×

ஜல்லிக்கட்டின் ‘பேட்ட’.... காளைகளின் ‘கோட்டை’

ஜல்லிக்கட்டு என்றாலே உலகமெங்கும் உச்சரிக்கும் ஒரே பெயரான அலங்காநல்லூர், மதுரைக்கு அருகே 18 கிமீ தூரத்தில் உள்ளது. தற்போது தமிழகத்தில் மூலை முடுக்கெல்லாம் ஜல்லிக்கட்டு நடந்து வந்தாலும், ஒவ்வொரு தை மாதமும் மாட்டுப்பொங்கலுக்கு மறுநாள் நடக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு சரித்திரப்புகழ் இருக்கிறது. வீறு கொண்ட காளை வாடிவாசலில் கிளம்பியது முதல் அக்காளையின் திமிலை பிடித்தபடி சுமார் 50 அடிக்குள் அருகிலிருக்கிற மாரியம்மன் கோயில் வரை விழாமல் சென்றாலே வெற்றிதான். வீரர்களிடம் பிடிபடாவிட்டால் காளைக்குப் பரிசு. பிடிபட்டால் காளையருக்குப் பரிசு. மனிதனையும், மாட்டையும் வீரத்தில் ஒரே தராசுக் கோட்டில் வைத்திருந்த தமிழ் சமூகத்தின் நேர்மை அடையாளமாகவும் இது இருக்கிறது.


பல நூற்றாண்டு தொன்மைமிக்க இந்த வீர விளையாட்டு, முதன்முதலாக நான்கு காளைகளை அவிழ்த்து விட்டே ஆரம்பிக்கப்பட்டதாம். இன்றைக்கு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கென மதுரை மாவட்டம் ஆமூர் துவங்கி ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகரில் சாத்தூர், தூத்துக்குடியில் கோவில்பட்டி, தேனியில் கம்பம் மற்றும் கடலூர், திருச்சி என தமிழகத்தின் பல ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான காளைகள் களமிறங்குகின்றன. மாடுபிடி வீரர்களும் இந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்பதை மிகப்பெரிய பெருமையாக கருதுகின்றனர்.

வாடிவாசல் அல்ல...‘கோயில் வாசல்...’


அலங்காநல்லூர் வாடிவாசல் தொன்மையானது. இதை ‘முனியசாமி கோட்டை’ என்கின்றனர். பெண்கள் எப்போதும் இந்த வாடிவாசல் பகுதிக்குள் நுழைய மாட்டார்கள். செருப்பு போட்டு இதற்குள் செல்லக்கூடாது. ஆண்களுக்கு மனச்சுத்தத்துடன் பெண்ணுறவு உள்ளிட்ட ஏதுமின்றி உடற்சுத்தமும் அவசியம். 400 ஆண்டுகளுக்கும் முன்னதாக, நுழைவிடத்தில் இரண்டு கம்புகளை ஊன்றி, வேலி போட்டு அதன் வழியாகவே அடுத்தடுத்து காளைகள் அவிழ்க்கப்பட்டன. அதன்பிறகே, மண்சுவர் வைத்து, மேலே கம்புகள் கட்டி பரண் அமைத்து அமர்ந்து, கீழே இருபுறமும் தென்னை மரத்தை பத்தடி உயரத்துக்கு நட்டு வைத்து, அந்த வாடிவாசல் வழியாக பின்னால் இருந்து காளைகளை கொண்டு வந்து அடுத்தடுத்து விட்டுள்ளனர். ஆங்கிலேயேர் காலத்தில் காளை பிடிப்பதைப் பார்க்க வலது புறத்தில் தனி கேலரி அமைத்தனர். ஊர் நிர்வாகிகளுக்கென பின்னாளில் இடதுபுறமும் ஒரு கேலரி உருவானது.


