×

வனச்சட்டத்தை அப்பட்டமாக மீறி தேக்கடி ஏரியில் இருந்து லாரியில் மண் அள்ளும் கேரள வனத்துறை: கண்டுகொள்ளாத தமிழக அதிகாரிகளுக்கு கண்டனம்

கூடலூர்: வனச்சட்டத்தை மீறி, பெரியாறு புலிகள் சரணாலய பகுதியான தேக்கடி ஏரிப்பகுதியிலிருந்து கார் பார்க்கிங் பணிக்கு கேரள வனத்துறை அத்துமீறி மண் எடுப்பதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் கண்டனம்  தெரிவித்துள்ளனர்.பெரியாறு அணையின் நீர்தேக்க பரப்பான ஆனவச்சாலில் கேரள வனத்துறை கார் பார்க்கிங் அமைத்து வருகிறது. இதற்காக பெரியாறு புலிகள் சரணாலயப்பகுதிக்கு உட்பட்ட தேக்கடி ஏரி கரைப்பகுதியில் இருந்து ஜேசிபி  இயந்திரத்தை பயன்படுத்தி மண் எடுத்து வருகின்றனர்.
புலிகள் சரணாலயப்பகுதியான தேக்கடி வனப்பகுதியில், தனியார் வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் இயந்திரங்கள் பயன்படுத்தி பணிகள் செய்ய வனச்சட்ட தடை உள்ளது. ஆனால் இதை மீறி, வனவிலங்கு இயற்கை வாழ்வுக்கு இடையூறு ஏற்படும் வகையில் கடந்த இரண்டு நாட்களாக கேரள வனத்துறையினர், நூற்றுக்கணக்கான லோடு மண்ணை பத்துக்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகளில் எடுத்துச்  சென்றனர்.

பெரியாறு அணைப்பகுதியில் தமிழக பொதுப்பணித்துறையினர்  எந்த ஒரு பணி செய்தாலும், வனச்சட்டத்தை காரணம் காட்டி அந்த பணிகளை கேரள வனத்துறை நிறுத்தி வருகிறது. ஆனால், கேரள வனத்துறை, வனச்சட்டத்தை  மீறி செய்யும் இந்த பணிகளை  தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. அதிகாரிகளின் இந்த மெத்தனப்போக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.இதுகுறித்து தமிழக அனைத்து விவசாய சங்க ஒருங்கிணைப்புக்குழு மாவட்டச் செயலாளர் திருப்பதிவாசகன் கூறுகையில், ``புலிகள் சரணாலயப்பகுதியான தேக்கடி வனப்பகுதியில்  இயந்திரங்களை பயன்படுத்தி மண் எடுப்பது  1978 வனம் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு சட்டப்படி குற்றம். பெரியாறு அணைப்பகுதியில் தமிழகம் பணி செய்யும்போது வனச்சட்டப்படி அனுமதி இல்லை என சொல்லும் கேரள வனத்துறையினர், தற்போது அதே சட்டத்தை  மீறி செய்யும் இந்த பணிகளை தமிழக அதிகாரிகள் ஏன் கண்டுகொள்ளவில்லை? கேரள வனத்துறையின் அடாவடி குறித்து தமிழக பொதுப்பணித்துறையினர் தமிழக அரசுக்கு தெரியப்படுத்தி பணிகளை நிறுத்தவேண்டும்,’’ என்று  தெரிவித்தார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Forest Department of Kerala ,forest lawmaker ,forest ,lake , Forest Act,lorry, Kerala Forest, Tamil officials
× RELATED வாகனத்தில் இருந்தபடி கெஞ்சும்...