பட்டது. இதுதவிர, சிறப்பாக விளையாடிய 80 வீரர்கள், பிடிபடாத 75 காளைகளின் உரிமையாளர்களுக்கு சைக்கிள், பீரோ, கட்டில், அண்டா, மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. இதுதவிர, பங்கேற்ற அனைத்து வீரர்களுக்கும் ஊக்கப்பரிசு வழங்கப்பட்டது.

விஐபி கேலரி சரிந்தது
போட்டியின்போது விஜபி கேலரி திடீரென சரிந்ததால் பரபரப்பு நிலவியது. இதையடுத்து கேலரியில் அமர யாரையும் அனுமதிக்கவில்லை. தொடர்ந்து விஐபி கேலரிக்கு முட்டுக் கொடுக்கப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : World , Alankanallur Jallikattu, 729 Bulls
× RELATED சில்லி பாயின்ட்…