×

துபாயிலிருந்து கடத்தி வந்து சென்னையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6.88 கோடி மதிப்பிலான 20 கிலோ தங்கம் பறிமுதல்: கடத்தல் கும்பல் தலைவன் உள்பட 4 பேர் கைது

சென்னை: துபாயிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்டு ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.6.88 கோடி மதிப்புள்ள 20.6 கிலோ தங்கத்தை வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கடத்தல் கும்பல் தலைவன் உள்பட 4 பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.துபாய் போன்ற நாடுகளிலிருந்து மும்பை வழியாக விமானம் மூலம் சென்னைக்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்கம் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வுத் துறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து, வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.அதுமட்டுமல்லாமல் ெசன்னையில் முக்கிய பகுதிகளிலும் அதிகாரிகள் பொங்கல் நாளன்று அதிகாலை ரகசிய சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சூளைமேட்டில் உள்ள ஒரு வீட்டில் 20.6 கிலோ தங்கம் இருந்தது தெரியவந்தது. மேலும், தங்கத்தை கடத்துவதற்கு பயன்படுத்திய பிஎம்டபிள்யூ கார் மற்றும் ரூ.21 லட்சம் ரொக்கப்பணமும் இருந்தது. தங்கம், கார் மற்றும் ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் இந்த கடத்தலில் ஈடுபட்ட 2 பேரைக் கைது செய்தனர்.அவர்களிடம் நடத்திய விசாரணையில், பொங்கல் பண்டிகை நேரம் என்பதால் தமிழகத்தில் தங்கத்திற்கு அதிக வரவேற்பு இருக்கும். இதற்காக துபாய் போன்ற நாடுகளிலிருந்து பயணிகள் மூலம் தங்கத்தை கடத்திவந்து அதை சூளைமேட்டில் உள்ள கடத்தல் கும்பலின் தலைவனிடம் ஒப்படைப்போம் என்று தெரிவித்தனர்.

விசாரணையின் அடிப்படையில் சூளைமேட்டில் உள்ள கடத்தல் கும்பல் தலைவன் மற்றும் அவரது மகன் ஆகியோரை வருவாய் புலனாய்வுத் துறையினர் கைது செய்தனர். அவர்கள் மீது சுங்கச்சட்டப் பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.இதுகுறித்து வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “ பெரும்பாலும் பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் தமிழகத்தில் தங்கத்தின் தேவை அதிகரிக்கும். இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு குருவிகள் (பணத்திற்காக கடத்தல்) மூலம் தங்கத்தை வெளிநாடுகளிலிருந்து கடத்தி வருகிறார்கள்.பண்டிகை காலங்களில் தங்கத்தின் விலை அதிகரிப்பதால் நல்ல லாபம் பெரும் நோக்கத்துடன் துபாய் போன்ற நாடுகளிலிருந்து தங்கம் அதிக அளவில் சென்னைக்கு கடத்தப்பட்டு வருகிறது.துபாயிலிருந்து மும்பை வழியாக சென்னைக்கு விமானத்தில் கடத்திவரப்படும் தங்கம் இங்குள்ள கடத்தல் கும்பலை ஒருங்கிணைக்கும் நபர்களிடம் தரப்படும். இதற்கு குருவிகளுக்கு நல்ல தொகை தரப்படுகிறது.தற்போது பிடிக்கப்பட்டுள்ள தங்கம் துபாயிலிருந்து சென்னைக்கு கடத்தப்பட்ட தங்கம். இது மட்டுமல்லாமல் இந்த தங்கத்தின் ஒரு பகுதி இலங்கையிலிருந்து கடல் மார்க்கமாக சென்னைக்கு கடத்தப்பட்டுள்ளது. விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Dubai , kidnapped, Dubai ,Chennai, gold
× RELATED இஸ்ரேல்-ஈரான் போர் பதற்றத்திற்கு...