சபரிமலையில் மீண்டும் பதற்றம் : 2 இளம்பெண்கள் தரிசிக்க முயற்சி

திருவனந்தபுரம்: சபரிமலையில் 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்ட நிலையில், நேற்று அதிகாலை மேலும் 2 இளம்பெண்கள் தரிசனம் செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.சபரிமலை ஐயப்பன் கோயிலில் இளம்பெண்களும் தரிசிக்கலாம் என்று செப்.28ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, 20க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் செல்ல முயன்றனர். பக்தர்கள் போராட்டம் நடத்தி அவர்களை திருப்பி அனுப்பினர். கடந்த 2ம் தேதி கோழிக்கோட்டை சேர்ந்த பிந்து, மலப்புரத்தை சேர்ந்த கனகதுர்கா ஆகிய 2 இளம்பெண்களை போலீசார் சன்னிதானத்துக்கு அழைத்து சென்று தரிசனம் செய்ய வைத்தனர்.

பின்னர், அவர்கள் திரும்பி சென்றதும் வீடியோ காட்சிகளை போலீசார் வெளியிட்டனர். இதனால், கேரளாவில் வரலாறு காணாத கலவரம் வெடித்தது. இந்நிலையில், கடந்த 14ம் தேதி மகரவிளக்கு பூஜை நடந்தது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு வந்தனர். கடந்த ஐப்பசி மாதம் மண்டல பூஜை முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், போராட்டம் நடத்திய பாஜ தலைவர்கள் உள்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். இந்த தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில், மகரவிளக்கு பூஜை நேற்று முன்தினம் முடிந்ததை தொடர்ந்து  144 தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டது. வரும் 20ம் தேதி காலை 6.30 மணிக்கு நடை சாத்தப்படும். 19ம் தேதி இரவு வரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

இதற்கிடையே நேற்று அதிகாலை 4 மணியளவில் கண்ணூரை சேர்ந்த ரேஷ்மா நிஷாந்த், ஷனிலா ஆகிய இருவரும் தரிசனத்திற்கு செல்ல வேண்டும் என கூறி பம்பை வந்தனர். அவர்களை போலீசார் பாதுகாப்பாக அழைத்து சென்றனர். காலை 4.30 மணியளவில் இருவரும் நீலி மலையை அடைந்தனர்.இருவரையும் பார்த்த பக்தர்கள் போராட்டம் நடத்தினர். ஆனால், உயிரே போனாலும் தரிசனம் செய்யாமல் திரும்ப மாட்டோம் என்று இருவரும் கூறினர். பக்தர்கள் அவர்களை 3 மணி நேரத்துக்கும் மேல் சிறை பிடித்தனர்.
இதனால், போலீசார் இருவரையும் ஜீப்பில் ஏற்றி பம்பைக்கு அழைத்து சென்றனர்.

ஆந்திர, தமிழக பக்தர்கள்:
சபரிமலைக்கு இதுவரை வந்த இளம்பெண்களை கேரள பக்தர்கள் மற்றும் இந்து அமைப்பினர்தான் தடுத்து நிறுத்தினர். நேற்று இளம்பெண்களை தடுத்தது ஆந்திரா, தமிழகத்தை சேர்ந்த பக்தர்கள் ஆவர். இளம்பெண்கள் இருவரும் நீலிமலை அருகே சென்றபோது ஆந்திராவை சேர்ந்த 5 பக்தர்கள்தான் முதலில் அவர்களை அடையாளம் கண்டு தடுத்தனர்.  சிறிது தூரம் சென்றதும் மேலும் சில ஆந்திர பக்தர்கள் அவர்களை தடுத்தனர். ்அந்த தகவல் அறிந்து தமிழகத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்களும் அங்கு திரண்டனர். கோவை தர்மராஜா அரசபீடம் மடத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி சுவாமி தலைமையில் தரிசனத்துக்கு வந்த 80 பேர் அடங்கிய தமிழக பக்தர்கள் அங்கு திரண்டு சரணகோஷம் முழங்கினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED இலங்கையில் மீண்டும் பதற்றம்........