×

ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு ரூ.2 லட்சத்துக்கான காப்பீட்டு திட்டம் அறிமுகம்

மதுரை: ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு ரூ.2 லட்சத்துக்கான காப்பீட்டு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பொங்கலன்று அவனியாபுரத்திலும், மாட்டுப் பொங்கலன்று பாலமேட்டிலும், மறுநாள் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையான நாளை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. இதற்காக கடந்த 2 வாரங்களாக காளைகள், வீரர்கள் பதிவு, வாடிவாசல் அமைக்கும் பணி, அடிப்படை வசதிகள், பாதுகாப்பு பணிகள் போன்றவற்றுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அவனியாபுரத்தில் நாளை காலை 8 மணிக்கு தொடங்கவுள்ள இப்போட்டியில் பங்கேற்க, 596 வீரர்கள் முன்பதிவு செய்துள்ளனர். 570 காளைகள் களம் காண்கின்றன. ஜல்லிக்கட்டு போட்டியை காண பொதுமக்களுக்கு கேலரி, தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மைதானத்தில் காளைகளுக்கும், வீரர்களுக்கும் காயம் ஏற்படாமல் இருக்க தென்னை நார் போடும் பணி நடந்து வருகிறது.

இவ்வளவு பாதுகாப்பு ஏற்படுகள் செய்யப்பட்டாலும், சில நேரங்களில் காளைகள் முட்டி, வீரர்கள் தூக்கி வீசியெறியப்படுவதால் மரணிக்கும் துர்சம்பவங்களும் நடப்பதுண்டு. அவ்வாறு இறக்கும் வீரர்களுக்கு, சில நேரங்களில் அரசு இழப்பீடு வழங்கும். இல்லையென்றால் எதுவும் கிடையாது. இந்நிலையில், முதன் முதலாக ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு காப்பீட்டு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மாடுபிடி வீரர்கள் ரூ.12 ப்ரிமீயம் செலுத்தி 2 லட்ச ரூபாய்க்கான ஒரு வருட காப்பீட்டை செய்துகொள்ளலாம். இதற்காக பதிவு செய்த இளைஞர்கள், அவரவர் பெயர் பதிவு செய்த ஊர்களில் டோக்கன், ஆதார் அட்டை, வங்கி பாஸ்புக் நகலுடன் சென்று காப்பீட்டு செய்து கொண்டனர். இந்த காப்பீட்டை பெற்றுவிட்டால், தமிழகத்தில் நடைபெறும் எந்தவொரு ஜல்லிக்கட்டு போட்டியிலும் பங்கேற்று துரதிஷ்டவசமாக மரணத்தை சந்திக்க நேர்ந்தால் மாடுபிடி வீரர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் செல்லும். எனவே இந்த திட்டத்துக்கு மாடுபிடி வீரர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Introduction , Jallikattu, Cow Battlers, Insurance Scheme, Avaniyapuram
× RELATED பெண்களின் உடல்நலத்திற்காக...