×

தனுஷ்கோடியில் இருந்து இலங்கைக்கு படகில் தப்ப முயன்ற 2 அகதிகள் கைது: 5 பேருக்கு வலை; ஜிபிஎஸ் கருவி, பல லட்சம் பணம் பறிமுதல்

ராமேஸ்வரம்: தனுஷ்கோடியில் இருந்து இலங்கைக்கு படகில் தப்பிய முயன்ற 2 அகதிகள் கைதாயினர். 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இவர்களிடம் இருந்து பல லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி தென்கடல் பகுதியில் பைபர் கிளாஸ் படகு பழுதாகி நிற்பதாக தகவல் கிடைத்தது. தகவலறிந்து நேற்று முன்தினம் மாலை மண்டபம் இந்திய கடலோர காவல்படையினர் அப்பகுதிக்கு  சென்றனர். பாம்பன் குந்துகால் கடற்கரையிலிருந்து இரண்டு மைல் தொலைவில் நடுக்கடலில் நின்றிருந்த நீலநிற பைபர்கிளாஸ் படகில் இருந்த இருவரையும் பிடித்து படகை கைப்பற்றினர்.மேலும் படகில் இருந்த 6 மொபைல்போன்கள், 2 வெளிநாட்டு ஜிபிஎஸ் கருவிகள், ரூ.1 லட்சம் இந்திய பணம், அமெரிக்கா டாலர் 81, ஹாங்காங் டாலர் 10, ஒரு தங்கசெயின், தோடு, ஆதார் அட்டை மற்றும் இலங்கை பாஸ்போர்ட்  உள்ளிட்ட பொருட்களையும் பறிமுதல் செய்தனர். இருவரையும் மண்டபம் கடலோர காவல்படை முகாமிற்கு அழைத்து சென்று விசாரணை செய்தனர்.

விசாரணையில், சிவராஜா (41), அன்புக்குமரன் (38) இருவரும் சகோதரர்கள். மதுரை அருகிலுள்ள ஆனையூர் அகதிகள் முகாமில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்களில் சிவராஜா மதுரையில் மீன் கடை, உணவு விடுதி  நடத்தியதும், அன்புக்குமரன் கொத்தனார் வேலையும் பார்த்து வந்ததும் தெரிய வந்தது. சிவராஜா மீது மதுரை எஸ்.எஸ்.காலனி, திடீர்நகர் போலீஸ் ஸ்டேஷன்களில் திருட்டு வழக்குகள் உள்ளன. இவர் கடனை அடைப்பதற்காக  இலங்கை வவுனியாவில் உள்ள தனது நிலத்தை விற்று பணம் கொண்டு வருவதற்காக, தம்பியுடன் கள்ளத்தனமாக இலங்கை செல்ல திட்டமிட்டுள்ளார்.ராமேஸ்வரத்திலுள்ள ஒரு ஏஜென்ட் மூலமாக படகில் செல்ல கடந்த 14ம் தேதி, பாம்பன் குந்துகால் கடற்கரை பகுதிக்கு வந்துள்ளனர். இவர்களுடன் மேலும் இருவரும் இலங்கை செல்ல இருந்தனர். நள்ளிரவு இலங்கையிலிருந்து  வந்த படகில் ஒருவர் இறங்கி செல்ல 4 பேரும் ஏறி சென்றனர். 2 மைல் தூரம் சென்ற நிலையில் இன்ஜினில் கோளாறு ஏற்பட்டு படகு நடுக்கடலில் நின்றது.

இரவு முழுவதும் இன்ஜினை சரிசெய்ய முடியாத நிலையில், நேற்று  முன்தினம் அதிகாலை 2 படகோட்டிகள் மற்றும் இலங்கை செல்ல முயன்ற 2 பேர் படகில் இருந்து கடலில் குதித்து கரைக்கு சென்றுவிட்டனர்.நீச்சல் தெரியாத நிலையில் படகில் இருந்த சிவராஜா, அன்புக்குமரன் இருவரும் சிக்கியுள்ளனர். கைப்பற்றிய படகு, பணம் உள்ளிட்ட பொருட்களுடன் 2 பேரையும், மண்டபம் மரைன் போலீசாரிடம் கடலோர காவல் படையினர்  ஒப்படைத்தனர். இருவரையும் கைது செய்த போலீசார், தலைமறைவான இலங்கை படகோட்டிகள் உட்பட 5 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். மத்திய, மாநில புலனாய்வு துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை செய்து  வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : refugees ,Sri Lanka ,Dhanushkodi , Dhanushkodi, Sri Lanka,refugees arrested , laundering
× RELATED இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம் மீனவர்கள் மீது கொடூர தாக்குதல்