×

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு களைகட்டியது மதுரை கடை வீதிகள்

மதுரை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொருட்கள் வாங்க கடைவீதிகளில் குவிந்த மக்கள் கூட்டத்தால், மதுரையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  மதுரை உட்பட தென் மாவட்டங்களில் பொங்கல் பண்டிகைக்கான பொருட்கள் விற்பனை கடந்த 2 நாட்களாக களைகட்டியுள்ளது. போகி, பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என கொண்டாட மதுரையில் உள்ள மாசி வீதிகள், சிம்மக்கல், கீழமாசி வீதியில் உள்ள கடைத்தெருக்களில் கரும்புக்கட்டுகள், மஞ்சள் தூர்கள் விற்பனை அதிகரித்துள்ளது. கூரைப்பூ, பனங்கிழங்குகள், பச்சரிசி, பாசிப்பருப்பு, முந்திரி, ஏலக்காய், கிஸ்முஸ், மண்டைவெல்லம், நெய் என பொங்கல் பொருட்கள் விற்பனை எகிறியுள்ளன. மேலும் பொங்கலுக்கு என பாத்திரங்கள் மற்றும் மண் பனைகள் விற்பனையும் அதிகரித்துள்ளது.

மதுரை விளாச்சேரியைச் சேர்ந்த கணேசன் கூறும்போது, ‘பொங்கல் பண்டிகையை தொடர்ந்து ஜவுளி மற்றும் மாட்டுப்பொங்கலுக்கு தேவையான சலங்கைகள், கழுத்துகயிறு மற்றும் மூக்கணாங்கயிறு,  மணிகள், கழுத்துப்பட்டைகள், கொம்புகளுக்கு பூசும் கலர் பொடிகள் என அனைத்தும்  மதுரையில் மொத்தமாக கிடைக்கும், அதனால் நாங்கள் வருடம்தோறும் இங்கு வந்து பொருட்களை வாங்கி சென்று பொங்கலை சிறப்பாக கொண்டாடி வருகிறோம்’என்றார். பொங்கலை முன்னிட்டு நகரில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் அதிகமாக கூடியதால் கீழமாசி வீதி, தெற்குவாசல், மாசி வீதிகள் மற்றும் மக்கள் அதிகமாக கூடிய இடங்களில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கிராமங்களில் இருந்து அதிகமான மக்கள் நகரை நோக்கி வந்ததால் கோரிப்பாளையம், சிம்மக்கல், பெரியார், விளக்குத்தூண் போன்ற இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : streets ,shop ,Madurai , Pongal festival, Madurai, shop streets
× RELATED சென்னையில் நாளை திறந்த வெளி வேனில்...