×

ரியல் எஸ்டேட் அதிபரை கடத்தி ரூ.26.20 லட்சம் கொள்ளையடித்த இருவர் கைது

வேலூர்: வேலூரில் வீட்டுமனைகள் விற்பனைக்கு உள்ளதாக கூறி சென்னை ரியல் எஸ்டேட் அதிபரை கடத்தி ₹26.20 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் இந்து மக்கள் கட்சி பிரமுகர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் வில்சன்விமல்(45), ரியல் எஸ்ேடட் உரிமையாளர். இவருக்கு கடந்த வாரம் வேலூரில் இருந்து விக்னேஷ் என்பவர் போனில் தொடர்பு கொண்டு வேலூரில் தேசிய நெடுஞ்சாலையோரம் வீட்டுமனைகள் விற்பனைக்கு உள்ளது. குறைந்த விலைக்கு தருகிறோம். அட்வான்ஸ் தொகையாக ₹5 லட்சம் வேண்டும் என்றாராம். அதன்படி வில்சன்விமல் ₹5 லட்சத்துடன் கடந்த வாரம் வேலூருக்கு காரில் வந்துள்ளார். அப்போது விக்னேஷ், வில்சன்விமல் காரிலேயே சென்று வேலூரில் உள்ள இடங்களை காட்டியுள்ளார். மேலும் குடியாத்தம் பகுதியில் இதைவிட மிக குறைந்த விலையில் வீட்டுமனைகள் உள்ளது. அதையும் காண்பிக்கிறேன் என்று கூறி அழைத்துச்சென்றுள்ளார்.
குடியாத்தம் சென்றபோது விக்னேஷின் கூட்டாளி தமிழ்செல்வன் உள்பட 7 பேர், வில்சன்விமலை திடீரென சரமாரியாக தாக்கி கை, கால், கண்களை கட்டி, அதேகாரில் ஈரோட்டிற்கு கடத்திச்சென்றுள்ளனர். அங்குள்ள ஒரு லாட்ஜில் அடைத்து மேலும் தாக்கினர். அவரது வங்கி கணக்கு எண், ஏடிஎம் நம்பர் உள்ளிட்டவற்றை பெற்று அதில் இருந்து ₹26.20 லட்சத்தை கொள்ளையடித்துள்ளனர். மேலும் அவரிடம் பத்திரத்திலும் கையெழுத்து வாங்கியுள்ளனர். பின்னர் அவர்கள் 8 பேரும் தப்பி சென்றனர்.

இதுகுறித்து வில்சன்விமல் வேலூர் எஸ்பி அலுவலகத்தில் கடந்த வாரம் புகார் அளித்தார். எஸ்பி பிரவேஷ்குமார் உத்தரவின்பேரில் இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் கோவை, கரூர் பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது கரூரில் பதுங்கியிருந்த வெண்ணைமலையை சேர்ந்த விக்னேஷ்(32) என்கின்ற விஷ்வாவை நேற்று கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரத்தை சேர்ந்த இந்து மக்கள் கட்சி பிரமுகர் சீனிவாசன்(40) என்பவரையும் கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘ரியல் எஸ்டேட் தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. அதன்அடிப்படையில் கடத்தி பணம் பறித்ததாக தெரிய வந்துள்ளது. தற்போது 2 பேரை கைது செய்துள்ளோம். மேலும் சிலரை தேடி வருகிறோம்’ என்றனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : persons ,robbery , Housemaid sales, robbery, two arrested
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...