×

செஞ்சியில் சைவ முனிவர்கள் வாழ்ந்த 12ம் நூற்றாண்டை சேர்ந்த குகைகள் கண்டுபிடிப்பு

செஞ்சி: செஞ்சியில் சைவ முனிவர்கள் வாழ்ந்த 12ம் நூற்றாண்டு குகைகள் கண்டுபிடிக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கோட்டையில் சக்கிலி துர்கம் என்று மக்களால் அழைக்கப்படும் சந்திரகிரியின் வட சரிவில் வேங்கடரமணர் ஆலயத்தின் தென்புற மலையில் தொல்லியல் சார்ந்த கள ஆய்வை செஞ்சிக்கோட்டை  தொல்லியல் விழிப்புணர்வு மன்றத்தினர் மேற்கொண்டனர். அப்போது இயற்கையாக அமைந்த இரண்டு குகைகளை கண்டுபிடித்தனர். அவை தரைப் பகுதியிலிருந்து சுமார் 100 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளன.அவ்விரண்டு குகைகளும் அருகருகே அமைந்துள்ளன.

முதல் குகை 6 மீட்டர் நீளமும், 2 மீட்டர் அகலமும், 3.75 மீட்டர் உயரமும் கொண்டது. இரண்டாவது குகை 7.50 மீட்டர் நீளமும், 2.75 மீட்டர் அகலமும், 3 மீட்டர் உயரமும்  கொண்டது. இவ்விரண்டு குகைகளின் உள்பகுதியில் மேற்குப்பக்க சுவர் போன்ற செங்குத்துப் பாறையில் ஒரு காளையின் மேது சிவன் பார்வதியுடன் முருகன் அமர்ந்திருக்கும் காட்சி, சிவலிங்கம், நந்தி, திரிசூலம், சூரியன், சந்திரன்  போன்றவை கோட்டுருவமாகவும், புடைப்புருவமாகவும் செதுக்கப்பட்டுள்ளன. இரண்டு குகைப்பகுதிகளின் தரைப்பகுதியில் மண் மேடை அமைக்கப்பட்டுள்ளது.அவ்விரண்டு குகைகளையும் ஆய்வுக்குட்படுத்துகையில் அவ்விரண்டு குகைகளிலும் 12 அல்லது 13ம் நூற்றாண்டில் சைவ முனிவர்கள் தவம் இயற்றி வாழ்ந்திருக்கலாம் என்றும், காலப்போக்கில் அவர்கள் அங்கேயே ஜீவ  சாமாதியாகியிருக்கலாம் என்று  கூறப்படுகிறது.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : caves ,Saini Sage Sages , Saini, Saivite saints, 12th century, discovery
× RELATED தாய்லாந்திலிருந்து விமானம் மூலம்...