×

வடலிவிளையில் பொங்கல் விளையாட்டுப் போட்டி 114 கிலோ இளவட்டக்கல் தூக்கிய இளைஞர்கள்

*உரலை அசாத்தியமாக தூக்கும் பெண்கள்

பணகுடி : வடலிவிளையில் நடந்த பொங்கல் விளையாட்டு போட்டியில் இளைஞர்கள் இளவட்டக்கல்லையும், பெண்கள் உரலையும் தூக்கி அசத்தினர்.நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகேயுள்ள வடலிவிளையில் 22வது ஆண்டாக இரண்டு நாட்கள் பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடந்தது. நேற்று காலை முதல் சிறுவர்களுக்கான போட்டி, கோலப்போட்டி, கயிறு இழுத்தல், கபடி என பல்வேறு போட்டிகள் நடந்தது.

மாலையில் இளவட்டக்கல் தூக்கும் போட்டி நடந்தது. இதில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். முதலில் 114 கிலோ இளவட்டக்கல்லை தூக்கும் போட்டி நடந்தப்பட்டது. இதில் தங்கராஜ்(22) என்ற வாலிபர் இளவட்டக்கல்லை தூக்கி அசத்தினார். அவர் இளவட்டக்கல்லை தோல்களில் சுமந்து கழுத்தை சுற்றியபடியே இருந்து முதலிடத்தை பிடித்தார். தொடர்ந்து செல்லபாண்டி என்பவர் கல்லை தூக்கி இரண்டாமிடம் பிடித்தார்.

alignment=


97 கிலோ எடையுள்ள இளவட்டக்கல் தூக்கும் போட்டியிலும் தங்கராஜ், தோளில் படாமல் இளவட்டக்கல்லை லாவகமாக அதிகமுறை தூக்கி எறிந்து முதலிடம் பெற்றார். தொடர்ந்து பெண்களுக்கான உரல் தூக்கும் போட்டி நடந்தது. இதில் மகாலட்சுமி என்பவர் 20க்கும் மேற்பட்ட முறை 50 கிலோ எடையுள்ள உரலை தூக்கி எறிந்து முதலிடத்தை பெற்றார்.

கங்காதேவி இரண்டாமிடமும், பத்மபிரியா, ஜானகி, ஜெயசுதா உள்ளிட்ட பலரும் ஆர்வமாக முன்வந்து உரலை லாவகமாக தூக்கினர். உரலை ஒரு கையால் தூக்கி அதிகநேரம் வைத்திருப்பவர்களுக்கான போட்டியில் பாலகிருஷ்ணன் முதலிடம், இரண்டாமிடம் விக்னேஸ்வரன் பிடித்தனர். தேங்காய் நெட்டியை பல்லால் உரிக்கும் போட்டியில் முருகன் முதலிடமும், தினேஷ் இரண்டாமிடமும் பெற்றனர். இதில் 114 கிலோ இளவட்டக்கல் தூக்கிய தங்கராஜிக்கு இன்பதுரை எம்எல்ஏ ரூ.5 ஆயிரம் பரிசு வழங்கினார். மேலும் வெற்றி பெற்ற அனைவருக்கும் தலா 2 ஆயிரம், 1000 என பரிசுகளை வழங்கினார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pongal Sports Competition , Pongal festival,competition ,youth ,
× RELATED பொங்கல் விளையாட்டு போட்டி