வாடிவாசல் குறித்து கிராமத்தினர் கூறும்போது, ‘‘வாடிவாசல் முன்பு 2 தென்னை மரத்தை எட்டடி உயரத்து கல்லை ஒட்டி இருபுறமும் நட்டு வைக்கின்றனர். ஓரத்தில் கல்லில் மாடு கொம்பை முட்டி காயப்பட்டு விடாமல் அணைப்பாக இருப்பதால் இதனை ‘அணைமரம்’ என்போம். மேலும் மாடு வரும்போது எந்தப்பக்கம் அதோட பார்வை இருக்கிறது என்பதைத் தெரிந்து, வீரர்கள் மாடு பிடிக்கவும் இது உதவும். இந்த அணை மரத்தை பனைமரமாக வைத்தால், அதில் சிலும்பல் இருக்கும். அதனாலதான் மாட்டுக்கும், மனிதர்களுக்கும் பாதிப்பில்லாம பழங்காலத்திலேயே வழுக்கலாக இருக்கிற தென்னை மரத்தை நட்டு வைத்தனர். ஒவ்வொரு ஜல்லிக்கட்டின்போதும், புது அணை மரம் ஊன்றப்படுகிறது. முன்பு மண்சுவரை மெழுகி, அதில் வெள்ளைச்சுண்ணாம்பு, மஞ்சக்காவி பூசி வாடிவாசலை அழகுபடுத்துவர். இப்போது சிமெண்டில் கட்டி, பெயின்ட் பூசி அழகுபடுத்தி இருக்கிறோம்’’ என்றனர்.




கோயில் காளைக்கு முதல் மரியாதை...


அலங்காநல்லூரில் முனியாண்டி, காளியம்மன், முத்தாலம்மன், அரியமலை சாமிகள் என நான்கு கோயில்களிலும் இன்று காலை கிராம மக்கள் சாமி கும்பிட்டு ஜல்லிக்கட்டை துவக்குகின்றனர். பரிசாக கொடுக்கப்படும் வேட்டி, துண்டுகளை மூட்டை கட்டி இந்த கோயில்களுக்கு ஊர்வலமாக கொண்டு வந்து, பூஜைகள் நடத்தி பிறகு வாடிவாசல் பரிசு மேடைக்கு கொண்டு வரப்படுகிறது.


ஊருக்குள் உள்ள துவக்கப்பள்ளியில இருந்து காளைகளை வரிசையாக பிடித்தபடி வாடிவாசலுக்கு, பின்னால் இருக்கும் இடத்திற்கு கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு 50 மாடுகளை வாடிவாசலுக்கு பின் வழியாக உள்ளே விட்டு, வாடிவாசல் வழியாக அடுத்தடுத்து ஒவ்வொன்றாக மூக்கணாங்கயிறு அறுக்கப்பட்டு காளைகள் அனுப்பப்படுகிறது. முதலில் கொடியசைக்கப்பட்டு, நான்கு கோயில்களின் காளைகளும் அடுத்தடுத்து வாடிவாசலில் இருந்து விடப்படுகிறது. இந்த காளைகளை யாரும் பிடிப்பதில்லை. ஆனால் காளைகளுக்கு பரிசுகள் அறிவித்து, அது கோயில் நிர்வாகத்திடம் சேர்க்கப்படுகிறது.


நெத்தியை தொட்டா குத்து... அல்லையை தொட்டா உதை


ஜல்லிக்கட்டு காளைகள் தேர்வு சாதாரணமானது அல்ல. இதற்காக நாட்டு மாடுகளில் மூர்க்க குணமிக்க கிடை மாடு தேர்வு செய்யப்படுகிறது. இந்த மாட்டின் கன்று பிறந்ததுமே 10 நாட்களில் முகக்கூறு, கூர்மை, பஞ்சம முகம் என ஜல்லிக்கட்டுக்கான காளை கண்டுபிடிக்கப்படுகிறது.

alignment=


மாடு வளர்ப்பவர் கூடு கொம்பு, விரிச்ச கொம்பு, பல் என சகலத்தையும் சரி செய்ய ஆரம்பிக்கிறார். நெற்றியைத் தொட்டாலே குத்த ஆரம்பிக்கும். வயிற்றின் ஓரமான அல்லை பகுதியை தொட்டாலே உதைக்கும். குறைந்தது 4 வயதுக்கு மேல் இந்த காளைக்கு வாடிவாசல் காட்டப்படுகிறது. அதுவரையிலும் வாடிவாசல் மாதிரி கம்புகள் ஊன்றி செட்டப் செய்து பயிற்சி தருகின்றனர். வண்டி இழுப்பது போன்ற எந்த வேலைக்கு இந்த ஜல்லிக்கட்டு மாடு பயன்படுத்தப்படுவதில்லை. குடும்பத்தில் ஒருவராக, செல்லப்பிள்ளையைப் போல் வளர்க்கின்றனர்.



