×

அறநிலையத்துறையில் 5 ஆயிரம் புகார் இருந்தும் ஒன்றின் மீது கூட விசாரணை நடக்கவில்லை: உயரதிகாரிகள் அலட்சியத்தால் கொள்ளைபோகும் கோயில் சொத்து

சென்னை: இணையதளத்தின் மூலம் புகார் பெறும் புதிய திட்டத்தின் படி 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளது. அதில் ஒன்றின் மீது கூட அறநிலையத்துறை அதிகாரிகள் விசாரிக்கவில்லை என்ற தகவல் தற்போது  தெரியவந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில 44,190 கோயில்கள் உள்ளன. இதில், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் அடக்கம். இந்த கோயில்களில் கடை, நிலங்களை ஏலம் விடுவது, திருப்பணி, சிலை, நகை செய்ததில்  முறைகேடு தொடர்பாக பல்வேறு புகார்களை அறநிலையத்துறை கமிஷனரிடம் மனுவாக அளித்து வந்தனர். அவ்வாறு தரப்படும் புகார்கள் அந்தெந்த மண்டல இணை ஆணையர்கள் விசாரிப்பதற்காக அனுப்பி வைக்கப்படுகிறது.  ஆனால், மண்டல இணை ஆணையர்கள் சம்பந்தப்பட்ட புகார்கள் மீது எந்த வித விசாரணையும் நடத்துவதில்லை. இது தொடர்பாக அறநிலையத்துறை கமிஷனருக்கு ஏராளமான புகார்கள் வந்தது. இதையடுத்து, அறநிலையத்துறை  தொடர்பான புகார்களை இணையதளத்தில் அளிக்கும் வகையில் புதிய செயலி ஒன்றை கடந்த சில தினங்களுக்கு முன்பு அப்போதைய கமிஷனர் டி.கே.ராமச்சந்திரன் அறிமுகப்படுத்தினார்.

இந்த புகார் மனு விண்ணப்பித்தவுடன் சம்பந்தப்பட்ட நபருக்கு எஸ்எம்எஸ் அனுப்பபடுகிறது. மேலும், அந்த புகார் மீது ஒரு மாதத்திற்குள் விசாரணை நடத்தி முடிக்கப்படும் என்றும், இது தொடர்பான தகவல்கள் பொதுமக்களுக்கு  தெரிவிக்கப்படும் என்று அறநிலையத்துறை தெரிவித்தது. இந்த புகார் மனுக்கள் மீது விசாரிக்க இணை ஆணையர்கள் ஹரிபிரியா, தனபால் உள்ளிட்ட அதிகாரிகள் அடங்கிய குழு அமைத்து அப்போதைய கமிஷனர் உத்தரவிட்டார்.  ஆனால்,  அந்த குழு அமைத்ததோடு, அவை செயல்படுகிறதா என்று கண்காணிக்க அறநிலையத்துறை தலைமை தவறி விட்டது. இதனால், தற்போது வரை தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளது.  ஆனால், அந்த புகார்களில் ஒரு மனு மீது எந்த வித விசாரணை நடத்தப்படவில்லை. இதன் மூலம், அறநிலையத்துறை கமிஷனர் கொண்டு வந்த இணையதளம் மூலம் புகார் திட்டம் கைவிடப்பட்டு இருப்பது பொதுமக்கள்  மத்தியில் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. மேலும் கோடிக்கணக்கிலான நகை மற்றும் கோயில் சொத்துக்களை நூதனமாக தனியார் கொள்ளையடிப்பதற்கு அரசு அதிகாரிகளே உடந்தையாக இருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு  எழுந்துள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : charity department , Endowment,5000 complaints, investigation,temple property
× RELATED திருச்செந்தூர் கோயிலுக்கு...