×

பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் புறப்பட்ட பனியன் தொழிலாளர்கள்

திருப்பூர்: பொங்கல் பண்டிகையை கொண்டாட பனியன் தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்று வருகின்றனர்.  தமிழர்களின் பாரம்பரிய திருநாளான பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதற்காக சொந்த ஊர்களுக்கு மக்கள் செல்வதால் பஸ், ரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது. தென் மாவட்டங்களான மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர். சிலர் மேற்கல்வியும் படித்து வருகின்றனர்.

இவர்கள் பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் உள்ளிட்ட முக்கிய பண்டிகை நாட்களில் தங்களது சொந்த ஊருக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். நாளை பொங்கல் திருநாள் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக, 60 நாட்களுக்கு முன்னரே பஸ், ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்தனர். இதனால், ரயில் மற்றும் பஸ்களில் முன்பதிவு தொடங்கிய அன்றே டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்தது. தென்மாவட்டம் மற்றும் சென்னை செல்லும் ஒவ்வொரு ரயில்களிலும் 200க்கும் மேற்பட்டோர் காத்திருப்போர் பட்டியலில் இருந்து வருகின்றனர். இதனால், ரயில் நிலையங்களிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது.
 
பொங்கல் திருநாளை முன்னிட்டு நேற்று முதல் தொடர்ச்சியாக பள்ளி, கல்லூரிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. பொங்கலுக்கு எப்படியாவது ஊர்களுக்கு சென்று விட வேண்டும் என கடும் நெரிசலையும் பொருட்படுத்தாமல் பஸ், ரயில்களில் மக்கள் பயணம் செய்து வருகின்றனர். இதனால் பஸ், ரயில் நிலையங்களில் வழக்கத்தை விட இரண்டு மடங்கு கூட்டம்  அலைமோதுகிறது. ஏராளமான பயணிகள் ரயில் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்து வருகின்றனர். பொங்கல் திருநாளை முன்னிட்டு திருப்பூரில் இருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கோவை சார்பில் 550 பஸ்கள் இயக்கப்படுகின்றது. இதனால், திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் பொதுமக்கள் வரிசையாக சென்று பஸ் ஏறுவதற்கும், கூட்ட நெரிசலையும் கட்டுப்படுத்தும் விதமாகவும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அதிகப்படியான போலீசார் பாதுகாப்புக்கு போடப்பட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Housewife ,home ,festival ,Pongal , Tirupur, Pongal Festival, banyan workers
× RELATED உள்துறை அமைச்சர் பதவியை நமச்சிவாயம்...