×

காட்டன் சூதாட்டத்தில் சிக்கிய கணவன்மார்களால் கண்ணீர் விட்டு கதறும் பெண்கள்

* ஆரணி வட்டாரத்தில் தடையின்றி நடக்குது
* லட்சங்களில் மாமூல் கிடைப்பதால் கண்டுகொள்ளாத காக்கிகள்

ஆரணி : ஆரணி வட்டாரத்தில் தடையின்றி நடக்கும் காட்டன் சூதாட்டத்தால் ஏழை, நடுத்தர குடும்பங்கள் கண்ணீரில் மிதப்பதாகவும், தடுக்க வேண்டிய காவல்துறையே காட்டன் சூதாட்டம் நடத்தும் சமூக விரோதிகளுக்கு துணைபோவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2003ம் ஆண்டு லாட்டரி, மூணு நம்பர், இரண்டு நம்பர் காட்டன் சீட்டுகள் விற்பனை செய்ய தடை செய்யப்பட்டது. இந்நிலையில்,  திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் கடந்த சில மாதங்களாக காட்டன், மூணு சீட்டு, ரெண்டு சீட்டு காட்டன் சூதாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஆரணி பழைய, புதிய பேருந்து நிலையம், பழைய சந்தை மேட்டு பகுதி, அருணகிரிசத்திரம், ஆரணிப்பாளையம், சைதாப்பேட்டை, முக்கிய பிரதான சாலையான காந்தி சாலையில், ஆரணி அடுத்த சேவூர், கண்ணமங்கலம், களம்பூர் பகுதிகளில்அரிசி கடை, டீக்கடை, பூக்கடை, பங்க் கடை மற்றும் திறந்தவெளியில் சாலை ஓரங்களில் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை காட்டன், மூணு, ரெண்டு சீட்டு சூதாட்டம் களைக்கட்டுகிறது. பின்னர் மாலை 5க்கு ரிசல்ட் வெளியிடப்படுகிறது. இவ்வாறு விற்பனை செய்யப்படும் காட்டன், மூணு சீட்டு சூதாட்ட மதிப்பு 5,70,1000 என லட்சக்கணக்கிலும், ரெண்டு சீட்டுகள் 10, 20, 30 என தொடங்கி 1,000ம் வரை எழுதப்படுகிறது. இந்த காட்டன் சூதாட்டத்தில் ஆட்டோ ஓட்டுநர், கூலி வேலை செய்பவர்கள், தொழிலாளர்கள், காய்கறி, பூ, பழம் வியாபாரம் செய்யும் சிறுவியாபாரிகள், தினக்கூலிகள் என ஆரணி மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்தவர்கள் சிக்கி தங்கள் உழைப்பில் வந்த கூலியை வைத்து சூதாடி விட்டு வெறுங்கையுடன் வீடு திரும்புகின்றனர். வெறுங்கையுடன் வீடு திரும்பி பிரச்னையை ஏற்படுத்தும் கணவன்மார்களால் பெண்கள் கண்ணீர் விட்டு கதறும் நிலைதான் பல குடும்பங்களில் நீடித்து வருகிறது. இவ்வாறு ஏதாவது ஒரு எண்ணை வைத்து சூதாடும்போது ஆயிரத்தில்  3 பேருக்கு மட்டுமே பரிசுகள் விழுகிறது. பரிசுகள் கிடைக்காதவர்கள் அந்த வெறுப்பை தங்கள் கைக்காசை வைத்து குடித்து விட்டு வீட்டுக்கு சென்று மனைவி, பிள்ளைகளிடம் தகராறில் ஈடுபடுகின்றனர்.

