×

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பிரதமர் தெரசா மே அரசுக்கு எதிரான எதிர்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

லண்டன்: பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பிரதமர் தெரசா மேவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்துள்ளது.

பிரக்சிட் ஒப்பந்த மசோதா

ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவது தொடர்பான பொது வாக்கெடுப்பு கடந்த 2016ம் ஆண்டு நடந்தது. இதில், பெரும்பாலான பொதுமக்கள், ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற வாக்களித்தனர். இதன்படி, வரும் மார்ச் 29ம் தேதிக்குள் இங்கிலாந்து வெளியேற வேண்டும். இதுதொடர்பாக, ஐரோப்பிய நாடுகளுடன் வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக இங்கிலாந்து பிரதமர் தெரசா மே பேச்சுவார்த்தை நடத்தி பிரக்சிட் ஒப்பந்தத்தை கொண்டு வந்துள்ளார்.இந்த ஒப்பந்தத்தால் இங்கிலாந்து பெரும் எதிர்விளைவுகளை சந்திக்க இருப்பதாக, அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆளும் கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்களும் தெரசா மேவின் ஒப்பந்தத்தை எதிர்க்கின்றனர்.

நாடாளுமன்றத்தில் பிரக்சிட் ஒப்பந்த மசோதா தோல்வி

இந்நிலையில், பிரக்சிட் ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கான ஓட்டெடுப்பு நேற்று முன்தினம் நடத்தப்பட்டது. இதில், ஒப்பந்தத்துக்கு எதிராக 432 வாக்குகளும், ஆதரவாக 202 வாக்குகளும் கிடைத்தன. இதன் மூலம், ஒப்பந்தம் படுதோல்வி அடைந்தது. இங்கிலாந்து நாடாளுமன்ற வரலாற்றில் அரசு கொண்டு வந்த தீர்மானம் படுதோல்வியை சந்திப்பது இதுவே முதல் முறை. இதன் காரணமாக தெரசா மே அரசுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டது. ஓட்டெடுப்பில் தோல்வி அடைந்த பின் பேசிய பிரதமர் தெரசா மே, ‘‘இந்த ஒப்பந்தத்தை அவை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது தெளிவாகி உள்ளது. அதே நேரத்தில் அவர்கள் ஏற்றுக்கொள்ள நினைப்பது என்று எதுவுமில்லை. பிரக்சிட் என்பது பொதுமக்கள் எடுத்த முடிவு. அதை நிறைவேற்ற அரசுக்கு உறுப்பினர்கள் ஆதரவு தர வேண்டும்’’ என்றார்.

பிரதமர் தெரசா மேவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்

அதே சமயம், தெரசா மேவுக்கு எதிராக எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி தலைவர் ஜெரேமி கார்பைன் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தின் மீது  6 மணி நேரம் நடைபெற்ற காரசார விவாதத்திற்கு பிறகு வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. அப்போது தீர்மானத்திற்கு எதிராக 325 வாக்குகளும் ஆதரவாக 306 வாக்குகளும் பதிவாகின. இதையடுத்து 19 வாக்குகள் வித்தியாசத்தில் தெரசா மே அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Britain ,Teresa ,parliament ,government , no-confidence motion, Prime Minister, Theresa May, bill, Brexit, the UK
× RELATED ஏழைகளின் தாய்