×

பெங்களூரு எடுத்துச் செல்லப்படும் பெருமாள் சிலை 10 கி.மீ. பயணித்து மீண்டும் நின்றது

செங்கம்: வந்தவாசியில் இருந்து பெங்களூரு கொண்டு செல்லப்படும் பிரமாண்ட பெருமாள் சிலை, நேற்று 10 கி.மீ. பயணித்து டயர்கள் பஞ்சரானதால் மீண்டும் நின்றது. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த கொரக்கோட்டை கிராமத்தில் இருந்து, ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 300 டன் எடையுள்ள பெருமாள் சிலை, பெங்களூரு ஈஜிபுரா எனும் இடத்தில் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.  பிரமாண்ட பெருமாள் சிலை 240 டயர்கள் கொண்ட ராட்சத லாரியில் கடந்த மாதம் 7ம் தேதி புறப்பட்டது.  திருவண்ணாமலை வழியாக கடந்த 8ம் தேதி இரவு செங்கம் அருகே உள்ள அம்மாபாளையம் கிராமத்தை அடைந்தது. மறுநாள் புறப்பட தயாரானபோது 15 டயர்கள் திடீரென பஞ்சரானது. இதற்கான மாற்று டயர்கள் அகமதாபாத்தில் இருந்து கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதற்கிடையில், கடந்த 6 நாட்களுக்கும் மேலாக அம்மாபாளையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெருமாள் சிலையை மக்கள் தரிசனம் செய்து வந்தனர்.
இந்நிலையில், பழுதடைந்த 15 டயர்களும் சீரமைக்கப்பட்டு அவை லாரியில் பொருத்தப்பட்டு நேற்று மதியம் 12 மணியளவில் பெருமாள் சிலை மீண்டும் புறப்பட்டது. ஆனால், சில நிமிடங்களில் லாரியின் முக்கிய பாகங்களில் சிக்கல் ஏற்பட்டது. இதனை ஊழியர்கள் சீரமைத்து பயணத்தை தொடங்கினர்.

அதன்படி, சுமார் 10 கி.மீ. தூரம் சென்ற நிலையில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் லாரியின் பாகங்களில் அடிக்கடி பிரச்னைகள் ஏற்பட்டது. மேலும், லாரியின் டயர்களும் அடுத்தடுத்து பஞ்சராக தொடங்கியதால் செங்கம் அடுத்த மண்மலை கிராமத்தில் பெருமாள் சிலை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இதனால், புதுச்சேரி- பெங்களுரு தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விரைந்து போக்குவரத்தை சீர் செய்தனர். இதற்கிடையில், அகமதாபாத்தில் இருந்து சென்னை வழியாக மாற்று டயர்கள் மண்மலை கிராமத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.  இந்த டயர்களை லாரியில் பொருத்துவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அது இன்று முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின் பெருமாள் சிலையின் பெங்களூரு பயணம் தொடரும் என தெரிகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Bangalore , Lord Perumal Statue, Tire Panchar, Bengaluru
× RELATED கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டவர்கள் ஆஜர்..!!