‘ஒத்தைக்கு ஒத்தை வர்றியா...’


அலங்காநல்லூரில் ஒரு காலத்தில் மாட்டுக்கொம்பில், கழுத்தில் கட்டி விடும் வேட்டி, துண்டுதான் பரிசு. இன்றைக்கு தங்கம், வெள்ளிக்காசு மட்டுமில்லாது, கம்ப்யூட்டர் லேப்டாப், கார் வரிசையில் ஜல்லிக்கட்டு காளையே பரிசாக தரும் வகையில் பரிசுப்பொருட்களின் பட்டியல் விரிந்திருக்கிறது. அக்காலத்தில் இரும்புச்சோளம், குதிரைவாலி, வரகரிசி, சானை, திணை, வெள்ளச்சோளக்கருது, வரகஞ்சோறு என ஜல்லிக்கட்டு காலத்தில் வீரர்கள் உணவு உண்பதோடு, மாடுபிடிக்கிற பயிற்சிகளும் தனியாக எடுத்துக் கொள்வர்.


அக்காலத்தில் வாடிவாசலை சுற்றிலும் வயல்கள்தான். தரைக்கு வைக்கோல்கூட இருக்காது. மூங்கில்தடுப்பு, கலர் டிரஸ் இதெல்லாம் இல்லை. ஒத்தைக்கு ஒத்தையாக பல நேரம் மாடுகளைப் பிடிக்க வீரர்கள் பாய்வதுண்டு. . வாடிவாசலுக்கு மேலேயும் வெயில்லதான் நிற்பார்கள். மாட்டுவண்டிகளை ஓரத்தில் நிறுத்தி வைத்து அதில் ஏறி நின்றுதான் மக்கள் வேடிக்கை பார்த்தனர்.


சாதுவான காளை சலங்கை கட்டுச்சுன்னா...


காளைகளுக்கு வலு காலில் இருக்க வேண்டும். இதற்காக நடை, நீச்சல் பயிற்சி தந்து கால்களை வலிமையாக்குகின்றனர். ஜம்ப் அடிப்பது, வலது, இடது கட் அடிப்பது என ஒவ்வொரு காளைக்கும் ஒரு குணமுண்டு. இதனையறிந்து பயிற்சி தருகின்றனர். சாதுவான மாடு கூட சலங்கையைக் கட்டியதும் கோபக்குணத்துக்கு மாறிவிடும்.


கால்சலங்கை, கழுத்துமணி, கொம்புக்கு ரோஜாப்பூ மாலை போட்டு, கொம்பில் பட்டுத்துணி சுத்தியதும் வேகமெடுக்கும் வகையில் பயிற்சி தரப்படுகிறது. காளையின் மீது கை அதிகம் படாமல் வளர்க்கின்றனர். காரணம் கைவவைத்து பழகினால், சுனப்பு குறைந்து, மூர்க்கமும் குறையுமாம். காலையோ, மாலையோ வாடிவாசலுக்கு வரும் வரையிலும் தினம் குறைந்தது ஒவ்வொரு ஜல்லிக்கட்டு காளைக்கும் ஒரு மணி நேர பயிற்சி தரப்படுகிறது. மண்ணைக்குத்தி விளாசும் மாட்டின் யதார்த்த குணமும்... ஜல்லிக்கட்டில் வெற்றிக்கு கைகொடுக்கிறது.