மேலும், மறுநாள் காட்டன் சூதாட்டத்துக்கு  மனைவிகள் கூலி வேலை செய்து குடும்ப செலவிற்காக வைத்துள்ள பணத்தை கேட்டு துன்புறுத்துகின்றனர். இது குடும்ப உறவை சிதைத்து சின்னாபின்ன மாக்குகிறது. இதுபோல் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் காட்டன் சூதாட்டத்தால் மனைவி தாலி, வீட்டில் உள்ள பொருட்களை இழப்பதுடன் அதிக வட்டிக்கு கடன் வாங்குதல் போன்ற நிலைக்கு இறங்குகின்றனர். இதனால் ஆரணி பகுதியில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். காட்டன் சூதாட்டத்தில் சிக்கியவர்கள் வேலைக்கு சென்றாலும் இல்லையென்றாலும் காட்டன் எழுதியே ஆக வேண்டும் என்பதற்காக பைக் திருட்டு, கொள்ளை, கொலை சம்பவங்களில் இறங்கிவிடுகின்றனர். இவ்வாறு ஆரணியில் கொடிக்கட்டி பறக்கும் காட்டன் சூதாட்டத்தில் லட்சங்களில் மாமூல் கிடைப்பதால் கண்டுகொள்ளாமல் காவல்துறையும் குறிப்பாக உள்ளூர் மூணு ஸ்டார் காக்கி அதிகாரியும் கைகட்டி வேடிக்கை பார்ப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஆரணியில் காட்டன், மூணு நம்பர் சீட்டு, ரெண்டு  நம்பர் சீட்டுகள் அதிகளவில் ஆடப்படுகிறது. இவ்வாறு சூதாட்ட களத்தில் உள்ளவர்கள் மீது  காவல்துறையினர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காரணம் இவர்கள் அனைவரும் இணைந்து ஆரணியில் உயர்பதவியில் உள்ள அதிகாரிக்கு மாதாமாதம் லட்சக்கணக்கில் மாமூல் கொடுத்து விடுகிறார்களாம்.

இது ஒருபுறம் என்றால், ஆரணி சுற்றுப்புற பகுதிகளில் மணல் திருட்டு, கஞ்சா விற்பனை, விபச்சாரம் போன்ற சமூக விரோத செயல்களும் தடையின்றி நடக்கிறதாம். இவர்கள் மட்டுமே அதிகாரிக்கு மாதம் 7 லட்சம் முதல் 10 லட்சம் வரை மாமூலாக தருகிறார்களாம். அவ்வாறு மாமூல் கொடுக்காத மணல் மாபியா, விபச்சாரம், காட்டன், மூணு நம்பர் சீட்டு, ரெண்டு நம்பர் சீட்டு சூதாட்ட கும்பலிடம், ஆரணி நகர குற்றப்பிரிவில் உள்ளவர் எப்படியாவது வசூல்வேட்டையை முடித்து உயர்அதிகாரிகளிடம் ஒப்படைத்து நல்ல பெயர் வாங்கி விடுகிறாராம். இதற்காக அவருக்கும் பர்சன்டேஜ் ஒதுக்கப்படுகிறதாம். அவரின் இந்த நடவடிக்கையால் கீழ்நிலை அதிகாரிகள் மேற்கண்ட சமூக விரோதிகளை கண்டுகொள்வதே இல்லையாம். காவல்துறை, சமூக விரோதிகளின் இந்த கூட்டணியால் தங்கள் குடும்பங்கள் கடைத்தேற வழியே இல்லை என்று வேதனையில் ஏழை குடும்பங்கள் தத்தளித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இனியாவது மாவட்ட நிர்வாகமும், காவல் நிர்வாகமும் இதுபோன்ற சமூக விரோதிகளை தயவு தாட்சண்யமின்றி ஒடுக்கும் காவல் அதிகாரிகளை பணியில் நியமித்து ஆரணியை சட்டம் ஒழுங்குக்கு முன்னுதாரணமாக விளங்கும் நகரமாக மாற்ற வேண்டும் என்றும் அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஓய்வுபெற்றதும் தொழிலதிபரான போலீஸ் அதிகாரி

