×

கொடநாடு கொலை வழக்கில் கைதான சயன், மனோஜ் சென்னை அழைத்து வரப்பட்டனர்

டெல்லி: கொடநாடு கொலை வழக்கில் டெல்லியில் கைதான சயன், மனோஜ் சென்னை அழைத்து வரப்பட்டனர். கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சயன், தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேலிடம் அளித்துள்ள வீடியோ வாக்குமூலம், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொடநாடு சம்பவத்தின் பின்னணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக சயன் அந்த வீடியோவில் கூறியுள்ளார். ஆனால் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அரசியலில் தங்களை நேரடியாக எதிர்கொள்ள முடியாமல் தவறான தகவலை பரப்புவதாகவும், அதன் பின்புலத்தில் இருப்பவர்கள் விரைவில் கண்டறியப்படுவர் என்றும் கூறினார். பின்னர் அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகி அளித்த புகாரின் பேரில், மேத்யூ சாமுவேல் உட்பட வீடியோவில் பேசிய அனைவர் மீதும் சென்னை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அத்துடன் மேத்யூ சாமுவேலிடம் விசாரணை நடத்துவதற்காக போலீசார் நேற்று டெல்லி விரைந்தனர்.  இதனையடுத்து கொடநாடு விவகாரம் தொடர்பாக சயன், மனோஜ் ஆகியோரை சென்னையில் இருந்து டெல்லி சென்ற தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.  இந்நிலையில் டெல்லியில் கைது செய்யப்பட்ட சயன், மனோஜ் ஆகியோரை சென்னை தனிப்படை போலீசார் விமானம் மூலம் இன்று அதிகாலை சென்னை அழைத்து வந்தனர். பின்னர் நீதிபதி முன்னர் ஆஜர் படுத்துவதற்காக போலீஸ் வாகனம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர். சர்ச்சை வீடியோ வெளியிட்ட தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : arrest ,Kodanad ,Manoj Saina , Kodanad murder, Scion, Manoj Mathew Samuel,
× RELATED நீலகிரி வனப்பகுதியில் துப்பாக்கி...