×

அவனியாபுரம், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு கோலாகலம் சீறிபாய்ந்த காளைகளை அடக்கிய காளையர்

* 46 பேர் காயம் * 10 காளைகளை அடக்கிய வீரருக்கு கார் பரிசு

அலங்காநல்லூர்: பாலமேடு ஜல்லிக்கட்டில் நேற்று 10 காளைகளை அடக்கிய வீரர் பிரபாகரன், காரை பரிசாக வென்றார். மதுரை மாவட்டம், பாலமேட்டில் நேற்று காலை 8 மணியளவில் ஜல்லிக்கட்டு துவங்கியது. முன்னதாக காளைகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டன. வீரர்களுக்கு உடல் தகுதி சோதனை நடந்தது. முதலில் மேளதாளம் முழங்க  மஞ்சமலைசுவாமி காளை உள்ளிட்ட 7 கோயில் காளைகள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டன. பாலமேடு மஞ்சமலையாற்றில் திடல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாடிவாசலில் அந்த கோயில் காளைகள் வரிசையாக  அவிழ்த்து விடப்பட்டன. தொடர்ந்து வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளை, காளையர்கள் அடக்கினர். களத்தில் நின்று சில காளைகள், ஆட்டம் காட்டியதுடன், காளையர்களை பந்தாடின. இது பார்வையாளர்களை பரவசப்படுத்தியது. மொத்தம் 567  காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 780 வீரர்கள் பங்கேற்றனர்.  காளைகள் முட்டியதில் 46 பேர் காயமடைந்தனர். இதில் மாடுபிடி வீரர் வைரமுத்து என்பவருக்கு மார்பில் குத்து விழுந்தது. ஆபத்தான நிலையில் இவர் உள்பட 13 பேர் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.  காளைகளை அடக்கிய வீரர்கள் மற்றும் பிடிபடாத காளைகளுக்கு கார், கட்டில், பீரோ, டூவீலர் போன்றவைகள் பரிசாக வழங்கப்பட்டன.

இறுதியாக 8 சுற்றில் நின்று விளையாடிய சிறந்த மாடுபிடி வீரர்களை கலெக்டர் நடராஜன் அறிவித்தார். 10 காளைகளை பிடித்த ஒத்தவீட்டை சேர்ந்த பிரபாகரன் முதல் பரிசாக கார் பெற்றார். 9 காளைகளை பிடித்த  அலங்காநல்லூரை சேர்ந்த அஜய் 2வது பரிசை பெற்றார். இவர் கடந்த ஆண்டும் 8 காளைகளை பிடித்து முதல் பரிசாக கார் வென்றது குறிப்பிடத்தக்கது. 8 காளைகளை பிடித்த பி.மேட்டுப்பட்டியை சேர்ந்த கார்த்திக் 3வது பரிசை  பெற்றார். சிறந்த காளையாக தேர்வான மேலூரை சேர்ந்த பிரபுவின் காளைக்கு முதல் பரிசாக டூவீலர் வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டை ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர். வெளிநாட்டு  சுற்றுலாப்பயணிகளும் பெருமளவில் வந்திருந்தனர். ஜல்லிக்கட்டை முன்னிட்டு எஸ்பி மணிவண்ணன் தலைமையில் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அவனியாபுரம்: முன்னதாக பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் மதுரை மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு அவனியாபுரத்தில் நடந்தது.

ஐகோர்ட் கிளை உத்தரவுப்படி ஓய்வு நீதிபதி ராகவன் தலைமையிலான  குழு மேற்பார்வையில் ஜல்லிக்கட்டு நடந்தது. 480 காளைகள், 550 வீரர்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டில், காளைகள் முட்டி வீரர்கள், பார்வையாளர்கள், போலீசார், சிறுவன், மாடு உரிமையாளர்கள் என 47 பேர் காயமடைந்தனர்.  முத்துப்பட்டியை சேர்ந்த மாடுபிடி வீரர் திருநாவுக்கரசு 9 காளைகளை அடக்கி முதலிடமும், முடக்கத்தானை சேர்ந்த அறிவு அமுதன் 7 காளைகளை அடக்கி 2வது இடமும், சோலையழகுபுரத்தை சேர்ந்த ஆறுமுகபாண்டி,  அஜீத்குமார் ஆகியோர் 6 காளைகளை அடக்கி 3வது இடமும் பிடித்தனர்.அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்வையிட ஆஸ்திரேலியா, இத்தாலி, ஸ்வீடன், ஹாங்காங், ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப்பயணிகள் மதுரைக்கு வந்துள்ளனர்.  இவர்கள் இன்று பிரத்யேக மேடையில் அமர்ந்து போட்டிகளை பார்வையிட தமிழ்நாடு சுற்றுலாத்துறை சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.

ஜல்லிக்கட்டில் சலசலப்பு
அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்காக கிராமம் சார்பில் அமைக்கப்பட்ட 16 பேர் குழுவில், 8 பேர் கலந்து கொள்ளவில்லை. யாருக்கும் முதல் மரியாதை பரிவட்டம் கிடையாது என்பதால், ஊர் கோயில் காளையை முதலில் அவிழ்க்க  சிலர் கோரிக்கை வைத்தனர். இதற்கு நீதிபதி தலைமையிலான குழு மறுப்பு தெரிவித்தது. இதனால் 2 காளைகளை அய்யனார் கோயில் அருகே அவிழ்த்து விட முயன்றனர். இதனையறிந்த உளவுப்பிரிவு போலீசார் அதை தடுத்து  நிறுத்தினர்.

அலங்காநல்லூரில் இன்று
உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கோட்டை முனியசாமி கோயில் திடலில் இன்று கோலாகலமாக துவங்குகிறது. ஜல்லிக்கட்டில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 1,400 காளைகள் முன்பதிவு  செய்யப்பட்டுள்ளன. 848 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்துள்ளனர். காலை 7.50 மணிக்கு மதுரை கலெக்டர் நடராஜன் தலைமையில் வீரர்கள் உறுதிமொழி எடுத்து கொள்கின்றனர். தொடர்ந்து காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டை  கலெக்டர் துவக்கி வைக்கிறார். மாலை 4 மணி வரை தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடக்கிறது. ஒரு மணி நேரத்திற்கு 75 பேர் வீதம் வீரர்கள் களமிறக்கப்படுவர். பொதுமக்கள் பார்ப்பதற்காக பார்வையாளர் மாடம் அமைக்கப்பட்டுள்ளது.  10க்கும் மேற்பட்ட இடத்தில் சிசிடிவி கேமிரா பொருத்தப்பட்டுள்ளது. 5 இடங்களில் டிஜிட்டல் ஸ்கிரீன் அமைக்கப்பட்டுள்ளது. மதுரை எஸ்பி மணிவண்ணன் தலைமையில், 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kallayar ,Vavuniya , Jallikattu, Golakalam, Bruised bulls
× RELATED இலங்கையில் இருந்து 3 குழந்தைகளுடன்...