வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்தின்போது மாற்றப்பட்ட பெண் குழந்தை சாவு: டிஎன்ஏ முடிவு தாமதத்தால் பதற்றம்

வேலூர்: வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பெண்ணுக்கு பிறந்த குழந்தை மாற்றப்பட்ட விவகாரத்தில் பெண் குழந்தை திடீரென இறந்த சம்பவத்தாலும் டிஎன்ஏ பரிசோதனை முடிவு தாமதத்தாலும் மேலும்  பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் கஸ்பா பொன்னியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் குசேலன்(30), லாரி டிரைவர். இவரது மனைவி பாரதி. இவர்களுக்கு ஏற்கனவே ஒரு மகன் உள்ளார். இந்நிலையில், கர்ப்பமான பாரதி வேலூர் அரசு  மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்துக்காக கடந்த 10ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு 12ம் தேதி மதியம் சிசேரியன் மூலம் ஆண் குழந்தை பிறந்ததாக கூறி மதியம் 1.50 மணியளவில் நர்ஸ் மூலம்  பாரதியின் உறவினர்களிடம் குழந்தை கொண்டு வந்து காட்டப்பட்டது.
தனக்கு 2வதாகவும் ஆண் குழந்தை பிறந்தது என்று பாரதியின் தரப்பினர் மகிழ்ச்சியில் திளைத்தனர். இந்த மகிழ்ச்சி அன்று இரவு 7.30 மணி வரை மட்டுமே நீடித்தது. அப்போது வந்த நர்ஸ், குசேலன்- பாரதி ஆகியோரிடம்,  உங்களுக்கு பெண் குழந்தைதான் பிறந்தது. தவறுதலாக ஆண் குழந்தை காட்டப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும் பெண் குழந்தை பிறக்கும்போதே மூச்சுத்திணறலுடன், எடை குறைவாகவும் பிறந்ததால் பச்சிளம்குழந்தைகள் பிரிவில் தீவிர சிகிச்சையில் இருப்பதாகவும் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த குசேலன் தரப்பினர்  மருத்துவமனை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்த வார்டு பொறுப்பு டாக்டர் வினிதா குசேலன்- பாரதி தரப்பினரிடம் பெண் குழந்தையின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு டிஎன்ஏ டெஸ்ட்டுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதற்கிடையில் எடை  குறைவாகவும், மூச்சுத்திணறலுடன் பிறந்த பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தது. இதனால் மேலும் அதிர்ச்சிக்குள்ளான குசேலன்- பாரதி தம்பதியினர் தங்கள் குழந்தை எதுவென்று உறுதியாக தெரியும் வரை எந்த குழந்தையையும் எடுத்து செல்ல விடமாட்டோம் என்று கூறி தகராறில் ஈடுபட்டனர்.

இதுபற்றி அறிந்த வேலூர் தாலுகா போலீசார் மருத்துவமனைக்கு வந்து குசேலன் மற்றும் ஆண் குழந்தை பிறந்ததாக கூறப்பட்ட பெண்ணின் தரப்பினரையும் அழைத்து விசாரணை நடத்தினர். ஆனால், அப்போதும் குசேலன்  தரப்பினர் சமாதானமடையாததால் தகவல் அறிந்த வேலூர் டிஎஸ்பி பொறுப்பு லோகநாதன் மருத்துவமனைக்கு விரைந்து வந்து விசாரணையில் ஈடுபட்டார். அவர் மருத்துவமனை ஊழியர்கள், சிசேரியன் சிகிச்சை அரங்க  ஊழியர்கள் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டார். அதேநேரத்தில் டிஎன்ஏ பரிசோதனை முடிவுகள் தெரிய மேலும் தாமதமாகலாம் என்று தெரிகிறது. இந்த நிலையில் இப்பிரச்னையின் தீவிரம் குறையாததால் அந்த வார்டில் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : childbirth ,Vellore Government Medical College , Vellore, Government ,Medical College ,Hospita,Tension, DNA
× RELATED குறைந்துவரும் பெண் குழந்தை பிறப்பு விகிதம்!