ஆரணி நகர காவல் நிலையத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு எஸ்பிசிஐடியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற 2 ஸ்டார் போலீஸ் அதிகாரி தான் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் காட்டன், மூணு சீட்டு சூதாட்டம் நடத்தும் நிறுவன தலைவராக செயல்பட்டு வருகிறாராம். குடும்பத்துடன் ஆரணியிலேயே செட்டிலாகிவிட்ட இவர், ஆரணி நகர காவல் நிலையத்தில் 25 ஆண்டுகளாக எங்கும் செல்லாமல் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.  இவர் ஆரணியிலேயே  நீண்டநாள் பணியாற்றியதால், காவல்துறை அதிகாரிகள் அனைவரையும் கைக்குள் வைத்துக்கொண்டு தன்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்ற தைரியத்தில் சூதாட்ட கிளப்புகளுடன், காட்டன், மூணு, ரெண்டு சீட்டு சூதாட்டம் நடத்தி வருகிறார். அதேநேரத்தில் இந்த சமூக விரோத தொழிலை செய்யும் இவர் வெளியில் தொழிலதிபர் என்ற பட்டப்பெயருடன் வலம் வருகிறாராம். அவர் மட்டுமின்றி, அவருடைய மகனும் இத்தொழிலில் கோலோச்சுகிறாராம். அதேபோல்  ஆரணியில் ஆளுங்கட்சியின் முக்கிய பொறுப்பில் உள்ளவரும், வியாபாரியுமான ஒருவரும் இந்த தொழிலில் கொடிக்கட்டி பறக்கிறாராம்.  

திருவண்ணாமலை மாவட்ட எஸ்பி பேட்டி

ஆரணியில் நடைபெறும் காட்டன் சூதாட்டம் குறித்து எஸ்பி சிபிசக்கரவர்த்தி கூறுகையில், ‘காட்டன், மூணு நம்பர், ரெண்டு நம்பர் சூதாட்ட ஆசாமிகளை கைது செய்ய இரண்டு நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலையில் தனிப்படை அமைத்து காட்டன் சூதாட்ட ஆசாமிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல் இதுபற்றி எந்ெதந்த பகுதிகளில் இருந்து புகார் வருகிறதோ, அந்த பகுதிகளுக்கு மட்டும் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றார்.  தொடர்ந்து, இதில் எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்? என்று நாம் கேட்டதற்கு அவர், ‘இதுவரை எவ்வளவு பேரை கைது செய்துள்ளோம் என்ற விவரம் அலுவலகத்தில்தான் உள்ளது’ என்றார். தொடர்ந்து அவர் கூறுகையில், ‘காட்டன் சூதாட்ட ஆசாமிகளை கண்டுபிடித்து விரைவில் கைது செய்யப்படுவர். அப்படியே இவர்கள் கைது செய்யப்பட்டாலும், உடனே ஜாமீனில் வந்து விடுவதுடன், தங்கள் தொழிலை தொடர்கின்றனர். அதேபோல் காட்டன் சூதாட்ட கும்பலின் ஒட்டுமொத்த தலைவன் யார்? என்று  தெரியாமல் நீண்ட நாட்களாக தேடி வருகிறோம். அதுபற்றி யாருக்காவது தகவல் தெரிந்தால் உடனே என்னை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால் அவர்களை கைது செய்ய முடியும். அத்துடன் காட்டன் சூதாட்டத்தை ஒழிக்க உதவியாக இருக்கும். அதேபோல் காட்டன் சீட்டு விற்பனையை முழுவதுமாக தடைசெய்ய கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பே  தனிப்படைகளை அமைத்து தேடி வருகிறோம். இன்னும் இரண்டு நாட்களில் காட்டன் விற்பனை முழுவதுமாக தடைசெய்யப்படும் என்று நம்புகிறேன்’ என்றார். அதற்கேற்ப நாம் எஸ்பியை தொடர்பு கொண்டு பேசியதும், ஆரணி மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த 2 நாட்களாக தனிப்படையினர் காட்டன் சூதாட்ட ஆசாமிகளை குறி வைத்து தேடி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Women ,husbands , Trapped in gambling, Women crying ,tears by husbands
× RELATED பள்ளிகொண்டா அருகே முந்தி செல்ல முயன்ற...