வெற்றியும், மரணமும் வீரனுக்கு இங்கு சகஜம்


அலங்காநல்லூரில் முன்பு மதியம் 2 மணிக்குத்தான் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கும். நடு ராத்திரியிலும் ‘காடா விளக்கு’ கொளுத்தி வைத்து காளைகளை விட்டனர். இப்போது காலையிலேயே ஜல்லிக்கட்டு ஆரம்பிக்கப்பட்டு, மாலை வரை தொடர்கிறது. இதேபோல், முன்பு மாடுபிடிக்க வீட்டில் வீரர் கிளம்பும்போதே, குடும்பத்தினர் சாமி கும்பிட்டு விபூதி பூசி விடுவதோடு, மஞ்சள்பொடி கலந்த கைப்பிடி அரிசியை அந்த வீரரின் கையில் தந்து அனுப்பினர். வீரர், தனது வேட்டிக் கோவணத்தில் முடிந்து கொள்வாராம்.


மாடுபிடிக்கிற போது வெற்றியும் உண்டு, வீர மரணமும் உண்டு என்பதை உணர்த்திடவே, இந்த ‘வாய்க்கரிசி’ உணர்வில் அரசி கொடுத்து விடுவதும் இருந்தது. இப்போது இந்த நடைமுறை இ்ல்லை.


காட்டுத்தோட்டமல்ல... மாட்டுத்தோட்டம் இது...


பழங்காலத்தில் இந்த ஜல்லிக்கட்டு காளைகளுக்காகவே தோட்டங்களில் தனி தீவன விளைச்சல் இருந்தது. கடலைக்கொடி, உளுந்தஞ்செடி, பாசிப்பயறு செடி என மாடுகளுக்கு தனியாக வளர்க்கப்பட்டது. இன்றைக்கும் காளைகள் உணவில் தனிக்கவனம் காட்டப்படுகிறது. பச்சரிசியை ஊறவைத்தோ, காயவைத்தோ தின்னக் கொடுக்கின்றனர். கம்பை வேகவைத்தும் ஆட்டித்தருகின்றனர். பருத்திவிதையும் தருவதுண்டு. ஆனால், சிறிதளவே புண்ணாக்கு தருகின்றனர். ஏனென்றால் மாட்டுக்கு ‘இளைப்பை’ இது கொடுத்து விடுமாம்.


இத்தனை தீவனத்துடன், கட்டாயம் குடிக்க குளிர்ந்த தண்ணீரும் தருகிறார்கள். இத்துடன் அவசியம் தினமும் ஒரு மாட்டுக்கு கட்டாயம் ஒரு தேங்காய் தின்ன கொடுக்கின்றனர். அதேநேரம் சத்தான பொருட்களும் நிறைய தரக்கூடாது. வயிறு இழுத்துக் கொள்ளுமாம்.


ஆடும் வரை காளை... ஆட்டமிழந்தால் சாமி...


இனப்பெருக்கத்திற்கு ஜல்லிக்கட்டு காளைகள் விடப்படுகிறது. நாட்டு மாடு இனம் அழிந்து விடக்கூடாது என்பதோடு, அடுத்த வாரிசை கொண்டு வரவும் இதற்கான அனுமதி இருக்கிறது. நாலு வயதில் களமிறக்கும் ஜல்லிக்கட்டு காளை, 20 வயதிற்கும் மேலாக ஜல்லிக்கட்டில் நன்றாகவே நின்று ஆடுகிறது. 35வயசுக்குள்ளே ஆயுளை முடித்துக் கொண்டாலும், புதைத்து வைத்து அலங்காநல்லூர் உள்ளிட்ட ஜல்லிக்கட்டு கிராமங்களில் ‘சாமி’யாகவே வழிபட்டு வருகின்றனர்.


ஒவ்வொரு ஜல்லிக்கட்டு காளைக்கும் முனியப்பன், கரந்தமலை, பச்சையப்பன் என பெயர் இருக்கிறது. அக்காலத்தில், மாடு பிடித்து கிடைத்த வேட்டி, துண்டை இன்றும் மரப்பெட்டியில் வைத்து பெருமை பேசும் பெரியவர்கள் இன்றும் அலங்காநல்லூரில் இருக்கின்றனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Jallikutt ,interview ,fortress , Alankanallur ,Jallikattu,World Famous
× RELATED மக்களவை தேர்தலில் திமுக சார்பில்...