×

நேர்முக தேர்வு முடிந்தும் காலியாக இருக்கும் 200 இளநிலை உதவியாளர் பணியிடங்கள் - சட்ட பணிகள் ஆணைய குழுவில் ஆள் பற்றாக்குறை

சென்னை: சட்ட பணிகள் ஆணையகுழுவில் காலியாக இளநிலை உதவியாளர் பணியிடங்கள், நேர்முக தேர்வு முடிந்தும் ஒரு வருடமாக நிரப்பப்படாமல் இருப்பதால் தமிழகம் முழுவதும் உள்ள சட்ட பணிகள் ஆணையகுழுவில் ஆள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தேசிய சட்ட பணிகள் ஆணைய குழுவின் கட்டுப்பாட்டில் ஒவ்வொரு மாநிலங்களிலும் மாநில சட்ட பணிகள் ஆணைய குழு இயங்கி வருகிறது. இந்த மாநில சட்ட பணிகள் ஆணைய குழுவின் கீழ் தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களிலும் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைய குழுக்கள் செயல்பட்டு வருகிறது. சட்ட பணிகள் ஆணையகுழுவின் மூலம் தான் மக்கள் நீதிமன்றம் எனப்படும் லோக் அதாலத் நடத்தப்படுகிறது. மேலும் வழக்கு நடத்த முடியாமல் இருக்கும் மக்களுக்கு உதவி செய்தல், சட்ட சிக்கல் வாய்ந்த பிரச்னைகளில் தலையிட்டு தீர்வு ஏற்படுத்துதல் என பல்வேறு வேலைகள் சட்ட பணிகள் ஆணையகுழுவிற்கு உள்ளது.

இந்தநிலையில் மாவட்டம்தோறும் உள்ள சட்ட பணிகள் ஆணைய குழுவில் 150 முதல் 200 இளநிலை உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த பணியிடங்கள் காலியாக உள்ளதால் மாவட்டம் தோறும் உள்ள சட்ட பணிகள் ஆணையகுழுவில் வேலைகள் மந்தமாக உள்ளது. மேலும், ஏற்கனவே இருப்பவர்களுக்கு பணிசுமை அதிகமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக ஆட்கள் தேர்வு நடத்தப்பட்டது. அதற்கான நேர்முக தேர்வும் நடத்தி முடிக்கப்பட்டது. ஆனால் 6 மாதங்களுக்கு மேல் கடந்தும் இதுவரை யாரும் பணி அமர்த்தப்படவில்லை. இதனால் காலியாக உள்ள இந்த பணியிடங்களில் தினம் ரூ.500 என்ற சம்பளத்தில் வேலைக்கு எடுக்கப்பட்ட சட்ட தன்னார்வலர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கும் தினம் ரூ.500 தான் சம்பளம் என்பதால் விடுமுறை நாட்களை தவிர்த்து அதிகபட்சமாக மாதம் ரூ.9 ஆயிரம் மட்டுமே சம்பளம் கிடைக்கும். எனவே பணி சுமையின் காரணமாக பலர் வேலையில் இருந்து நின்று வருகின்றனர். இவர்களுக்கும் பல மாதங்களாக சம்பளம் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் சட்ட தன்னார்வாலர்களும் வேலையை விட்டு நின்று வருவதால், பல மாவட்ட சட்ட பணிகள் ஆணைய குழுவில் வேலைகள் மந்தமாக காணப்படுகிறது. மனு கொடுக்க வருபவர்களின் மனுக்களை வாங்கி வைப்பதற்கும், அப்படி வாங்கினால் அதன் மீது நடவடிக்கைள் எடுப்பதற்கும் கால தாமதம் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஏற்கனவே ஆட்கள் தேர்வு நடத்தி இன்னும் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கும் இளநிலை உதவியாளர் பதவியிடங்களை விரைந்து பூர்த்தி செய்ய பலர் கோரிக்கை வைக்கின்றனர். மேலும் பணி சுமையின் காரணமாக பலர் விருப்ப ஓய்வு கேட்பதாக கூறப்படுகிறது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Assistant Workplaces ,Law Enforcement Commission , The Legal Commission Commission, the lack of personnel
× RELATED பாலியல் தொழிலுக்காக கடத்திவரப்பட்ட 5...