×

ஆஸி. ஓபன் டென்னிஸ் .... 3வது சுற்றில் கெர்பர் : போபண்ணா அதிர்ச்சி

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் விளையாட, ஜெர்மனி வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் தகுதி பெற்றார். இரண்டாவது சுற்றில் பிரேசில் வீராங்கனை பீட்ரைஸ் ஹடாட் மயாவுடன் நேற்று மோதிய கெர்பர் 6-2, 6-3 என்ற நேர் செட்களில் மிக எளிதாக வென்றார். இப்போட்டி 1 மணி, 21 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது. மற்றொரு 2வது சுற்றில் ரஷ்ய நட்சத்திரம் மரியா ஷரபோவா 6-2, 6-1 என நேர் செட்களில் ஸ்வீடனின் ரெபக்கா பீட்டர்சனை வீழ்த்தினார்.

நடப்பு சாம்பியன் கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்) தனது 2வது சுற்றில் 6-1, 6-3 என்ற நேர் செட்களில் ஜோகன்னா லார்சனை (ஸ்வீடன்) வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறினார். முன்னணி வீராங்கனைகள் அனஸ்டேசியா பாவ்லியுசென்கோவா (ரஷ்யா), ஸ்லோன் ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா), ஆஷ்லி பார்தி (ஆஸி.), அரினா சபலென்கா (பெலாரஸ்), கரோலின் கார்சியா (பிரான்ஸ்), பெத்ரா குவித்தோவா (செக்.), மரியா சக்கரி (கிரீஸ்) ஆகியோரும் 3வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில், ஸ்பெயினின் நட்சத்திர வீரர் ரபேல் நடால் 6-3, 6-2, 6-2 என்ற நேர் செட்களில் ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டனை வீழ்த்தினார். மற்றொரு 2வது சுற்றில் நடப்பு சாம்பியன் ரோஜர் பெடரர் 7-6 (7-5), 7-6 (7-3), 6-3 என்ற நேர் செட்களில் இங்கிலாந்தின் தகுதிநிலை வீரர் டேனியல் எவன்சை போராடி வென்றார்.

தென் ஆப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சன் (5வது ரேங்க்) தனது 2வது சுற்றில் 6-4, 4-6, 4-6, 5-7 என்ற செட் கணக்கில் அமெரிக்க வீரர் பிரான்சிஸ் டியபோவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார். முன்னணி வீரர்கள் மரின் சிலிச் (குரோஷியா), பாடிஸ்டா அகுத் (ஸ்பெயின்), ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் (கிரீஸ்), ஆண்ட்ரியாஸ் செப்பி (இத்தாலி), கிரிகோர் திமித்ரோவ் (பல்கேரியா), தாமஸ் பெர்டிச் (செக்.), கரென் கச்சனோவ் (ரஷ்யா), பெர்னாண்டோ வெர்டாஸ்கோ (ஸ்பெயின்) ஆகியோரும் 3வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.
போபண்ணா அதிர்ச்சி: ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா - திவிஜ் ஷரண் ஜோடி 1-6, 6-4, 5-7 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் கரினோ புஸ்டா - கார்சியா லோபஸ் ஜோடியிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு ஏமாற்றத்துடன் வெளியேறியது. மெக்சிகோவின் ஏஞ்சல் வரேலாவுடன் இணைந்து களமிறங்கிய இந்திய நட்சத்திரம் லியாண்டர் பயஸ் 5-7, 6-7 (4-7) என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் ஆஸ்டின் கிராஜிசெக் - ஆர்டெம் சிடாக் (நியூசிலாந்து) ஜோடியிடம் தோல்வி கண்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Aussie ,Gerber ,Bopanna ,round , Australian Open Tennis, Germany, player, Gerber encalik
× RELATED நான் ரெடி தான்… கம்மின்ஸ் உற்சாகம்