போலீஸ் டிஜிபி.க்கள் நியமன விதிமுறையை மாற்ற முடியாது - உச்சநீதிமன்றம் அதிரடி

புதுடெல்லி: போலீஸ் டிஜிபி.க்கள் நியமன விதிமுறைகளை மாற்றக் கோரிய 5 மாநில அரசுகளின் மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.போலீஸ் டிஜிபி.க்கள் நியமனம் தொடர்பாக கடந்தாண்டு ஜூலை மாதம் உச்ச நீதிமன்றம் புதிய விதிமுறைகளை வகுத்தது. இந்த விதிமுறைகளை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற உத்தரவிடப்பட்ட நிலையில், பஞ்சாப், கேரளா, மேற்கு வங்கம், அரியானா மற்றும் பீகார் ஆகிய 5 மாநில அரசுகள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மாநில அரசுகள் வகுத்துள்ள சட்ட திட்டங்களின்படி டிஜிபிக்களை நியமித்துக் கொள்ள அனுமதி கோரப்பட்டிருந்தது.

இந்த மனுக்கள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அதை விசாரித்த தலைமை நீதிபதி, ‘‘பொதுநலன் கருதியும், அரசியல் தலையீட்டிலிருந்து போலீஸ் அதிகாரிகளை பாதுகாப்பதற்கும் டிஜிபிக்கள் நியமனத்தில் உச்ச நீதிமன்றம் விரிவான விதிமுறையை வகுத்துள்ளது. அந்த உத்தரவுகளையே அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும்’’ எனக் கூறி மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். டிஜிபியாக பணியாற்றுபவர் ஓய்வு பெறுவதற்கு 3 மாதத்திற்கு முன்னரே, அந்த பதவியில் புதியவரை நியமிக்க தகுதியான அதிகாரிகள் பட்டியலை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு (யுபிஎஸ்சி) பரிந்துரைக்க வேண்டும். அந்த பட்டியலில் இருந்து 3 பேரை, டிஜிபி பதவிக்கு யுபிஎஸ்சி தேர்வு செய்யும். அந்த 3 பேரில் ஒருவரை டிஜிபி.யாக மாநிலங்கள் உடனடியாக நியமிக்க வேண்டும். பணி ஓய்வுக்கு பிறகு அதிக காலங்கள் பணி நீட்டிப்பு வழங்கக் கூடாது. இடைக்கால நியமனம் கூடாது. வேறெந்த முந்தைய விதிமுறைகளையும் டிஜிபி.க்கள் நியமனத்தில் இனி பின்பற்றக் கூடாது என உச்ச நீதிமன்றம தனது முந்தைய உத்தரவில் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: