×

விலைவாசி உச்சத்தை தொட்டாலும் பொங்கல் கொண்டாட குவியும் மக்கள்

ராமநாதபுரம்: பொங்கல் பண்டிகை கொண்டாட பொதுமக்கள் சென்றதால், ரயில், பஸ்களில் கூட்டம் அதிகளவில் இருந்தது. விலைவாசி அதிகம் இருந்தாலும் ராமநாதபுரம் நகர் பகுதியில் கரும்பு, மஞ்சள், பனங்கிழங்கு விற்பனைக்காக குவிந்துள்ளது. பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். தை மாதம் அறுவடை செய்யும் நெல்லின் புத்தரிசியை புது பானையில் பொங்கல் வைப்பார்கள். பின்னர் சூரியனுக்கு படைத்து உண்டு மகிழ்வதே பொங்கல் பண்டிகையின் சிறப்பாகும். நாளை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ராமநாதபுரம் நகர் களைகட்டியது.

சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து மக்கள் காலை முதலே வந்து குவிந்தனர். கரும்பு, பனங்கிழங்கு, மஞ்சள் கொத்து என பண்டிகை பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று ஞாயிற்று கிழமை விடுமுறை நாள் என்பதால் காலை முதலே அரண்மனை, பஜார், சாலை தெரு, கேணிக்கரை போன்ற பகுதிகளில் வழி நெடுங்கிலும் பொங்கலுக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்தனர். இதனை வாங்க கூட்டம் அலைமோதியது. பொங்கல் திருநாள் நாளை கொண்டாடுகின்ற வேளையில் முதல்நாள் பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதற்கேற்ப போகிப் பண்டிகை நாளில், பழைய பொருட்களை தீவைத்து எரிப்பது வழக்கம். பல கிராமங்களில் பொது இடத்தில் பழைய பொருட்களை கொட்டி எரிக்கும் போது மேளம் கொட்டி ஆரவாரம் செய்து சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்பார்கள். இதற்காக போகி மேளம் என விற்பனை செய்கின்றனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழிபாட்டின் போது புதிதாய் விளைந்த நெல்லை அரிசியாக்கி புதுப்பானையில் பொங்கல் வைத்து மஞ்சள் கொத்து, தித்திக்கும் கரும்பு, பனங்கிழங்கு, காய்கறிகள், பழங்கள், கிழங்கு, வகைகள் என அனைத்தையும் வைத்து பூஜை செய்வது வழக்கம். பொங்கலுக்காக ராமநாதபுரம் நகரில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாகவே கரும்பு கட்டுகளை லாரிகளில் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். ஒரு ஜோடி கரும்பு 100 முதல் 150 ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர். கரும்பு கட்டு 500 முதல் ரூ.600 வரை விற்பனையாகிறது. மஞ்சள் கொத்து சிறியது 20 ரூபாய் முதல் 40 வரை என விற்கப்படுகிறது. பொங்கல் தினத்தன்று வாசலில் பெரிய அளவில் கோலம் போடுவதற்காக கலர் கலரான கோலப்பொடிகள் பாக்கெட்டுகளில் விற்பனை செய்து வருகின்றனர்.

பொங்கல் பண்டிகையின் போது கிராமங்களில் பொங்கல் வைக்க முக்கிய தேவையான மண்பானை விற்பனை செய்யப்படுகிறது. பொங்கலன்று தேவைப்படும் பொருள்களான வெல்லம். ஏலக்காய், முந்திரி பருப்பு நெய் போன்றவைகளை வாங்க மளிகை கடைகளில் மக்கள் நிற்கின்றனர். பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. போகி, பொங்கல் பண்டிகையை யொட்டி விடுமுறை தினம் என்பதால் வெளியூர் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள், சென்னை போன்ற நகரங்களில் வேலை பார்ப்பவர்கள் சொந்த ஊருக்கு வருவதால், மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் அனைத்து பஸ் நிறுத்தம் வெளியூர் செல்லும் பஸ் நிலையம், ரயில் நிலையங்களில் கூட்டம் அலை மோதுகிறது. எங்கு பார்த்தாலும் தலையாக தெரிகிறது. அரசு போக்குவரத்து கழகம் போதிய சிறப்பு பஸ்களை இயக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ramanathapuram, Pongal, people
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...